Published:Updated:

ஊழிக்காலம் - 21: காலநிலை மாற்றத்தைத் தடுக்க கற்கால வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமா?

தங்கள் அசௌகரியத்தை மறைத்துக்கொள்ள பெருநிறுவனங்கள் வைக்கும் குற்றச்சாட்டுதான் "இவர்கள் கற்காலத்துக்குத் திரும்பச் சொல்கிறார்கள்" என்ற அறைகூவல். இப்போது இருக்கிற சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்றே கிடையாது என்று அவை அழுத்தமாக அறிவிக்கின்றன.

பொதுவாக சூழலியலாளர்கள் தீர்வுகளைப் பற்றிப் பேசும்போது, "நீங்க சொல்றதைப் பார்த்தா எதுவுமே பண்ண முடியாது போல இருக்கே... எல்லாரும் கற்காலத்துக்குத் திரும்பிடவேண்டியதுதானா?" என்ற கேள்வி எழும். நுகர்வு சார்ந்த சூழலியல் தீர்வுகளுக்கு இப்படி ஒரு எதிர்வினை கட்டாயம் வந்துவிடுகிறது.

இந்தக் குற்றச்சாட்டின் வரலாறு மிகப்பெரியது. வால்போல நீண்டு அது 1990களின் பிற்பகுதி வரை போகிறது. முதன்முதலில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மை கண்டுபிடிக்கப்பட்டு, புதைபடிவ எரிபொருட்களை உடனடியாகக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்தபோது, வணிகர்களும் உலகநாடுகளும் இதைத்தான் பதிலாகத் தந்தன. இன்னும் மோசமான எதிர்வினையாக, "வறுமையில் வாடும் ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கை முறையைப் போய் நம்மைப் போன்ற பணக்கார நாடுகளுக்குத் தீர்வாக வைக்கிறீர்களே!" என்று கொந்தளித்தன மேலை நாடுகள்.

கற்கால வாழ்க்கை
கற்கால வாழ்க்கை

இந்த வரிகளில் இருக்கும் இனவாதத்தை ஒதுக்கிவிட்டு இதை கவனிக்கலாம். நுகர்வைக் குறைத்துக்கொள்வது, சந்தையை இறுக்கிப் பிடிப்பது போன்றவை எல்லாம் ஏன் கற்காலத்தோடு ஒப்பிட்டப்படுகின்றன? புதிய தாராளமயக் கொள்கையால் (Neoliberal Economic Policies) கட்டமைக்கப்பட்ட சந்தையின் அதிகாரம் அந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் ஊறிப்போயிருக்கிறது. சந்தையோடு நம் வாழ்வு பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதால் வரும் எதிர்வினை இது. இது வணிகர்களின் மனநிலை, இதை அரசுகளும் எதிரொலிப்பதால், நமக்கும் அது சரியென்றே தோன்றுகிறது. "சூழலியல் பேசுபவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்" என்ற கருத்தும் அங்கிருந்துதான் வருகிறது.

உண்மையில் வளர்ச்சி என்பது என்ன என்பதையும் சந்தையே தீர்மானிக்கிறது. அதைத் தவிர எல்லாவற்றையும் புறந்தள்ளுகிறது. சந்தைப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை 'வளர்ச்சி' என்பது தாரக மந்திரமாகவும் அடையவேண்டிய ஒற்றை இலக்காகவும் இருப்பதால் காலநிலைத் தீர்வுகள் எல்லாவற்றையும் அது நிராகரிக்கிறது.

தனியார்மயமாக்கல், வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளில் அரசின் குறுக்கிடல்களைக் குறைத்துக்கொண்டு சுதந்திரம் அளிப்பது, மானியங்கள், குறைந்த வரி போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட புதிய தாராளமயக் கொள்கை 1979 முதல் 1989 வரை உள்ள காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரவியது. அடிப்படைக் கட்டமைப்பு, ஆற்றல், வீட்டுவசதி உள்ளிட்ட முக்கிய அரசுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்த்தன மேலை நாடுகள். ஆற்றல் துறையில் புதைபடிவ எரிபொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டு, மானியங்கள் அதிகரிக்கப்பட்டன. எண்ணெய், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் உருவானது.

"வளர்ச்சி என்ற ஒற்றை நோக்கத்தோடு இந்தக் கருத்து 50 ஆண்டுகளுக்கு நம்மிடையே பரப்பப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு முழுமையான அரசியல் தத்துவமாக, ஒரு தார்பாலினைப் போல இது உலகம் முழுவதையும் தன் குடைக்குக் கீழ் கொண்டு வந்தது!"
என்று எழுதுகிறார் டேவிட்-வாலஸ்-வெல்ஸ்.
காற்று மாசு
காற்று மாசு

காலநிலைத் தீர்வுகள் இப்போது அந்தப் பொருளாதாரத்தைக் கேள்வி கேட்கின்றன. மாசுபடுத்தும் நிறுவனங்களுக்குத் தடை விதிப்பது, மாற்று எரிபொருளுக்கு மானியங்கள் தருவது, உமிழ்வுகளின் அளவு அதிகரிக்கும்போது பெரும் தொகையை அபராதமாகக் கோருவது, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்ககான புதிய வரி, தனியார்மயமாக்கலை நிராகரிப்பது என்று பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைத் தீர்வுகளாக முன்வைக்கிறார்கள் காலநிலை வல்லுநர்கள்.

அது பெருநிறுவனங்களுக்குக் கடும் அசௌகரியத்தை உருவாக்குகிறது. கடுமையான லாபி மூலமாக அவை காலநிலை மாற்றத்தை மறுதலிக்க முயற்சி செய்கின்றன. பசுமைக் கண்துடைப்பாக, சிறு சிறு மாற்றங்களைக் கண்முன் காட்டிவிட்டு, தங்கள் உமிழ்வுகளை மறைத்துக்கொள்கின்றன. காலநிலைத் தீர்வுகளை நோக்கி உலக நாடுகள் நடைபோடும்போதெல்லாம் இந்த புதிய தாராளமய கருத்தாக்கங்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடுகின்றன. அதற்கு சமகாலத்திலேயே பல உதாரணங்கள் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கள் அசௌகரியத்தை மறைத்துக்கொள்ள பெருநிறுவனங்கள் வைக்கும் குற்றச்சாட்டுதான் "இவர்கள் கற்காலத்துக்குத் திரும்பச் சொல்கிறார்கள்" என்ற அறைகூவல். இப்போது இருக்கிற சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்றே கிடையாது என்று அவை அழுத்தமாக அறிவிக்கின்றன. மாற்று கிடையாது என்பதால், சந்தையை உடைத்துவிட்டால் நீங்கள் கற்காலத்துக்குத் திரும்ப வேண்டியதுதான் என்று மக்களிடம் சொல்கின்றன. இதைக் கேட்கும்போது, காலநிலைத் தீர்வுகளை செயல்படுத்தினால், பொருளாதார வளர்ச்சியால் தங்கள் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள எல்லா சௌகரியங்களையும் விட்டுக்கொடுக்க வேண்டிவருமோ என்று பொதுமக்கள் பயப்படுகிறார்கள். "இது ஏதோ புது சதி போல..." என்று தலையைத் திருப்பிக்கொள்கிறார்கள். தீர்வுகளை மறுதலிக்கவும் தயாராகிறார்கள்.

Capitalism
Capitalism
உண்மையில் இப்போது இருக்கும் சந்தையை முற்றிலுமாக சீரமைப்பது, அனைவருக்கும் சாதகமானதாகவே முடியும். அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் (inclusive growth) இருக்கும். சீரமைக்கப்பட்ட சந்தைச் சூழலில் யாரும் எதையும் விட்டுத்தரவேண்டியிருக்காது, ஏனென்றால் அங்கு சூழலியல் சீர்கேடுகளும் இருக்காது!

வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக வைக்காமல், ஒருங்கிணைந்த முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பொருளாதாரச் சூழலில், காலநிலை மாற்றம் என்ற பிரச்னையே வந்திருக்காது. உதாரணமாக, புதிய தாராளமயக் கொள்கைக்கும் முன்னதாகவே மாற்று எரிபொருளைப் பயன்படுத்தத் தொடங்கியது டென்மார்க். அங்கு எந்த எரிபொருள் பயன்படுத்தப்படவேண்டும் என்று தீர்மானித்தது சந்தை அல்ல, சுற்றுச்சூழல் சூழல் மதிப்பீடுகள் பற்றிய ஆராய்ச்சி. சந்தையின் குறுக்கீடுகள் இல்லாமல் மாற்று எரிபொருளை நோக்கி செயல்பட்ட டென்மார்க், உலகிலேயே அதிக அளவில் வளம்குன்றா எரிபொருள்களைப் (40%) பயன்படுத்தும் நாடாக உயர்ந்திருக்கிறது!

உலகின் சந்தைக்கான பொருள்களை உற்பத்தி செய்யும் சீனா போன்ற நாடுகளில், உலகின் சிம்னியாக மாறி தொடர்ந்து உமிழ்வுகளை வெளியிடுகின்றன என்பதைப் பார்த்தாலே சந்தைக்கும் காலநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பு புரிந்துவிடும். புதிய தாராளமயக் கொள்கையால், உமிழ்வுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, ஏழை நாடுகள் நூறில் ஒருபங்கு உமிழ்வுகளை மட்டுமே வெளியிடுகின்றன! ஆனால் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையபோவது ஏழை நாடுகள்தான். ஒரு நாட்டுக்குள்ளேயே பணம் படைத்தவர்களின் உமிழ்வுகள் மிக அதிகமாகவும், வறியவர்களின் உமிழ்வுகள் சராசரிக்குப் பலமடங்கு கீழேயும் இருக்கின்றன. இந்த அதீத ஏற்றத்தாழ்வுக்குக் காரணமும் வளர்ச்சியை மட்டுமே பேசும் பொருளாதாரக் கொள்கைகள்தான்.

சீனாவின் பொருளாதாரம்
சீனாவின் பொருளாதாரம்

தீர்வுகளை முன்வைக்கும்போது, பெருநிறுவனங்கள் "இல்லை, நாம் சமாளிக்கலாம்" என்று சொல்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றன. "மனித இனமே சமாளித்து சமாளித்துதான் பிரச்னைகளை எதிர்கொள்கிறது. புதைபடிவ எரிபொருள்களை யாரும் நிராகரிக்கவேண்டாம்... காலநிலை மாற்றத்தை நாம் வேறு வழியில் சமாளிக்கலாம், எத்தனையோ தொழில்நுட்பப் புரட்சிகளை மனித இனம் பார்த்துவிட்டது. இதையும் நாம் தொழில்நுட்பத்தால் சமாளிக்கலாம்" என்று சொல்கின்றன.

அது உண்மைதானா? தொழில்நுட்பம் எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு தருமா?

- Warming Up...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு