Published:Updated:

`அரசும் செய்ய மாட்டேங்குது... எங்களையும் செய்யவிட மாட்டேங்கிறாங்க!' - அழியும் துறையூர் ஏரி

செ.க.மெளரீஷ்

துறையூரின் குடிநீருக்கு ஆதாரமா இருந்த சின்ன ஏரியை மொத்த ஊரின் கழிவும் சேரும் இடமாக நகராட்சி நிர்வாகம் மாற்றி விட்டது. இப்போது இந்தப் பெரிய ஏரிக்கும் கழிவுநீர் சென்று சேர வழிசெய்துள்ளது.

பெரிய ஏரி
பெரிய ஏரி

திருச்சி மாவட்டம் துறையூரில் அமைந்துள்ள பெரிய ஏரி சுமார் 285 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். சுற்று வட்டார கிராமங்கள் அனைத்துக்கும் விவசாயப் பாசனத்துக்கு ஆதாரமாக இருந்து வந்தது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாகத் தூர்வாராமல் இருந்ததால் சுமார் 2 முதல் 3 மீட்டர் அளவுக்கு மண்ணின் அளவு உயர்ந்து ஏரியின் ஆழம் குறைந்தது. துறையூரில் செயல்பட்டு வரும் மக்கள் நலம் சங்கத்தின் சார்பாக ஏரி முழுவதும் படர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுத் தூர்வாரி சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

2017 மற்றும் 2018-ம் ஆண்டு இப்பணி நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு மறுபடியும் இப்பணியைச் செய்ய அரசின் அனுமதி கிடைக்காததால்  பராமரிப்பின்றி இருக்கிறது. கேட்க யாரும் இல்லாததால் இந்த ஏரியில் கட்டட இடிபாடுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். கோழிக்கழிவுகளும் கொட்டப்படுகின்றன. கழிவு நீர் இந்த ஏரிக்குள் செல்ல வாய்க்கால் அமைத்து நகராட்சி நிர்வாகமே வழிசெய்கிறது.

குப்பை மேடாகும் ஏரி
குப்பை மேடாகும் ஏரி

மக்கள் நலச்சங்கம் நிர்வாகிகளிடம் பேசினோம், `` ஏரியைத் தூர்வாரி கடந்த 2 வருஷமா, ஏரி தொடர்பான மற்ற பணியைச் செய்துகொண்டிருக்கோம். இந்த வருஷம் திரும்பவும் இந்த வேலைகளைச் செய்யறதுக்கு தாசில்தாரிடம் அனுமதி கேட்டால் RDO-வை போய் பார்க்கச் சொல்றாரு. ஆனால், இந்த வேலைகளைச் செய்ய சட்டப்படி தாசில்தார் அனுமதியே போதுமானது. நாங்க எங்க சங்கத்தின் செலவில் ஜே.சி.பியை ஏற்பாடு செய்து ஏரி மணலை விவசாயிகளுக்குக் கிடைக்கத் திட்டமிட்டோம். அதற்கான அனுமதியே கிடைத்தபாடில்லை. அரசிடமிருந்து இதுவரைக்கும் தூர்வாரும் பணிக்காக எந்த ஒரு நிதியும் ஒதுக்கியதாகத் தெரியவில்லை. ஒன்று அரசே இப்பணியை எடுத்துச் செய்ய வேண்டும் அல்லது எங்களையாவது செய்யவிட வேண்டும்.

ஏற்கெனவே துறையூரின் குடிநீருக்கு ஆதாரமா இருந்த சின்ன ஏரியை மொத்த ஊரின் கழிவும் சேரும் இடமாக நகராட்சி நிர்வாகம் மாற்றிவிட்டது. இப்போது இந்தப் பெரிய ஏரிக்கும் கழிவுநீர் சென்று சேர வழிசெய்துள்ளது. இந்தக் கழிவு நீரானது ஏரிக்கு நடுவே தேங்கி சிறிய குட்டைபோல காட்சியளிக்கிறது. மழை பெய்து நீர் தேங்கி நின்றால் அது இந்தக் கழிவு நீரோடு கலந்துவிடுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளோம். இதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பொதுப்பணித் துறை செய்தபாடில்லை. கடந்த எட்டு வருடங்களாகச் சரியான மழை இல்லாததால் துறையூரில் ஏற்கெனவே நிலத்தடி நீர் மிகவும் ஆழத்துக்குச் சென்றுள்ளது.

பெரிய ஏரி அவலம்
பெரிய ஏரி அவலம்

இனிமேலாவது அரசு தலையிட்டு ஏரியைச் சரியாகத் தூர்வார வேண்டும். இந்த ஏரியைத் தொடர்ந்து தூர்வாரினால் குறைந்தபட்சம் ஐந்து வருடம் வரை மண் அள்ளலாம். அந்தளவுக்கு இந்த ஏரியில் இரண்டு மீட்டர் உயரத்துக்கு மண் குவிந்துள்ளது. அரசாங்க நிதியைப் பற்றி நகராட்சியில் விசாரித்தால் எந்த ஒரு நிதியும் அரசு ஒதுக்கவில்லை என்று கூறுகின்றார்கள். முதலமைச்சரின் குடிமராமத்து நிதியைப் பற்றி விசாரித்தால், ` அது இந்த ஏரிக்கு கிடையாது' என்கிறார்கள்” என வருத்தப்பட்டனர்.