மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்துக்குள் வந்த அமெரிக்கா... உலகிற்கு பைடன் சொல்லியிருக்கும் செய்தி என்ன?

பருவநிலை நெருக்கடியை அமெரிக்கா `அவசர தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக' கருதும் என்று கெர்ரி கூறியுள்ளதும் உலக நாடுகளின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் புதன்கிழமை அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சில மணி நேரத்தில் 15 செயல் ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முக்கியமான பல கொள்கைகளை புதிய அதிபர் செயலிழக்க வைத்துள்ளார். அவற்றில் முதன்மையானது பருவநிலை மாற்றம் மற்றும் குடியேற்றம் தொடர்பான கொள்கைகள். இதனால், அமெரிக்கா மீண்டும் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது.

``நாட்டில் மாபெரும் சேதங்களை உருவாக்கிய ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை மாற்றியமைக்க மட்டும் நான் இந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நம் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லவும்தான் இந்தப் புதிய நடவடிக்கைகள்” என பைடன் தனது பதவியேற்பு விழாவின்போது தெரிவித்தார். வெறும் அறிவிப்புடன் நிற்காமல், இரண்டு ட்ரில்லியன் டாலர்களை பருவநிலை மாற்ற திட்டத்துக்கு ஒதுக்கவும், பசுமை இல்ல வாயு தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.
பாரிஸ் ஒப்பந்தம் என்பது பருவநிலை மாற்றம் தொடர்பான ஒரு சட்டபூர்வமான சர்வதேச ஒப்பந்தமாகும். 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக மாநாட்டில், 196 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2016 நவம்பர் 4 முதல் நடைமுறைக்கு வந்த, இந்த ஒப்பந்தத்தை 185 நாடுகள் அங்கீகரித்துள்ளன.

இந்த ஒப்பந்தப்படி, உறுப்பு நாடுகள் ஐந்து ஆண்டுகளில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் கணிசமாகக் குறைக்க வேண்டும். குறிப்பாக, புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக, 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதே இதன் குறிக்கோள். பாரிஸ் ஒப்பந்தம் என்பது பலதரப்பு பருவநிலை மற்றும் காலநிலை மாற்ற செயல்பாட்டின் ஓர் அடையாளம். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், விளைவுகளுக்கு ஏற்ப அதை மாற்றுவதற்குமான லட்சிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும், முதன்முறையாக அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு காரணியாக உருவாக்க ஏற்படுத்தப்பட்டதுதான் இந்தப் பிணைப்பு ஒப்பந்தம்.
ஆனால், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை கைவிட்ட ஒரே நாடு அமெரிக்காதான். இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் ட்ரம்பின் முடிவு சூழலியலாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அத்துடன் ட்ரம்ப் நிற்கவில்லை. தனது நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தில் 70-க்கும் மேற்பட்ட பல்வேறு முக்கிய சுற்றுச்சூழல் விதிமுறைகளை திரும்பப் பெறுவதற்கான செயல்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். இது உலக காலநிலை செயல்பாட்டு சமூகத்தை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்னர் ஒபாமா நிர்வாகம், 2025-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 26 முதல் 28 சதவிகிதம் வரை குறைப்பதாக உறுதியளித்து, பசுமை பருவநிலை நிதியத்துக்கு நிதியளிப்பதிலும் முக்கிய பங்காற்றியது. ஏழை நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த நிதி உதவியது. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம், 2017-ல் இந்த நிதியத்துக்கு நிதி வழங்குவதை நிறுத்தியது.

2017-ம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் தனது முடிவை நியாயப்படுத்திய ட்ரம்ப், இந்த உடன்படிக்கை, ``நம் நாட்டுக்கு ஓர் ஒட்டுமொத்த பேரழிவு” என்று அறிவித்தார். மேலும் இது ``அமெரிக்காவின் செல்வத்தை ஒட்டு மொத்தமாக வெளிநாடுகளுக்கு, குறிப்பாக உலகை அதிகளவில் மாசுபடுத்தும் நாடுகளுக்கு மாற்றுவதற்கு அனுமதித்தால், அது அமெரிக்காவின் வர்த்தகப் போட்டித்திறனைக் கடுமையாகப் பாதிக்கும்” என்றும் வாதிட்டார்.
ட்ரம்ப் மறைமுகமாகக் குறிப்பிட்டதுபோல உலகில் சீனாதான் வேறு எந்த நாட்டையும்விட அதிகளவில் பசுமை இல்ல வாயு உமிழ்வை உருவாக்குகிறது என்றாலும், வரலாற்று ரீதியாக உலகில் உள்ள அனைத்து நாடுகளைவிட அதிகளவில் கரியமில வாயுவை வளிமண்டலத்தில் செலுத்துவது அமெரிக்காதான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பசுமை இல்ல வாயு உமிழும் நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது.
தற்போது பருவநிலை மாற்றம் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு எதையும் அதிபர் பைடன் உடனடியாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், அமெரிக்கா துணிச்சலாக மிகப்பெரியளவில் பசுமை இல்ல வாயு உமிழ்வு இலக்குகளை அறிவிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. பருவ நிலை ஒப்பந்தத்தை ஏற்கும் அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரியைத் தனது ஐ.நா காலநிலை தூதராக பைடன் நியமித்துள்ளார். பருவநிலை நெருக்கடியை அமெரிக்கா `அவசர தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக' கருதும் என்று கெர்ரி கூறியுள்ளதும் உலக நாடுகளின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் பருவநிலை நெருக்கடிக்கு எதிரான உலகின் முயற்சிகளில் இனி அமெரிக்காவும் அங்கம் வகிக்கும் என்பதை உறுதியாகச் சொல்லியிருக்கிறார் பைடன்.

பைடனின் முடிவை உலக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் அமெரிக்கா திரும்பி ஒப்பந்தத்திற்குள் வருவதை வரவேற்றுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டே உறுப்பு நாடுகள் தாங்கள் எடுத்த பருவநிலை தடுப்பு நடவடிக்கைகளை தெரிவித்திருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதால், இந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஸ்காட்லாந்து க்ளாஸ்கோ நகரில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கே.ராஜு