Published:Updated:

வேகமெடுக்கும் யானைகள் வழித்தட விவகாரம்... முதுமலையில் முதல் நாள் ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி!

யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பின் மீட்புக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் அலுவலக தேர்வுக்காக முதல் முறையாக நேற்று முதுமலை வந்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா காட்டுயிர் சரணாலயம், தமிழகத்தின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் போன்ற வன வளம் நிறைந்த காடுகளின் இணைப்புப் புள்ளியாக முதுமலை விளங்கிவருகிறது.

யானை
யானை

ஒரே வாழிடத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் வாழும் இடமாக, உலகிலேயே நீலகிரி பல்லுயிர்ச்சூழல் மண்டலம் மட்டுமே திகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தப் பல்லுயிர் பெருக்க மண்டலத்தை ஆண்டுக்குச் சுமார் 1,000 யானைகள் கடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை கடக்க இங்கு மட்டும் 22.64 கிலோமீட்டர் நீளமும் 1.5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட வழித்தடத்தைப் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்துகின்றன.

இந்நிலையில், மசினகுடி, பொக்காபுரம், மாவனல்லா மற்றும் வாழைத் தோட்டம் போன்ற பகுதிகளில் ஏராளமான ரிசார்ட்டுக்கள் மற்றும் காட்டேஜ்கள் கட்டப்பட்டன. இவை தவிர, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்டுக்கள் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாகவும் இதனால் யானைகள் வழித்தடம் தடுக்கப்படுவதாகவும் கூறி யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கள ஆய்வு
கள ஆய்வு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட், காட்டேஜ் வைத்துள்ள 39 பேர் உச்ச நீதிமன்றம் சென்றனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இந்த மாதம் 14-ம் தேதி வெளியானது.

இதில், யானைகள் வழித்தடம் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வெளியிட்டுள்ள உத்தரவு பொருந்தும். மேலும், இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூவர் அடங்கிய குழுவையும் அமைத்தது. இந்த குழு அங்கு ஆய்வு மேற்கொண்டு அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் கள நிலவரத்தைக் காண முதல் முறையாக இன்று முதுமலை வந்தார். மசினகுடி, பொக்காபுரம் மற்றும் மாவனல்லா போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், சிறப்புக் குழுவுக்கான அலுவலகம் அமைப்பது தொடர்பாகத் தெப்பக்காட்டில் ஆய்வு செய்தார். இவருடன் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன்.
ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன், "உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளது. குழுவினரின் ஆய்வுக்கு ஏற்றவாறு, முதுமலை தெப்பக்காடு பகுதியில் கள ஆய்வுக்கான அலுவலகம் அமைப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து குழுவிலுள்ள மற்ற இருவரிடம் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டு, அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு