Published:Updated:

"வானம் இறுக்கமாக் கெடக்கு... `நிவர்' புயல் என்ன செய்ய காத்திருக்கோ!" கண்மணி குணசேகரன்

நிவர் புயல் - புதுச்சேரி கடல்
நிவர் புயல் - புதுச்சேரி கடல்

"தானே புயலுக்குப்பிறகு, எல்லாரும் இந்த மரம் மட்டையெல்லாம் ஏண்டா நோண்டிக்கிட்டுக் கெடக்கனும்ன்னு நிலத்தை வித்துப்பிட்டு நல்ல வீடா கட்டுக்கிட்டுக் குடியேறிட்டாங்க. இல்லாதவங்க இன்னும் கூரை வீட்டைப் போட்டுக்கிட்டுகெடக்குறாங்க."

என்ன சாபமோ தெரியவில்லை... தமிழகத்தில் இயற்கை சீற்றமென்றால் முதலில் இலக்காவது கடலூர்தான். சுனாமி பேரலைத் தாக்குதல் தொடங்கி தானே, வர்தா, கஜா என எல்லாப் புயல்களும் கடலூரை துவம்சம் செய்துவிட்டே கரைகடந்தன. குறிப்பாக 'தானே', மொத்தமாக நடுநாட்டு மக்களை நிர்கதியாக்கிவிட்டது. அந்தத் தாக்கத்திலிருந்தே இன்னும் மீளாதிருக்கும் அந்த மக்களை தற்போது நிவர் புயல் மிரட்டுகிறது.

இந்தப் புயலை மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?

விவசாயியும் எழுத்தாளருமான கண்மணி குணசேகரன் அந்த மக்களின் தவிப்பையும் துயரத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.
கண்மணி குணசேகரன்
கண்மணி குணசேகரன்

"புயலோ, மழையோ ஒரு மகசூல் வீணாப்போறதைப் பத்தி பெரிய பிரச்னையில்லை. அதை மீட்டுக்கலாம். ஆனா இந்தப்பகுதிக்கு குறிப்பா கடலூரை ஒட்டிய பகுதிகளுக்கு மரங்கள்தான் வாழ்வாதாரம். அதையெல்லாம் மொத்தமா பாழ்படுத்திட்டுப் போயிடுது. மரங்களை வளர்த்து ஆளாக்குறதுங்கிறது சாதாரண விஷயமில்லை. இதுக்கு முன்னாடி வந்த புயல்களால் பாரம்பர்ய மரங்களெல்லாம் சுத்தமாப் போயிருச்சு. அந்தக்கால முந்திரி மரங்களெல்லாம் ஒரு முந்திரிப்பருவத்துக்கு மூணுதடவை காய்க்கும். அந்த மரங்கள்லாம் போயிருச்சு. இப்போ ஏதோ ஒட்டுரகம்னெல்லாம் கொண்டு வாராங்க. ரெண்டு மூணு வருஷத்துல காய்க்குது. அதுக்குப்பெறகு காய்க்கிறதை நிறுத்திப்புடுது. திரும்ப கண்ணு வைக்கணும். 20 கண்ணு வச்சா பத்து கண்ணுகூட தேறமாட்டேங்குது. மா, பலா மரங்களெல்லாம் மொத்தமாப் போச்சு. அதையெல்லாம் வச்சுக் கிளப்பமுடியலே.

அந்தக் காலத்துல இது முள்ளுக்காடாத்தான் கெடந்துருக்கு. அது எப்படி நடந்துச்சுன்னு தெரியலே. பொதுவா வெளங்காத நிலம்தான் முள்ளுக்காடா கெடக்கும். ஆனா, இது வளம் கொழிக்கிற செம்மண்ணு. செம்மண்ணை 'பொட்டைமண்ணு'ன்னு சொல்வாங்க. அதுலயும் இது 'ஒடைப்பொட்டை'. காலை வச்சோம்ன்னா கோடை காலத்துலகூட மொச வயித்துல கால் வைக்கிற மாதிரி மெதுமெதுன்னு உதிரும். மம்பட்டியப் போட்டா மண்ணெல்லாம் பொழிஞ்சு கொட்டும். அந்த அளவுக்கு வளமான மண்ணு இது. எப்படி இது முள்ளுக்காடா கிடந்துச்சுன்னு தெரியலே. ஜெயங்கொண்டத்துல இருந்து கடலூர், பண்ருட்டி வரைக்கும் அப்படித்தான் கிடந்திருக்கு.

கண்மணி குணசேகரன்
கண்மணி குணசேகரன்

1940க்குப் பின்னாடி, அரசு இந்த முள்ளுக்காட்டைத் திருத்தி முந்திரிக்காடா மாத்தியிருக்கு. அதனால இன்னைக்கு வரைக்கும் 46 காடு, 51 காடுன்னுதான் காட்டுக்கெல்லாம் பேரு. எந்த வருஷத்துல காட்டைத் திருத்தி முந்திரி போட்டாங்களோ அந்த வருஷத்தயே பேரா வச்சுட்டாங்க. முந்திரியை அரசால திருத்தமுடியாம இந்தப்பகுதி சுத்துப்பட்டு மக்களை உள்ளே அனுப்பி, 'நீங்க காட்டைத் திருத்தி வெறகு ஒடிச்சுக்குங்க, நாங்க கண்ணு தாரம், அதையும் நட்டுக்குங்க. காய்க்க ஆரம்பிச்ச உடனே எங்கக்கிட்ட ஒப்படைச்சிடனும்'னு சொல்லித்தான் கொடுத்திருக்காங்க. இந்த மக்கள் என்ன பண்ணிருக்காங்க, கண்ணை எடுத்தாந்து அவங்கவங்க கொள்ளையில வச்சு அங்க கொடுக்கிற உரத்தைப் போட்டு வளர்த்துத்தான் இன்னைக்கு இந்தப்பகுதியே முந்திரிக்காடா மாறியிருக்கு.

வெவசாயத்தையும் செஞ்சுக்கிட்டு மர மட்டைகளை வச்சுக் கிளப்பிக்கிட்டிருந்தாங்க. இப்போ அரசாங்கம் வச்சிருக்கிற தோப்புக்குப் பேரு காட்டுத்தோப்பு. மக்கள் வச்சிருக்கிற தோப்புக்குப் பேரு பட்டாத்தோப்பு. காட்டுத்தோப்பை மக்கள்கிட்ட ஏலம்விட்டு கொட்டை பொருக்க விட்டிருக்காங்க. இனிமே ஆன்லைன்ல விடப்போறதா சொல்றாங்க. எவனோ ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்காரன் ஏசி ரூம்ல உக்காந்து ஏலம் எடுத்துக்கிட்டுப் போயிருவான். காட்டுத்தோப்புல கொட்டை பொறுக்கிறதுலயும் இப்போ மண்ணு வுழுந்திருச்சு.

இன்னைக்கு ஒவ்வொரு தடவையும் புயல் வந்து அடிச்சுத் தள்ளிட்டுப் போகும்போது ரோட்டு ஓரத்துல இருக்கிற ஆளுகள்லாம், 'இதுக்கு மேற்பட்டு எதுக்குடா இந்தப் போராட்டம்'னு எல்லாத்தையும் மனைக்கட்டுக்கு விக்க ஆரம்பிச்சுட்டாங்க.

புயல்
புயல்

இப்போ புயல்னவொன்னே, நாங்கள்லாம் மர மட்டைகளையெல்லாம் கெளைகளை வெட்டி வச்சிருக்கோம். ஆனா சில மரங்களைத்தான் அப்படி வெட்ட முடியும். பலா மரத்துலயெல்லாம் ஒரு கிளையை வெட்டிட்டிங்கன்னா அந்த மரம் அதோட சரி, அதுல பூச்சி எறங்கிரும். வாழாது. தேக்கு, பூவரசு மரங்களை வேணா கழிக்கலாம்.

தானே புயலுக்குப்பிறகு, எல்லாரும் இந்த மரம் மட்டையெல்லாம் ஏண்டா நோண்டிக்கிட்டுக் கெடக்கனும்ன்னு நிலத்தை வித்துப்பிட்டு நல்ல வீடா கட்டுக்கிட்டுக் குடியேறிட்டாங்க. இல்லாதவங்க இன்னும் கூரை வீட்டைப் போட்டுக்கிட்டுகெடக்குறாங்க. பல பேரு அரசாங்கம் கொடுக்கிற காசை நம்பி வீட்டு வேலையை ஆரம்பிச்சுட்டு பாதியோட போட்டு கடன்காரனா நிக்குறாங்க.

இப்படி தொடர்ச்சியா புயல் வர்றதனால நிலத்துமேல இருந்த மதிப்பு போயிருச்சு. முன்னெல்லாம் வீடு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. காடுருக்கு, நிலமிருக்குன்னு இருந்துச்சு. இப்போ எல்லாருக்கும் வீடுதான் முக்கியம். நிலமெல்லாம் மனையாவுது.

எனக்கும் கூரை வீடு ரொம்பப்புடிக்கும். நல்லா இறுக்கிக் கட்டி வச்சிருந்தேன். தானே புயல்ல என் மோட்டு வளையை பிச்சுக் கடாச்சிருச்சு. அதுக்குப்பெறவுதான் கல்லு வூடு கட்டினேன். இப்படி ஒவ்வொரு புயல்லயும் ஒவ்வொன்னை இழந்துக்கிட்டு கெடக்குறோம்.

கண்மணி குணசேகரன்
கண்மணி குணசேகரன்

இப்போ இந்தப்புயலையும் பாக்கப்போறோம். நான் வீட்டுல நின்ன பூவரசு எல்லாத்தையும் வெட்டிட்டேன். அக்கம்பக்கத்துல நேத்துத்தான் கிளையெல்லாம் கழிச்சு விட்டுக்கிட்டிருந்தாங்க. ரெண்டு பேரல்ல தண்ணி புடிச்சு வச்சிருக்கேன். அவசரக்குன்னு கொஞ்சம் மளிகை சாமான் வாங்கி வச்சிருக்கேன்.

ஒரு நெருப்புப் புடிக்குதுன்னா அந்த எடம் மட்டும்தான் பாழாகும். புயல், எல்லாத்தையும் பாழாக்கிரும். நடுத்தெருவுக்கு கொண்டு வந்திரும். எனக்குத் தெரிஞ்சு அவ்ளோ பலா மரங்கள் இருந்துச்சு. இப்போ ஒன்னைக்கூட பாக்கமுடியலே. 'நொண்டி மாட்டுக்கு சறுக்கினது வாட்டம்'பாங்க. ஏற்கெனவே அடுத்த தலைமுறைக்கு விவசாயத்துமேல நம்பிக்கையில்லை. இந்த மாதிரி புயல், மழைன்னு விவசாயம் பாதிக்கப்படும்போது, எதுக்கு இதெல்லாம்ன்னு பொட்டுன்னு விட்டுக் கடாசிட்டுப் போயிடுறான்.

ஒரு முந்திரி தன்னுடைய முழு அளவு காய்ப்பை வெளியிட பத்து வருஷம் ஆவும். இப்பல்லாம் ஹைபிரிடுன்னு கொண்டு வந்து வச்சு மறுவருஷமே காய்க்குங்கிறான். பிஞ்சு இருக்கிற சிம்பை வெட்டி ஒட்டிக்கட்டி விடுவான். அடுத்த வருஷமே ஒரு பூவை தலையில வச்சுக்கிட்டு நிக்கும். காய்க்கும் பூக்கும்ன்னு கதை சொல்வான். ஆனா, பாரம்பர்ய மரங்கள் பத்து வருஷம் கழிச்சுத்தான் காய்க்கும். ஒரு மரம் விழுந்தா பத்து வருஷ உழைப்பு வீணாப் போயிரும். தலையால தண்ணி மோந்து ஊத்தி சொட்டை விழுந்து போச்சும்பான் எங்க பக்கத்துல. அப்படி கஷ்டப்பட்டு வளர்க்கிறது. 100 சதவிகிதம் பாதிக்கப்பட்டா 20 சதவிகிதம்கூட திரும்ப வளராது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பழைய கோட்டை தொடமுடியலே. என்கிட்ட ஒரே ஒரு பாரம்பர்ய மரம்தான் நிக்கிது. மத்ததெல்லாம் போச்சு.

நிவர் புயல்
நிவர் புயல்

இப்போ இந்தப் புயலை நினைச்சு ரொம்பப் பயமா இருக்கு. மூடி, கழுத்தை அறுக்கிறதுன்னு சொல்வாங்க. அந்தமாதிரி வானம் மூடிக்கிடக்கு. முன்னெல்லாம் புயல்னா காத்து, மழைன்னு கொஞ்சம் ஆட்டம் காட்டும். இப்போ அப்படியே இறுக்கமாக் கெடக்கு. தொலைக்காட்சி பாக்கும்போது இன்னும் பயமாகுது. ஏற்கெனவே கொரோனாவால மனசெல்லாம் பயந்துகெடக்கு. இப்போ புயல்... வானத்த மாதிரிதான் மனசும் இறுக்கமாக் கெடக்கு. வர்றது வரட்டும்... பாப்பம்... "

வான் பார்த்து பெருமூச்சு விடுகிறார் கண்மணி குணசேகரன்!

அடுத்த கட்டுரைக்கு