Published:Updated:

`30 அடி ஆழ மரணக்குழி.. உறிஞ்சப்படும் காவிரி நீர்!' - சர்ச்சையில் புகளூர் அரசு காகித ஆலை

காவிரியில் ஆலை நிர்வாகம் தோண்டிய குழி
காவிரியில் ஆலை நிர்வாகம் தோண்டிய குழி

`காவிரியில் போகும் தண்ணீரைத் தேக்கி, எங்கள் ஊராட்சிகளுக்கு கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைப்பதுபோல் கடிதம் வாங்கிக் கொண்டு, காவிரியில் 30 அடியில் பொக்லைனை வைத்துக் குழியைத் தோண்டினார்கள்.

காவிரி ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீரை, அரசு காகித ஆலை நிர்வாகம், 30 அடி வரை குழிதோண்டி ராட்சத மோட்டார் மூலம் இழுப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள், அந்தப் பகுதி மக்கள். `இதனால், காவிரியில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்போது, அந்தக் குழியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது' என்று அச்சம் தெரிவிக்கிறார்கள்.

பொக்லைன் மூலம் காவிரியில் குழி தோண்டப்பட்டபோது
பொக்லைன் மூலம் காவிரியில் குழி தோண்டப்பட்டபோது

கரூர் மாவட்டம், புகளூரில் இயங்கி வருகிறது, தமிழக அரசுக்கு சொந்தமான காகித ஆலை. இந்த ஆலையின் செயல்பாட்டுக்கு தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்காக, ஆலை வளாகத்துக்குள்ளேயே பல ராட்சத போர்வெல்களைப் போட்டு, தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.

`தடுப்பணைக்கு 8 லட்சம் ரூபாய்; ஓராண்டில் உடைந்த கொடுமை!' -மணல் கொள்ளையால் கலங்கும் கடவூர் விவசாயிகள்

இதைத்தவிர, புஞ்சைப் புகளூர் ஊராட்சியில் உள்ள கட்டிப்பாளையத்தில் காவிரியில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து, ஆலை பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். காவிரியில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும்போது, காகித ஆலை நிர்வாகம் காவிரியிலிருந்து கூடுதல் தண்ணீரை எடுப்பதற்கு இங்குள்ள கிராமங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.

காவிரியில் ஆலை நிர்வாகம் தோண்டிய மரணக்குழி
காவிரியில் ஆலை நிர்வாகம் தோண்டிய மரணக்குழி

ஆனால், காவிரியில் குடிநீருக்காக திறந்துவிடப்படும் தண்ணீரை, காவிரிக்கு குறுக்கே அணைபோல கட்டியும், கரையோரமாக தண்ணீரைக் கொண்டு வந்தும், பல அடியுள்ள குழியை வெட்டி அதில் தேக்கி, தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்துக்கொள்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டுவார்கள். அந்த வகையில், இந்தமுறை குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீரை, நூதனமான முறையில் ஆலை நிர்வாகம் எடுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான விஜயன், `` ஒவ்வொரு கோடைக்காலத்திலும், இப்படி குடிநீருக்காக காவிரியில் திறக்கப்படும் தண்ணீரை, ஆற்றின் நடுவில் அணை கட்டித் தேக்கி, அதைக் கரையோரமாக கொண்டுவந்து, குழி வெட்டி அதில் தேக்கி, மோட்டார் மூலம் எடுத்துக்கொள்வார்கள். இதற்கு எதிராக நாங்கள் போராடினோம்.

அதனால், `குறைந்த அளவே தண்ணீரை எடுப்போம்; பொக்லைன் வைத்து ஆற்றில் குழிதோண்டமாட்டோம்'னு எழுதிக் கொடுத்தாங்க. ஆனால், அதையும் மீறி கடந்த வருடம் குழிதோண்டி தண்ணீர் எடுத்தாங்க. அந்தக் குழியில் சிக்கி இரண்டு பேர் இறந்துபோய்ட்டாங்க. ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்ட அணை போன்ற இடத்தில் நான்கு பேர் சுழலில் சிக்கி இறந்துபோய்ட்டாங்க.

விஜயன்
விஜயன்

இந்த வருடமும், தமிழக அரசு காவிரியில் குடிநீருக்காக 1000 கனஅடி தண்ணீரை திறந்தது. `அந்தத் தண்ணீரை அரசு மற்றும் தனியார் ஆலைகள் எடுக்கக் கூடாது' என்று தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதையும் மீறி, புகளூர் காகித ஆலை நிறுவனம், புதுமாதிரியான யோசனையோடு தண்ணீரை திருடுகிறது. அருகில் உள்ள சில ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களைச் சரிசெய்து, அவர்கள் மூலமாக தங்களுக்குக் கோரிக்கை கடிதம் அனுப்ப வைத்தனர்.

அதாவது, `காவிரியில் போகும் தண்ணீர் தங்கள் ஊராட்சிகளுக்கு கிடைப்பதில்லை. அதனால், அதைத் தேக்கி தங்கள் ஊராட்சிகளுக்குக் கொடுக்கணும்' என்று கோரிக்கை வைப்பது போல் கடிதம் வாங்கிக்கொண்டு, காவிரியில் 30 அடியில் பொக்லைனை வைத்து, குழியைத் தோண்டினார்கள். அதன்மூலமாக, பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஆலைக்கு உறிஞ்சி எடுத்தார்கள். இதனால், கட்டிப்பாளையத்திற்கு கிழக்கே காவிரியில் சொட்டு நீர்கூட போகவில்லை.

இதனால், நாங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு எதிராகப் போராட கிளம்பவும், பயந்துபோய், ' நாங்க சீராக தண்ணீர் கிடைக்க உதவி கேட்டா, நீங்க ஆலைக்கு தண்ணீர் செல்ல நீர்வழிப்பாதை அமைத்துவிட்டதாக மக்கள் கோபப்படுகிறார்கள். நாங்க கொடுத்த கடிதத்தைத் தவறாக பயன்படுத்தியுள்ளீர்கள். தண்ணீரை பழையபடி திறந்துவிடுங்கள்' என்று கடிதம் அனுப்பியிருக்காங்க.

ஊராட்சிமன்றத் தலைவரின் எதிர்ப்புக் கடிதம்
ஊராட்சிமன்றத் தலைவரின் எதிர்ப்புக் கடிதம்
நா.ராஜமுருகன்

ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் ஆலை நிர்வாகம் தண்ணீரை தொடர்ந்து உறுஞ்சுது. வரும் 12-ம் தேதி காவிரியில் பாசனத்துக்காக தண்ணீரைத் திறக்கும்போது, கரையோரம் தோண்டப்பட்டுள்ள இந்த ராட்சத மரணக்குழியில் பலரும் மாட்டிக்கொண்டு இறந்துபோகும் அபாயம் உள்ளது. இந்தக் குழியை உடனே மூட வேண்டும். இல்லைன்னா, ஆலைக்கு எதிராக சட்டப்போராட்டத்தில் குதிப்போம்" என்றார்.

Vikatan

இதுகுறித்து, தமிழ்நாடு காகித ஆலை நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் உதயகுமாரிடம் பேசினோம்.

``அப்படிச் சொல்கிறார்களா.. யாரோ உங்களிடம் தவறான தகவலை தெரிவித்துள்ளனர். இங்குள்ள சில ஊராட்சிகளின் தலைவர்கள், தங்கள் ஊர்களுக்குப் போதிய குடிநீர் ஆதாரம் காவிரியிலிருந்து கிடைப்பதில்லை என்று கடிதம் கொடுத்தார்கள். அதனால், எங்கள் சொந்த செலவில் அதற்கு சில வழிவகைகளைச் செய்தோம்.

ஆலைக்குச் சொந்தமான வாட்டர் பிளான்ட்
ஆலைக்குச் சொந்தமான வாட்டர் பிளான்ட்

மற்றபடி, தண்ணீரை எடுக்க, ஊராட்சிமன்றத் தலைவர்களை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம் என்பது பொய்யான குற்றச்சாட்டு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு