Published:Updated:

கேரள அரசின் சில்வர் லைனிங் ரயில்வே திட்டம்; சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வித்திடப்போகிறதா?

western ghats
western ghats ( Photo by Smaran Alva on Unsplash )

ஒவ்வோர் ஆண்டும் கடுமையான வெள்ளம், நிலச்சரிவு, கடலோர அரிப்பு ஆகியவற்றைச் சந்திக்கும் கேரளாவில் இவ்வளவு பெரிய பொருள்செலவில் ஒரு திட்டம் அவசியமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

கேரளாவின் வடக்கு மற்றும் தெற்குக் கடலோர மாவட்டங்களை இணைக்கும், அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான சில்வர் லைன் திட்டம், எளிதில் பாதிக்கக்கூடிய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பேரழிவை உண்டாக்கும் என்று கேரள சூழலியல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

உதாரணத்துக்கு, வடக்கு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் குப்பம், ராமாபுரம் மற்றும் பெருவம்பா நதிகள் சூழ்ந்திருக்கும் மடயிப்பாரா பல்லுயிர்ச்சூழல் காப்பிடம். இந்தப் பகுதியில் 657 வகையான தாவரங்கள், 142 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 186 பறவை இனங்கள், 60 வகையான தட்டான்களைப் போன்ற பறக்கும் பூச்சி இனங்கள் வாழ்கின்றன. மேலும், 24 வகையான அரிய ஊர்வனங்கள், 19 வகையான அரிய நீர்நில வாழ்விகள் அங்கு காணப்படுகின்றன. கண்ணூர் மாவட்டத்தின் 58.75 சதவிகித தாவரங்கள் மடயிப்பாரா மலைகளில் காணப்படுகின்றன.

Madayipara
Madayipara
Vinayaraj

மடயிப்பாராவுக்கு தெற்கே 132 கிலோமீட்டர் தொலைவில், அமைந்துள்ளது, கழிமுக சூழலியல் அமைப்பைக்கொண்ட கடலுண்டி பறவைகள் காப்பிடம். அதற்கு அருகில் 13,632 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பொண்ணனி-திரிச்சூர் கோல் சதுப்புநிலம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே, பறவைகளின் வரத்து அதிகமாக இருக்கும் மூன்றாவது பெரிய நிலப்பகுதியாக இது அறியப்படுகிறது. இங்கு 241 வகையான பறவைகள் வாழ்வதாகப் பறவை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 30 சதவிகித பறவைகள் வெளிநாடுகளிலிருந்து இங்கு வலசை வருபவை.

மடயிப்பாரா, கடலுண்டி, பொண்ணனி ஆகிய பகுதிகளின் சூழலியல் வளத்தோடு சேர்த்து சில்வர் லைன் ரயில்வே திட்டத்தின் மூலம், அப்பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரச் சமநிலையே சீர்குலையும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், வடக்கே காசர்கோட்டிலிருந்து தென்கோடியில் அமைந்துள்ள திருவனந்தபுரம் வரையிலுமே இத்தகைய இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ரயில்பாதை, திருவனந்தபுரத்தில் தொடங்கி, கேரளாவின் முக்கிய நகரங்களான கொல்லம், செங்கன்னூர், கோட்டயம், எர்ணாகுளம், கொச்சின், திரிச்சூர், திரூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகியவற்றை ஊடுருவி காசர்கோடு வரை சென்றடைகிறது. இந்தத் திட்டத்துக்கான முன்மொழிதலின்படி, திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் திரிச்சூரில் மேம்பால ரயில் பாதையாகவும் கோழிக்கோட்டில் நிலத்தடி ரயில் பாதையாகவும் அமைக்கப்படும். இதற்கென ரயில் நிலையம் அமைப்பதற்காக கொச்சின் சர்வதேச விமான நிலையம் ஏற்கெனவே ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.

Wetland
Wetland
Vinayaraj

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்துக்கு முதன்மைத்துவம் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கூறியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஏற்கெனவே, நிதி ஆயோக் மற்றும் ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இதன்மூலம், கேரள தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட்டுக்கு, இப்போதுள்ள ரயில்வே அமைப்பின் மூலம் ஆகும் 12 மணி நேரப் பயணம், 4 மணிநேரத்தில் பயணமாகக் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ரயில் பாதைக் கட்டமைப்பு முடிவடைந்துவிட்டால், அதில் ஒருமணிநேரத்துக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இருப்பினும், இந்தத் திட்டம் கொண்டு வரக்கூடிய சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார பின்விளைவுகள் குறித்துப் பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திட்டத்துக்கு 1,383 ஹெக்டேர் நிலப்பகுதி வேண்டும். அதற்காக, பெரியளவிலான சதுப்புநிலம், காட்டு நிலம், உவர்நீர் பகுதி, மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலம் ஆகியவை கையகப்படுத்தப்படும். நிதி ஆயோக் அறிக்கையின்படி, இந்தத் திட்டத்துக்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்குச் செய்துகொடுக்க வேண்டிய மாற்று ஏற்பாடுகளுக்கு மட்டுமே சுமார் 28,157 கோடி ரூபாய் செலவாகும்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.வி.ஜி.மேனன், ``இந்தத் திட்டத்தில், நிறைய பாலங்கள் அமைக்க வேண்டியிருப்பதால், அதற்கு அதிகளவிலான மண் மற்றும் கிரானைட் தேவைப்படுவது, மேற்குத்தொடர்ச்சி மலையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். கேரளாவில் அனைத்து கிரானைட் அகழ்விடங்களும் மேற்கு மலைத்தொடரில்தான் அமைந்துள்ளன. மேலும், சதுப்புநிலம், நதிகள், விவசாய நிலம், ஏரிகள் என்று பல்வேறு வகையான சூழலியல் அமைப்புகளைக் கடந்து இது அமைவதால், சூழலியல் சீர்கேடுகளும் கணக்கின்றி ஏற்படும். இந்தத் திட்டத்தின் செலவைப் பொறுத்துப் பார்க்கையில், இதனால் ஏற்படப்போகும் சமூக, சுற்றுச்சூழல், பொருளாதார விளைவுகள் ஒரு வெள்ளை யானையைப்போல் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Kole Wetlands
Kole Wetlands
Manoj Karingamadathil
``காடுகளை பழங்குடிகளிடம் கொடுங்கள்; பல்லுயிரியம் பாதுகாக்கப்படும்!"- ஆய்வறிக்கை சொல்லும் உண்மை

அதேநேரம், பலரும் இந்தத் திட்டம் சாலை நெருக்கடி, விபத்துகள், மரணங்கள், பசுமை இல்ல வாயு வெளியீடு ஆகியவற்றைக் குறைப்பதில் பங்கு வகிக்கலாம் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். அதோடு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் நகரங்களின் வளர்ச்சியை வேகப்படுத்துவதிலும் இந்தத் திட்டம் பங்கு வகிக்கும் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

கேரளா பரிஸ்திதி ஐக்கிய வேதி போன்ற சுற்றுச்சூழல் கூட்டமைப்புகள், இதைவிட நிலைத்தன்மை வாய்ந்த சூழலியல் ரீதியாகக் கேடு விளைவிக்காத வகையில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று கோருகின்றனர். மேலும், 63,941 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் கடுமையான வெள்ளம், நிலச்சரிவு, கடலோர அரிப்பு ஆகியவற்றைச் சந்திக்கும் மாநிலத்தில் இவ்வளவு பெரிய பொருள்செலவில் ஒரு திட்டம் அவசியமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

அதற்குப் பதிலாக, குறைந்த செலவில் இதற்கான மாற்றுத் திட்டத்தைச் சிந்திப்பது பொருளாதார ரீதியாகவும் சரி சூழலியல் ரீதியாகவும் சரி நன்மை பயக்கும் என்று கேரளா பரிஸ்திதி ஐக்கிய வேதி போன்ற சுற்றுச்சூழல் கூட்டமைப்புகள் வாதிடுகின்றன.

இந்தத் திட்டம் ஒரு நீரியல் பேரழிவை உண்டாக்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலையின் நீரியல் சுழற்சியைச் சிதைக்கலாம். அதன்விளைவாக, ஒவ்வோர் ஆண்டும் பருவகாலத்தின்போது ஏற்படும் வெள்ளப்பெருக்குகள் அதிகச் சேதங்களை உண்டாக்கலாம் என்று இந்த அமைப்பு எச்சரிக்கிறது.

பொண்ணனி-திரிச்சூர் கோல் சதுப்புநிலம் / கேரளா
பொண்ணனி-திரிச்சூர் கோல் சதுப்புநிலம் / கேரளா
Challiyan
`இந்தியாவின் 43 நகரங்கள் ஆபத்தில் உள்ளன!' - சூழலியல் பேரிடரைச் சுட்டிக்காட்டும் புதிய ஆய்வறிக்கை

அவர்களைப் பொறுத்தவரை, கேரளாவின் இப்போதைய தேவை, சுற்றுச்சூழலுக்கு இசைவான, அதேநேரம் குறைந்த பொருள்செலவில் அதிக மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த திட்டம்தான். ஆனால், சில்வர் லைன் திட்டம் கேரள மக்களின் பணம் மற்றும் வளங்களை அழிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யப் போவதில்லை என்று அஞ்சுகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து தவறாமல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரிடர்களால் அதிகச் சேதங்களை எதிர்கொள்ளும் கேரள மாநிலம், அத்தகைய பேரிடர்களை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களைக் கொண்டுவரக் கூடாது என்று அம்மாநில சூழலியல் ஆர்வலர்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு