Published:Updated:

அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்துக்கு அனுமதியளித்த கேரள அரசு... கொதித்தெழுந்த பழங்குடி மக்கள்!

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ( jiju M Iype )

புகழ்பெற்ற சூழலியல் ஆராய்ச்சியாளர் பி.எஸ்.விஜயன் 1997-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை, அதிரப்பள்ளியில் நீர்மின் திட்டம் வந்தால் அது அப்பகுதியின் சூழலியல் அமைப்பைக் குலைத்துவிடும் என்று எச்சரித்துள்ளது.

தங்கள் குடியிருப்புகளைவிட்டுத் துரத்தப்பட்டு இடம் மாற்றப்படுவது பழங்குடியின மக்களுடைய வாழ்வியலின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள சாலக்குடி நதிப்படுகையில் முன்மொழியப்பட்டுள்ள அதிரப்பள்ளி நீர்மின் திட்டம் பல பழங்குடியினக் குடும்பங்களை இடம்பெயர வைக்கப் போகின்றது. கேரள அரசு, மாநில மின்சார வாரியத்திற்கு, இந்தத் திட்டத்திற்கான வேலைகளைத் தொடங்க அனுமதியளித்துள்ளது. இதனால் ஏற்படப்போகும் பெரியளவிலான சூழலியல் பாதிப்புகளையோ மக்களுடைய வாழ்வாதார இழப்புகளையோ பொருட்படுத்தாமல் இந்த அனுமதியை வழங்கியிருப்பதாகச் சூழலியலாளர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

ஜூன் 10-ம் தேதி, அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்கான வேலைகளைச் செய்வதற்கான சூழலியல் அனுமதியையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அனுமதிகளையும் வழங்கியுள்ளது கேரள அரசு.

அதிரப்பள்ளி
அதிரப்பள்ளி
Dilshad Roshan

கேரள அரசாங்கத்தின் இந்த முடிவு பெரும் விமர்சன அலைகளைக் கிளப்பியுள்ளது. கேரளச் சூழலியல் ஆர்வலர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தத் திட்டத்திற்கு எதிராக, முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் கேரள வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த அனுமதி, அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டத்தைப் போன்ற வலிமையான மற்றுமொரு போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

1970-களின் இறுதியில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள குந்த்ரி நதியில் அமைக்கப்படவிருந்த ஒரு அணைக் கட்டுமானத்திற்கு எதிராகக் கேரள மக்கள் திரண்டெழுந்தனர். அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டம் இந்தியச் சூழலியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அத்தகைய போராட்டம் அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்திற்கு எதிராகவும் உருவாகுமென்று முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், 2010-ம் ஆண்டே இந்தத் திட்டம் பல்வேறு பாதிப்புகளைக் கொண்டு வருமென்றுதான் எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களோடும் கலந்து ஆலோசித்த பிறகு, தனிப்பட்ட முறையில் திட்டம் வரவுள்ள பகுதியைப் பார்வையிட்ட பிறகு இந்தத் திட்டத்திற்கு எதிரான முடிவைத் தாம் அப்போது எடுத்ததாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

கொரோனாவின் பிடியிலிருந்து கேரளா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து கொண்டிருக்கிறது. அடுத்து வரவிருக்கும் மாதங்களில், 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் போல இந்த ஆண்டும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.

வழச்சல் பகுதியில் மட்டுமே 9 பழங்குடியினக் குடியிருப்புகளில் சுமார் 160 காடர் குடும்பங்கள் வாழ்கின்றன.
நீர்மின் திட்டத்துக்காக டிபாங் பள்ளத்தாக்கை அழிக்கும் அரசு... இந்தியாவெங்கும் வலுக்கும் எதிர்ப்பு!

இந்த முடிவு குறித்துத் தன் கருத்தைத் தெரிவித்துள்ள முன்னாள் கேரள வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம், "இது முழுக்க முழுக்க அதிகார வர்க்கத்தினுடைய முடிவு. சுற்றுச்சூழல் குறித்த எவ்வித அக்கறையுமில்லாத அதிகாரிகள் எடுத்துள்ள முடிவுதான் இது என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. அதிரப்பள்ளி நீர்மின் திட்டம் அமல்படுத்தப்பட்டால் சூழலியல் ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் கேரள இழப்புகளைச் சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளார்.

சுமார் 168 ஹெக்டேர் நிலப்பரப்பில், பல்லுயிரிய வளம் நிறைந்து காணப்படும் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில்தான் இந்தத் திட்டம் வரவிருக்கிறது. சாலக்குடி நதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பொரிங்கல்குத்து நீர்மின் உற்பத்தி அணையிலிருந்து வரக்கூடிய நீரைப் பயன்படுத்தி, புதிதாகக் கட்டப்படவுள்ள அணையிலிருந்து 163 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். சில அரிய வகைப் பறவைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் அதிரப்பள்ளியில் வாழ்கின்றன. அதோடு, அந்தப் பகுதியில் காடர் பழங்குடிகளுடைய குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவர்களையும் அங்கிருந்து இடம் மாற்ற வேண்டிய அவலநிலை ஏற்படும். அது இந்திய வன உரிமைச் சட்டத்திற்கு எதிரானது. வழச்சல் பகுதியில் மட்டுமே 9 பழங்குடியினக் குடியிருப்புகளில் சுமார் 160 காடர் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்கள் அனைவருமே இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படுவார்கள்.

வழச்சல்
வழச்சல்
Navaneeth Krishnan S

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிலிருந்த காலகட்டத்திலேயே இந்தத் திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டிருந்தன. மூன்று முதலமைச்சர்களுடைய ஆட்சியின்போது, கேரள மாநில மின்சார வாரியத்தின் தலைவராகவும் அம்மாநில தலைமை வன அலுவலராகவும் பணியிலிருந்த டி.எம்.மனோகரன் சூழலியல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடிய இந்தத் திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் முதன்முதலாக 1996-ம் ஆண்டு முன்மொழியப்பட்டது. அப்போது கேரள மாநில பல்லுயிரிய வள வாரியத்தின் தலைவராக இருந்த, புகழ்பெற்ற சூழலியல் ஆராய்ச்சியாளர் பி.எஸ்.விஜயன் 1997-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை, அதிரப்பள்ளியில் நீர்மின் திட்டம் வந்தால் அது அப்பகுதியின் சூழலியல் அமைப்பைக் குலைத்துவிடும் என்று எச்சரித்துள்ளது. சுமார் 145 கிலோமீட்டர் நீளமுள்ள சாலக்குடி நதியில் ஏழாவது அணையைக் கட்ட முன்மொழியும் முரண்பாடுகள் நிறைந்த இந்த நீர்மின் திட்டம், அதிரப்பள்ளி-வளச்சல் பகுதியின் ஓரிட வாழ்விகளுக்குச் சாவுமணி அடிப்பதற்குச் சமம் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

அங்கு அணை கட்டப்பட்டால், பிரமாண்டமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியே வற்றிவிடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். அதோடு சேர்த்து, அங்கு வாழ்கின்ற நான்கு வகையான இருவாச்சிகள் உட்படப் பல்வேறு உயிரினங்களுடைய வாழ்வாதாரமும் வற்றிவிடும். அவற்றோடு சாலக்குடி நதியின் மீன்வளமும் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். காடர் பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இடம் பெயர வேண்டியிருக்கும்.

சாலக்குடி நதியின் பெருமளவு பகுதிகளில் ஏற்கெனவே மின்சார உற்பத்திக்காக 6 அணைகளும் நீர்ப்பாசனத்திற்காக ஓர் அணையும் அமைக்கப்பட்டுள்ளன.
“எங்க குமுறலெல்லாம் உங்களுக்குக் கேக்குதா மோடி ஐயா!”

ஆனால், இத்தனையையும் மீறி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2012-ம் ஆண்டு அமைத்த வல்லுநர் குழு அளித்த அனுமதியையும் தற்போது கேரள அரசு காட்டியுள்ள பச்சைக்கொடியையும் வைத்துக்கொண்டு மிகுந்த நம்பிக்கையோடு இந்தத் திட்டத்திற்கான வேலைகளைத் தொடங்கக் காத்திருக்கின்றது கேரள மின்சார வாரியம். 2016-ம் ஆண்டே, மத்திய வல்லுநர் குழு அளித்த அனுமதியை வைத்து திட்டத்தைத் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. அப்போது கடுமையான எதிர்ப்பு இருந்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்போது கொரோனா கொள்ளை நோய்ப் பேரிடர் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியிருக்க, ஊடகங்களும் கொள்ளை நோய்ச் செய்திகளில் மும்முரமாக இருக்க, இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கேரள அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே, காடழிப்பினாலும் காடுகளை மனிதர்கள் ஆக்கிரமித்ததாலும் பல்வேறு விலங்கியல் தொற்றுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், எதிர்கொள்ளும் பாதிப்புகளிலிருந்து பாடம் கற்காமல் மேன்மேலும் இழப்புகளை ஏற்படுத்த வல்ல திட்டங்களுக்கு அனுமதியளிக்க இந்தப் பேரிடரை வாய்ப்பாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இந்தத் திட்டம் சூழலியல் பேரிடராக அமையுமென்று சூழலியல் ஆய்வாளர்கள் நீண்டகாலமாக எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். புகழ்பெற்ற மாதவ் காட்கில் கமிட்டி சமர்ப்பித்த மேற்குத்தொடர்ச்சி மலை ஆய்வறிக்கையிலும்கூட, இந்தத் திட்டம் சூழலியல் பேரிடரை உருவாக்க வல்லது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இது, பீச்சி வழனி காட்டுயிர் சரணாலயம் மற்றும் பெரியார் நதியின் இடமலையார் பள்ளத்தாக்கு இரண்டுக்கும் இடையிலான தொடர்பைத் துண்டித்துவிடும்.

2018-ம் ஆண்டு வெள்ளம் வடிந்த பிறகும் கரை புரண்டு ஓடும் சாலக்குடி நதி
2018-ம் ஆண்டு வெள்ளம் வடிந்த பிறகும் கரை புரண்டு ஓடும் சாலக்குடி நதி
Challiyan

இது அமல்படுத்தப்பட்டால், பரம்பிக்குளம் சரணாலயத்திற்கும் பூயம்குட்டி காடுகளுக்கும் இடையிலான யானைகளுடைய வழித்தடமும் பாதிக்கப்படும். இருவாச்சிகள், புலி, சிறுத்தை, நீலகிரி கருமந்தி, சிங்க வால் குரங்கு ஆகிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழும் அப்பகுதி, கூடுதலாக அரிய வகை நீர்வாழ் ஆமைக்கும் (cane turtle) வாழ்விடமாக உள்ளது. இவற்றோடு சேர்த்து, ஆண்டுக்குச் சுமார் 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய அதிரப்பள்ளி மற்றும் வழச்சல் நீர்வீழ்ச்சிகளின் சுற்றுலாத் துறை வருமானமும் பெரியளவில் வீழ்ச்சியைச் சந்திக்கும்.

சாலக்குடி நதியின் பெருமளவு பகுதிகளில் ஏற்கெனவே மின்சார உற்பத்திக்காக 6 அணைகளும் நீர்ப்பாசனத்திற்காக ஓர் அணையும் அமைக்கப்பட்டுள்ளன. 19 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 5 லட்சம் மக்கள் அந்த நதியைச் சார்ந்துதான் வாழ்கின்றனர். இப்போதுள்ள அணைகளே அவர்களுடைய நீராதாரத்தைப் பெரியளவில் பாதிக்கின்றன. இந்தப் புதிய அணையும் வந்துவிட்டால், அந்த மக்களுடைய வாழ்வாதாரம் பெரியளவில் பாதிக்கப்படும்.

பொரிங்கல்குத்து அணை
பொரிங்கல்குத்து அணை
Jaseem Hamza

வழச்சல் பகுதியின் பழங்குடியினக் கூட்டமைப்பு இந்தப் புதிய வளர்ச்சித் திட்டம் குறித்து விரைவில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தவிருக்கிறது. இந்தத் திட்டம் குறித்து வன உரிமைக் கமிட்டியிலும் ஆலோசனை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அப்பகுதியில் வாழும் காடர் பழங்குடியின மக்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் வன உரிமைச் சட்டத்தின் வாயிலாக நில உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன. இப்போது அவர்களுக்கு அப்பகுதியில் நில உரிமைகள் இருப்பதால், சட்டப்படி அவர்களுடைய அனுமதியின்றி இந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியாது.

அந்த மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம், கேரளாவில் ஆட்சியிலிருக்கும் இடது சாரி அரசாங்கம், அவர்கள் வாக்குறுதி அளித்ததைப் போலவே நதிகளையும் அவற்றின் நீரோட்டத்தையும் பாதுகாக்க தலைப்பட வேண்டும். நதிகளைத் தடுத்து, அணைகளைக் கட்டி பேரிடர்களை வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கக்கூடாது.

அடுத்த கட்டுரைக்கு