Published:Updated:

`இனி கூல்டிரிங்ஸ் கொண்டுபோனால் அபராதம்!'- மாற்றத்துக்குத் தயாராகும் கொடைக்கானல்

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

கொடைக்கானல் மலைக்கு சுற்றுலா போகும் பயணிகள், இனி பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி போலவே கொடைக்கானல் மலையிலும் சுற்றுச்சூழல் சுகாதாரப் பணிகள் வேகமெடுத்துள்ளன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, இதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். திடக்கழிவு மேலாண்மையைச் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கமான நடவடிக்கையாக இல்லாமல், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக் இல்லாத கொடைக்கானலை உருவாக்க முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி

அவரது ஆலோசனையின்படி, பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்குவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையைச் செயல்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மூஞ்சிக்கல் பேருந்து நிறுத்தத்திலிருந்து நகராட்சி வரை பேரணி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் நாராயணன், ஆர்டிஓ சுரேந்திரன் ஆகியோர் கொடியசைத்து பேரணியைத் தொடக்கிவைத்தனர். இதில் கொடைக்கானலில் உள்ள பல்வேறு சங்கத்தினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதிலும் ஒரு லிட்டர், 2 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரவும் விற்பனை செய்யவும், பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
- கொடைக்கானல் நகராட்சி

நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டன. கூட்டத்தின் முடிவில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதிலும் ஒரு லிட்டர், 2 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரவும் விற்பனை செய்யவும், பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள்

ஊட்டியில் உள்ளதுபோல, ஏற்கெனவே 14 விதமான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது போல், மேலும் 7 விதமான பிளாஸ்டிக் பொருள்களை கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஆர்டிஓ சுரேந்திரன், நகராட்சி ஆணையாளர் நாராயணன் ஆகியோர், '' கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் ஒரு லிட்டர் மற்றும் இரண்டு லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் கேன்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் கொண்டுவருவதற்கும் விற்பனை செய்யப் படுவதற்கும், பயன்படுத்துவதற்கு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக வரும் மார்ச் 15-ம் தேதி முதல் அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும். அதன் பிறகு, கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன், பொருள்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். இதற்காக, கொடைக்கானல் மலை அடிவாரப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கடுமையாக்கப்படும்'' என்றனர்.

வீரா
வீரா

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூழலியல் ஆர்வலர் வீரா, '' இது வழக்கமான கூட்டமாக இல்லாமல், உண்மையிலேயே நகரை மேம்படுத்தும் கூட்டமாக இருந்தது. மலைக்குக் கீழ்ப் பகுதியிலேயே சோதனைச் சாவடிகளில் பிளாஸ்டிக் இருந்தால் பறிமுதல் செய்யப்படும். அதையும் மீறி, வெள்ளி அருவிக்கு மேல் வரும் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்பன போன்ற கடுமையான விதிகளைக் கடைப்பிடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். சுற்றுலாத் தளங்களில் குடிநீருக்காக சிறப்பு ஏற்பாடுகளையும் அரசு சார்பில் செய்து தர முடிவு செய்திருக்கிறார்கள். கூட்டத்தில் எடுத்த முடிவுகளை முழுமையாகக் கடைப்பிடித்தால், கொடைக்கானல் சுற்றுச்சூழல் காக்கப்படும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு