Published:Updated:

புலியைத் தேடும் தெர்மல் ட்ரோன்.. சுருக்குவைத்த தோட்ட உரிமையாளரை நெருக்கும் நீலகிரி வனத்துறை!

opration tiger
opration tiger

கோத்தகிரியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட சுருக்கு வலையில் சிக்கிய புலி ஒன்று, வனத்துறையின் மெத்தனத்தால் தாமாக விடுவித்துக்கொண்டு காயத்துடன் வனத்துக்குள் சென்றநிலையில் மூன்றாவது நாளாக புலியைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள உயிலட்டி கிராமத்தின் தேயிலைத் தோட்டத்திற்கும் விளை நிலத்திற்கும் இடையில் உள்ள சதுப்பு நிலப்பகுதிக்கு தண்ணீர் தேடிவந்த இளம் புலி ஒன்று, அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த சுருக்கு வலைக்கம்பியில் சிக்கிக்கொண்டது. புலியின் முன்னங்கால் சுருக்கில் மாட்டிக்கொண்டதால், அதனால் தப்பிக்க முடியாமல் போராடியது.

tiger with snare
tiger with snare

அதிகாலையில், புலியின் உருமல் சத்தத்தைக் கேட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தினர். காலை 11 மணிக்கு தொடங்கிய மீட்புப் பணிக்கு வன கால்நடை மருத்துவரும், மயக்கமருந்து செலுத்தும் துப்பாக்கியும் வந்து சேர மாலை 5 மணியானது. மயக்க ஊசி செலுத்தப் போன சமயத்தில், அந்தப் புலி தாமாகவே சுருக்கிலிருந்து விடுவித்துக்கொண்டு, சோர்வில் அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்து, மறுநாள் அதிகாலையில் வனத்திற்குள் சென்றது.

இந்தச் சம்பவம் வனத்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

opration tiger
opration tiger

ஏனென்றால்... வனப்பரப்பும் வன விலங்குகளும் நிறைந்த இந்த மாவட்டத்தில், இன்னும் சட்டவிரோத சுருக்கு வலைகளை வைப்போரைக் கண்டறிந்து தடுக்காமல் போனது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதேபோல், வனத்துறையின் அலட்சியத்தால் முறையாக புலியை மீட்டு சிகிச்சை அளிக்காமல் கோட்டைவிட்டதால், காயத்துடன் தப்பிய புலி இறக்கும் அல்லது ஆட்கொல்லியாக மாறும் என காட்டுயிர் ஆர்வலர்கள் ஒருபுறம் கடிந்துவருகின்றனர்.

snare
snare

உள்ளூர் மக்களோ, 'புலியை வேண்டுமென்றே தப்பிக்கவிட்டுள்ளனர். எங்களுக்கு நடமாடவே பயமாக உள்ளது. புலியைப் பிடித்து முதுமலையில் விடுங்கள்' என நெருக்கடி கொடுத்துவருகின்றனர்.

ஆனால், தப்பித்த இந்தப் புலியின் தற்போதைய நிலவரம் என்னவென்று வனத்துறைக்கே தெரியாது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக புலியைத் தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். புலியின் கால் தடம் மூலம் கண்டறியமுடியாத நிலையில், இன்று தெர்மல் ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு தேடிவருகின்றனர்.

opration tiger
opration tiger

புலியைத் தேடும் பணிகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசுவாமி, "இந்த இளம் புலியின் தற்போதைய நிலையை அறிய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். இதன் ஒரு கட்டமாக, பறக்கும் கேமரா மூலம் தேடிவருகிறோம். வன விலங்குகளை வேட்டையாடும் வகையில் சுருக்கு வலைக் கம்பிகளை வைத்த சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர் மீது பிணையில் வெளிவரமுடியாத வகையில் வனப்பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு