Published:Updated:

சென்னையில் காற்று மாசுபாடு குறைவு! ஆய்வறிக்கை கூறுவதை எப்படிப் பார்க்கலாம்?

காற்று மாசு

தொழிற்சாலைகளை நகரத்திற்கு வெளியே அமைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் என்றால் எண்ணூர், மணலி ஆகிய பகுதிகள் சென்னையின் ஜோன் 1 பகுதிக்குள் அடங்குபவை. இந்தப் பகுதிகளில் 2012ம் ஆண்டு 22 தொழிற்சாலைகளாக இருந்தது இந்த பத்தாண்டுகளில் 12 அதிகரித்து 34 தொழிற்சாலைகளாக அதிகரித்திருக்கின்றன.

சென்னையில் காற்று மாசுபாடு குறைவு! ஆய்வறிக்கை கூறுவதை எப்படிப் பார்க்கலாம்?

தொழிற்சாலைகளை நகரத்திற்கு வெளியே அமைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் என்றால் எண்ணூர், மணலி ஆகிய பகுதிகள் சென்னையின் ஜோன் 1 பகுதிக்குள் அடங்குபவை. இந்தப் பகுதிகளில் 2012ம் ஆண்டு 22 தொழிற்சாலைகளாக இருந்தது இந்த பத்தாண்டுகளில் 12 அதிகரித்து 34 தொழிற்சாலைகளாக அதிகரித்திருக்கின்றன.

Published:Updated:
காற்று மாசு

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. பசுமைப்பரப்பினை அதிகரித்ததாலும் சாலைகள் பராமரிப்பாலும் காற்று மாசு குறைந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

சென்னையில் 8 இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகின்றன. கடந்த 2010 - 11ம் ஆண்டில், காற்றில் பறக்கும் நுண்துகள்கள் அளவு ஆண்டுக்கு சராசரி, 168 மைக்ரோ கிராமாக இருந்தது. 2020 - 21ம் ஆண்டில் இந்த அளவு 58 மைக்ரோ கிராமாக குறைந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவின் ஆறு பெருநகங்களை ஒப்பிடுகையில், சென்னையில் காற்று மாசு மிகவும் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டிருக்கிறது. காற்று மாசினைத் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் 'மியாவாக்கி' காடுகள் அமைத்தல், சாலைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கட்டடங்களில் இருந்து தூசி வெளியேறாமல் தடுப்பதற்கான விதிமுறைகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்செய்தி குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமனிடம் பேசினோம்...

 நித்தியானந்த் ஜெயராமன்
நித்தியானந்த் ஜெயராமன்

"1200 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னை மாநகராட்சியில் 8 இடங்களில் காற்றின் தரத்தினை கண்காணித்து அதன் சராசரியை வைத்தே இந்த ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளனர். காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரையில் இதில் சராசரி அளவைக் கணக்கிடுவது முறையாக இருக்காது. ஏனென்றால் எண்ணூரில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கும், பெசன்ட் நகரில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கும். எனவே துல்லியமான கணக்கின் அடிப்படையில் இந்த முடிவினைக் கூறுவதே உகந்ததாக இருக்கும். சென்னையிலேயே எல்லோருமே ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோமா என்றால் இல்லை.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக்குழு அளித்த அறிக்கையின்படி வட சென்னை மக்களுக்கு புற்றுநோய் மற்றும் அதன் சாத்தியங்கள் அதிகமாகியிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மணலி பகுதியில் தூசி, சல்பர் டை ஆக்சைட், நைட்ரஜன் டை ஆக்சைட் ஆகிய மூன்றால் காற்று முழுமையாக மாசுபட்டு காற்று மாசுபாட்டின் உச்சநிலையைத் தொட்டு விட்டதாகவும் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. இப்படியான சூழலில் தனித்தனியான பகுதிகளில் நடத்தப்படும் ஆய்வு முடிவினைத்தான் நாம் பரிசீலிக்க வேண்டும். சராசரியான கணக்கீட்டை எடுப்பது ஆரோக்கியமானதாக இருக்காது.

எண்ணூர் கடற்கரை
எண்ணூர் கடற்கரை

பசுமைப்பரப்புகள் அதிகமாகியிருக்கிறது என்கிறார்கள். அவற்றை நிகர் செய்ய முடியாத அளவில் இந்த பத்தாண்டுகளில் தொழிற்சாலைகள் அதிகமாகியிருக்கின்றன. வாகனப்போக்குவரத்து பெருகியிருக்கின்றன. சாலையின் தரம் குறைந்திருக்கிறது. தொழிற்சாலைகளை நகரத்திற்கு வெளியே அமைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் என்றால் எண்ணூர், மணலி ஆகிய பகுதிகள் சென்னையின் ஜோன் 1 பகுதிக்குள் அடங்குபவை. இந்தப் பகுதிகளில் 2012ம் ஆண்டு 22 தொழிற்சாலைகளாக இருந்தது இந்த பத்தாண்டுகளில் 12 அதிகரித்து 34 தொழிற்சாலைகளாக அதிகரித்திருக்கின்றன. தொழிற்சாலைகள் அதிகரித்திருக்கும் சூழலில் காற்று மாசு குறைந்திருக்கிறது என்று சொல்வது என்ன விதமான கணக்கு எனப் புரியவில்லை. பற்றாக்குறைக்கு வட சென்னையில் புதிதாக துறைமுகமும் உருவாகியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மணலி டோல்கேட் கணக்கின்படி ஒரு நாளைக்கு 17 ஆயிரம் கனரக வாகனங்கள் மணலி டோல்கேட் வழியாகச் செல்கின்றன. அப்பகுதியில் உள்ள தரமற்ற மண்சாலையில் அவை புழுதியைக் கிளப்பியபடி செல்லும்போது நிலவும் காற்று மாசுபாடு குறித்து யோசித்துப் பாருங்கள். சென்னை மாநகரத்தின் பகுதிகள் வேறுபட்ட சூழலைக் கொண்டிருக்கின்றன எனபதால் சராசரி என்கிற அடிப்படையில் ஒட்டுமொத்த சென்னையைக் கணக்கிடுவதன் மூலம் வட சென்னை மாதிரியான அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் பிரச்னைகள் கவனிக்கப்படாது போகும் வாய்ப்புகள் உள்ளன. சென்னை என்கிற நகரின் நலனுக்காக வட சென்னையின் பல பகுதிகள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றன. சென்னையின் மிகப்பெரும் குப்பைக்கிடங்கு கொடுங்கையூரில்தான் இருக்கின்றன. மின் சக்தி மையங்கள் வட சென்னையில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன." என்றவர் இறுதியாக...

லாரிகள்
லாரிகள்

"காற்று மாசுபாட்டு ஆய்வென்பது சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாட்டின் வேறுபாட்டை துல்லியமாகக் கூறுவது போல் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் எங்கு மாசுபாடு அதிகம் இருக்கிறதோ அதனைக் குறைப்பதற்கான சாத்தியங்களை நோக்கி நகர முடியும். நகரின் அனைத்து சாலைகளும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளுக்குண்டான மாசுபாட்டு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது, குப்பை மேலாண்மை செய்வது, கட்டடப்பணிகளால் எழும் தூசினை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளைக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். மரங்கள் மட்டுமில்லாமல் புல் தாவரங்களும் அதிக அளவில் வளர்ந்தால்தான் பசுமைப்பரப்பின் எண்ணிக்கை பெருகும். சென்னையில் காற்று மாசுபாடு குறைந்து விட்டது என்று இதனைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ளாமல் உண்மையாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்வதே மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கியப் பணி" என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.