Published:Updated:

`காத்த வர விடு! மூச்ச விட விடு!' காற்று மாசுக்கு எதிராகப் பாடல் வெளியிட்ட ஜஸ்டிஸ் ராக்ஸ்

சென்னை காற்று மாசுபாடு
சென்னை காற்று மாசுபாடு

"பிரச்னைகளைப் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால், அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதுதான் பெரிய சிக்கலாக உள்ளது."

வடசென்னை இளைஞர்களின் வாழ்வை வளமாக்கியதில் விளையாட்டுகளுக்குப் பெரும் பங்குண்டு. கால்பந்து, தடகளம், கபடி எனப் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வத்தோடு பங்கு பெறும் வடசென்னை இளைஞர்கள், அந்த விளையாட்டின் மூலமாகவே அரசு வேலைகளையும் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைகிறார்கள்.

காற்று மாசுபாடு எப்படி நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது.
மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்
டாப் 10 பிரச்னைகள் - மாசு சூழ் உலகு

இத்தனை ஆண்டுகளாக, உடல் உழைப்பின் மூலமாக திறமையின் மூலமாக அத்தகைய முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கிக்கொண்டிருந்தனர். ஆனால், இனி அது சாத்தியமாகுமா என்ற அச்சத்தை, அதிகரித்துக்கொண்டிருக்கும் காற்று மாசுபாடு ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மொத்தம் மூன்று காற்றுத்தரக் கண்காணிப்பு மையங்கள் உள்ளன. அதில், இரண்டு தென் சென்னைப் பகுதியில் அமைந்துள்ளன. ஒன்று மட்டுமே வடசென்னையில் உள்ளது. அதிகமான தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் ஒரேயொரு கண்காணிப்பு மையத்தைப் பொருத்தியிருப்பதால், மற்ற இரண்டு மையங்களிலும் சராசரியாகவுள்ள காற்றுத்தரத்தை அடிப்படையாக வைத்து சென்னையில் காற்று மாசுபாடு தீவிரமாக இல்லையென்று அரசு சொல்கிறது.

உண்மையில், அதிகத் தொழிற்சாலைகள் உள்ள வடசென்னை பகுதியில் தீவிரமாக மாசடைந்துள்ள காற்று அங்குள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான உடலும் சீரான சுவாசமும் விளையாட்டிற்கு மிகவும் முக்கியம். ஆனால், சுவாசத்தில் ஏற்படும் கோளாறு அவர்களுடைய விளையாட்டுத் திறனை குறைத்துக்கொண்டிருக்கிறது. தங்களுடைய தாத்தாக்களைப் போல், தந்தைகளைப் போல் தாங்களும் விளையாட்டில் சிறந்து விளங்க முடியாதோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் வட சென்னை இளைஞர்கள்.

`ஜஸ்டிஸ் ராக்ஸ்' இசைக் குழுவினர் இந்த அச்சத்தை மையமாக வைத்து, சென்னையில் தீவிரமாகிக்கொண்டிருக்கும் காற்று மாசுபாடு குறித்த பாடலை நேற்று வெளியிட்டனர். `கொடைக்கானல் வோன்ட்' என்ற பாடலைப் பாடிய சோஃபியா அஷ்ரஃப், 'காலா' படத்தில் `நிக்கல் நிக்கல்' என்ற பாடல் உட்பட 100 பாடல்களுக்கும் மேல் எழுதிய ஜி.லோகன் ஆகியோர் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

`காத்த வர விடு' பாடல் குழுவினர்
`காத்த வர விடு' பாடல் குழுவினர்
Shivani Sekar

கபடி வீரர்களுக்கு நீண்ட நேரத்திற்கு மூச்சடக்கும் திறமை குறைந்து வருவதால், அவர்களுடைய திறன் மழுங்கிக் கொண்டிருப்பது குறித்து, வடசென்னையைச் சேர்ந்த கபடி ஆசிரியர்கள், விவரித்த சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் பாடல் உருவாகியுள்ளது. 3,300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 7 அனல் மின் நிலையங்கள், கொடுங்கையூரில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய குப்பைமேடு, பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம், மூன்று துறைமுகங்கள் மற்றும் அவற்றை நோக்கி 24 மணிநேரமும் படையெடுத்துக்கொண்டிருக்கும் கனரக வாகனங்கள் என வடசென்னை, தொழிற்சாலைகள், போக்குவரத்துகள் காரணமாக ஏற்படும் காற்று மற்றும் நீர் மாசுபாட்டால் நிரம்பி வழிகிறது. இதனால் ஏற்படும் தாக்கம், வடசென்னை மக்களின் வாழ்வியலில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை `காத்த வர விடு' பாடல் விவரிக்கின்றது.

அரசு குழந்தை நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் மற்றும் `மெட்ராஸ்' படத்தில் வில்லனாக நடித்த நடிகர் `சார்லஸ் வினோத்' ஆகியோர் இந்தப் பாடலை நேற்று (12-01-2020) வெளியிட்டனர்.

பாடலை வெளியிட்டுப் பேசிய ரெக்ஸ் சற்குணம், "காற்று மாசுபாடு எப்படி நம் அன்றாட வாழ்வைப் பாதிக்கிறது என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது. வட சென்னை மட்டுமன்றி, இது அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். கூடிய விரைவில், இந்தப் பிரச்னை அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமடையும். காற்றில் கலந்திருக்கும் கந்தக-டை-ஆக்ஸைடு மாதிரியான நச்சு வாயுக்கள் நம்முடைய நுரையீரலைப் பாதிக்கிறது. அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தீவிர சுவாசக் கோளாறுகளைக் கொண்டுவரும். வாழ்க்கைத் தரம் மட்டுமன்றி, வாழ்நாளையுமே காற்று மாசுபாடு குறைத்துவிடும் ஆபத்து அதிகமுள்ளது.

மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்
மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்
Shivani Sekar

காற்று மாசுபாடு, நுரையீரல் பாதிப்புகள் மட்டுமன்றிக் குழந்தைகளின் உடல் வளர்ச்சியையும் உயிரியல் ரீதியாகப் பாதிக்கிறது. இதனால் அவர்களுடைய உணர்ச்சிகள் மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சி தடுக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் அதிகளவில் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அதைப் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம். ஆனால், எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதுதான் பெரிய சிக்கலாக உள்ளது. நம்முடைய மக்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு, அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வைக்கவேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியின்போது, திருவொற்றியூர் பகுதியில் வாழும் ஹைருன்னிஷா, சந்தோஷ், கார்த்திகேயன் ஆகிய மாணவர்கள், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சூழலியல் சிக்கல்களை, காற்று மாசுபாட்டின் தீவிரத்தை வரைபடமாக வரைந்து விவரித்தனர். தொழிற்சாலைகள் சூழ்ந்திருக்கும் பகுதியில் தம் அன்றாட வாழ்வைக் கடத்துவது எத்தனை கடினம் என்பதை மாணவர்களுடைய விவரணை தெளிவாக எடுத்துக்கூறியது. பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுகளைக் கொட்டுவது, அதிகாலை நேரங்களில் கடற்கரையில் கழிவுகளைக் கொட்டுவது எனத் தொழிற்சாலைகள் செய்யும் அட்டூழியங்களையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மாணவர்கள் விவரித்தனர்.

பாடல் வெளியீடு
பாடல் வெளியீடு
Shivani Sekar
1 கி.மீ உயர சாம்பல் புகை; 6,000 பேரை பலிகொண்ட வரலாறு..பிலிப்பைன்ஸை மீண்டும் பதறவைக்கும் டால் எரிமலை!

மணலி மற்றும் எண்ணூர் போன்ற இடங்கள் மாசடைந்த காற்றால் மூடப்பட்டுள்ளன. நகரத்தின் சில இடங்கள், அதிகப்படியான நேரங்களில் ஆபத்தான அளவுக்கு மோசமான காற்றுத் தரத்தைக் கொண்டுள்ளது. தேசிய காற்றுத் தரம் கண்காணிக்கும் திட்டம் மூலம் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் நிறுவப்பட்ட மூன்று காற்றுத்தரம் கண்காணிப்பு மையங்களில் ஒன்றான மணலியில் காற்றின் தரம் தொடர்ந்து தரமற்றதாகவே பதிவாகிக் கொண்டிருக்கிறது. 2019-ம் ஆண்டின் 60 சதவிகித நாள்களுக்குக் காற்றுத் தரம் அங்கு மிக மோசமாக இருந்துள்ளது.

இந்தச் சிக்கல்களை எடுத்துரைக்கும் `காத்த வர விடு' பாடல், மக்கள் மத்தியில் காற்று மாசுபாட்டுப் பிரச்னையின் தீவிரத்தையும் அதை உடனடியாகக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றது.

அடுத்த கட்டுரைக்கு