Election bannerElection banner
Published:Updated:

Lightning Strikes: பீகார், உத்தரப்பிரதேசத்தில் பலியான 107 உயிர்கள்... காலநிலை மாற்றம் காரணமா?

மின்னல்
மின்னல் ( Pixabay )

Lightning Strikes: மின்னல் தாக்குதல்களைக் காலநிலை மாற்றத்தின் விளைவு என்று சொல்ல முடியாது. இருப்பினும், 2020-ம் ஆண்டுக்கான பருவ காலம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே சேதங்களும் தொடங்கிவிட்டன.

கடந்த வாரம் பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் கடுமையான இடி மற்றும் மின்னல் தாக்குதல் ஏற்பட்டது. அப்போது நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள், வெட்டவெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் என மின்னல் தாக்கி பீகாரில் 83 பேர், உத்தரப் பிரதேசத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு மாநிலங்களிலும் உள்ள 31 மாவட்டங்களில் இந்த மின்னல் தாக்கியுள்ளது. இரண்டு மாநில அரசுகளும் மக்களை இடி, மின்னல் ஆபத்து இருப்பதால் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன. பீகார் மாநில முதலமைச்சர் நித்தீஷ் குமார், உயிரிழந்த குடும்பங்களுக்குத் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2,000 பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனர். இத்தகைய மரணங்கள் பீகார் மாநிலத்தில்தான் அதிகமாக நடக்கின்றன. மின்னல் தாக்கத்தின் வீரியம் முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தீவிரமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். வேகமெடுத்து வரும் காலநிலை மாற்றம்தான் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் என்று ஒருதரப்பு கூறுகிறது.

மின் அணுக்கள் காற்றை நன்கு வெப்பமேறிய பிளாஸ்மாவாக மாற்றும்போது வெளியாகும் எக்கச்சக்க ஆற்றல்தான் மின்னல்.
வெப்பமயமாதல்
வெப்பமயமாதல்
Pixabay

இந்தச் செயல்பாட்டின்போது, வளிமண்டலத்திலுள்ள வாயுக்கள் சந்திக்கும் அதிர்வலைகளின் விளைவுதான் இடி. இதில் மூன்று வகைகள் உள்ளன. முதலாவது, மேகத்துக்கு உள்ளேயே நடக்கும். இரண்டாவது, ஒரு மேகத்துக்கும் மற்றொரு மேகத்துக்கும் இடையே நடைபெறும். இதில் மின்னல் ஒரு மேகத்திலிருந்து இன்னொரு மேகத்துக்குத் தாவும். மூன்றாவது வகையில், ஒரு மேகத்தில் ஏற்படுகின்ற மின்னல், அதிலிருந்து கீழிறங்கி நிலத்தில் இறங்கும். இந்த மூன்றாவது வகைதான், மிகவும் ஆபத்தான, உயிரைப் பறிக்கக்கூடிய மின்னல்.

உயரும் வெப்பமயமாதல் மற்றும் காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் ஆகியவற்றால் குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கூறிய மூன்றாவது வகை மின்னல் தாக்குதல்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகின்றது. அமெரிக்காவைச் சேர்ந்த ’American Association for The Advancement of Science’ என்ற அமைப்பு 2014-ம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வில் பூமியின் வெப்பநிலை 1 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்ததால், மின்னல் தாக்குதல்களும் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுவே, 2100-ம் ஆண்டின்போது பூமியின் வெப்பநிலை இப்போதிருப்பதைவிட 4 சதவிகிதம் அதிகரிக்கும் என்று புவி வெப்பமயமாதல் ஆய்வாளர்களின் கணிப்பை முன்னிறுத்தி, மின்னல் தாக்குதல் விகிதம் தற்போது இருப்பதைவிட 50 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கின்றது. இப்போதே உலகம் முழுவதும் ஆண்டுக்குச் சுமார் 25 மில்லியன் மின்னல் தாக்குதல்கள் ஏற்படுகின்றன.

41,000 மின்னல்கள்
2019-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி, ஒரே நாளில்...
இடி-மின்னல்:`பீகார், உ.பி-யில் 100க்கும் மேற்பட்டோர் பலி!’ - பிரதமர் இரங்கல்

ஆனால், இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப், "இடி, மின்னல் தாக்குதல்களுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. மின்னல் வெளிப்படும்போது மக்கள் வெட்டவெளியில், நீரில், மரத்தடியில் என்று இருந்திருப்பார்கள். அதனால்தான் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கூட, ஏப்ரல் மாதத்துக்கு மேல் இதுபோன்ற இடி, மின்னல் நிறைய ஏற்படும். அதேபோலத்தான் பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதம் முதலே இடி, மின்னல்களும் அப்போதிருந்தே அதிகரிக்கும். ஒவ்வோர் ஆண்டும் இது நடப்பதுதான்.

வெப்பச்சலனம் அதிகமுள்ள பகுதிகளில், இவை அதிகமாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் இது வழக்கமானதுதான். முன்னெச்சரிக்கை இல்லாத நேரங்களில் மக்கள் இதுபோன்றவற்றுக்குப் பாதிக்கப்படுகிறார்கள். நகரங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் தொடர்ந்து நடக்கும். இங்கு கட்டடங்களும் உயரமாக இருப்பதால் மக்கள் பாதிக்கப்படுவது குறைவு. ஆனால், கிராமங்களில் அப்படியல்ல. முன்னெச்சரிக்கையும் கிடையாது, பாதுகாப்பு நடவடிக்கைகளும் கிடையாது. அதனால், அங்கு பாதிப்புகள் அதிகமிருக்கின்றன. இதற்கும் காலநிலை மாற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. ஒரேயொரு நிகழ்வை வைத்து, அதைக் காலநிலை மாற்றம் என்று சொல்லிவிட முடியாது. மற்ற இயற்கைப் பேரிடர்களைப் போலவே இடி, மின்னல் குறித்தும் மக்கள் முன்னதாகவே எச்சரிக்கப்பட வேண்டும். அவர்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேன்டும்" என்று கூறினார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்
2019-ம் ஆண்டிலேயே இந்தியா முழுக்கக் காலநிலை மாற்றத்துக்கு 1,659 உயிர்களைப் பலி கொடுத்துள்ளோம்.

இந்த ஆண்டில் மட்டுமல்ல, மின்னல் தாக்குதலின் வீரியம் கடந்த ஆண்டிலேயே தீவிரமாகத்தான் இருந்தது. 2019-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதியன்று, ஒரே நாளில் இந்திய நிலப்பரப்புக்குள் மொத்தமாக 41,000 மின்னல்கள் தாக்கியுள்ளன என்று பூனேவில் அமைந்திருக்கும் இந்திய வானியல் நிறுவன ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் தொடங்கிய மேற்கத்திய தட்பவெப்பநிலை மற்றும் வானிய இடையூறுகளே இந்த நிலை உருவாகக் காரணமென்று கணித்துள்ளனர். அதேபோல், அதற்கு முந்தைய 2018-ம் ஆண்டிலும் மின்னலின் தாக்குதல் தீவிரமாகவே இருந்துள்ளது. அந்த ஓராண்டில் மட்டுமே சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் தேசியளவில் இதற்குப் பலியாவோரின் எண்ணிக்கை அஞ்சத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டு மே மாதமும்கூட, ஆந்திரப் பிரதேசத்தில் ஒரே நாளில் சுமார் 40,000 மின்னல்கள் பதிவாகியுள்ளன என்றும் வானிலை ஆய்வு மையத் தரவுகள் கூறுகின்றன.

பூமியில் இறங்கும் மின்னல்களின் எண்ணிக்கை அதிகமாவதால், அதன் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இதுபோன்ற விபத்துகளுக்கு அதிகமாக விவசாயிகளே உயிரிழக்கின்றனர். ஏனென்றால், பெரும்பாலும் பருவ மழைக்காலங்களில் விவசாய நிலங்களைப் பராமரிக்க அவர்கள் அதிகமாக வெளியே நிலத்தில் வேலை செய்கின்றனர். அப்போது ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து மாநில அரசுகள் வெளியிடும் எச்சரிக்கை அவர்களைச் சென்றடையப் போதிய வசதிகள் அவர்களிடம் இல்லாததே முக்கியக் காரணம். விவசாயிகளுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் குறித்துக் கற்றுக்கொடுப்பது மற்றும் எச்சரிக்கை வழங்குவதைப் பஞ்சாயத்து அளவில் கொண்டுவருவதுமே விவசாயிகள் மின்னல் தாக்கி உயிரிழப்பதைக் குறைக்க வழிவகுக்கும். அவர்களுக்கு அடுத்ததாக, இதுபோன்ற ஆபத்தான தருணங்களில் அக்கறையின்றி வெட்டவெளியில் படகு சவாரி செல்வது, குழந்தைகளைப் பாதுகாப்பாக வைக்காமல் வெளியே விடுவது போன்றவை மரணங்களுக்குக் காரணமாக அமைகின்றன.

இடி, மின்னல் தாக்குதல்
இடி, மின்னல் தாக்குதல்
Pixabay

மாநில அரசுகள், வானிலை குறித்தத் தகவல்களை வெளியிடும்போதே மக்களுக்கு மின்னல் குறித்த எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும். மக்களும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டதால்தான், ஒடிசாவில் மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் விகிதம் 31 சதவிகிதம் குறைந்துள்ளது. முன்னர் மின்னலுக்குப் பலியாவோரின் எண்ணிக்கை ஒடிசாவில் அதிகமாக இருந்தது. 2017-18-ம் ஆண்டில் அங்கு சுமார் 465 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கு அடுத்த ஆண்டில், ஒடிசா பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநிலம் முழுக்க 6 மின்னல் உணர்கருவிகள் பொருத்தப்பட்டன. அதன்விளைவாக, 2018-19-ம் ஆண்டில் இறப்பு எண்ணிக்கை 320 ஆகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 6 பேர் ஒடிசாவில் மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.

மின்னல் தாக்குதல்களைக் காலநிலை மாற்றத்தின் விளைவு என்று சொல்ல முடியாது. இருப்பினும், 2020-ம் ஆண்டுக்கான பருவ காலம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே சேதங்களும் தொடங்கிவிட்டன. அஸ்ஸாம், மேகாலயா, வடக்கு பங்களாதேஷ், பூட்டான், சிக்கிம், நேபாள் போன்ற பகுதிகள் ஏற்கெனவே வெள்ளச் சேதங்களுக்கு ஆளாகத் தொடங்கிவிட்டன.

அஸ்ஸாமில் 23 பேர் மற்றும் நேபாளில் 18 பேர் உட்படத் தெற்காசியாவில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாகக் கணிக்கப்படுகிறது. சிக்கிம் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 19 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அந்த மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருந்த பாஸ்ஸிடாங் என்ற கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

இயற்கைப் பேரிடர்
இயற்கைப் பேரிடர்
Pixabay

காலநிலை மாற்றம் தீவிர விளைவுகளைக் கொண்டுவரும் என்று ஆய்வாளர்கள் எவ்வளவோ எச்சரித்தனர். அவர்களுடைய எச்சரித்த அனைத்துமே இன்று நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. அதற்கான விளைவுகளை எளிய மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆய்வாளர்கள், "குறைந்த நாள்களில் அதிக மழை கொட்டித் தீர்க்கும்" என்றனர். அதை இன்று சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். 2019-ம் ஆண்டிலேயே இந்தியா முழுக்கக் காலநிலை மாற்றத்துக்கு 1,659 உயிர்களைப் பலி கொடுத்துள்ளோம். அதைக் கடந்து 2020-ம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைத்த தொடக்கத்திலேயே நாம் மிகப்பெரிய பேரிடரில் சிக்கினோம். அந்தப் பேரிடர் காலகட்டம் இன்னமும் நீண்டுகொண்டிருக்கும் நிலையில், எளிய மக்கள் சந்திக்கும் இயற்கைச் சீற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து அரசுகள் விரைந்து நிலைமைக்குத் தக்க திட்டமிடுதலைச் செய்ய வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு