Published:Updated:

`கோதாவரி-காவிரி இணைப்பு ஆந்திரா, தெலங்கானாவின் அஜெண்டாவிலேயே இல்லை!' - பிரகாஷ் ராவ்

சென்னையில் தென்னிந்திய நீர்வள ஆதாரங்கள் மீட்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரள, தமிழக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தெலங்கானா நீர்வள மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் வி.பிரகாஷ் ராவ் கலந்துகொண்டார். அவரிடம் பேசினோம்.

காளேஸ்வரம் திட்டம்
காளேஸ்வரம் திட்டம்

``தெலங்கானா மாநிலத்தில் நீர் மேலாண்மைத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அறிந்தோம். உண்மையா?"

தென்னிந்திய நீர்வள ஆதாரங்கள் மீட்பு பற்றிய கூட்டம்
தென்னிந்திய நீர்வள ஆதாரங்கள் மீட்பு பற்றிய கூட்டம்

"உண்மைதான். 2015-ம் ஆண்டு `மிஷன் காகதீய திட்டம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பயனடையும் வகையில் நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கினோம். தெலங்கானாவில் 46,000 நீர்நிலைகள் உள்ளன. இதைச் சீரமைக்க 23,000 கோடி ரூபாய் ஒதுக்கினோம். மக்கள் பங்கேற்புடன் செயல்படுத்தியதால் 18,000 கோடி ரூபாய் செலவில் முடித்துவிட்டோம். இதன்மூலம் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாகப் பாசன வசதி பெற்றுவருகின்றன. இந்தாண்டு ஏற்பட்ட வறட்சியிலும் தெலங்கானாவில் குடிநீருக்கு எங்கேயும் பஞ்சம் ஏற்படவில்லை. அந்த வகையில் இத்திட்டம் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.”

"தமிழக முதல்வர் கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு பற்றி அதிகம் பேசுகிறார். அதைச் செயல்படுத்துவதற்கு மும்முரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் இதை எப்படிப் பார்க்கின்றன?”

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

``ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளிடம் கோதாவரி-காவிரி இணைப்பு பற்றி எந்த அஜெண்டாவும் இதுவரை இல்லை. தமிழக அரசு மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசுடன் இணக்கமாக இருக்கிறது. ஒருவேளை இதன்மூலமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தெலங்கானா, ஆந்திர மாநில அரசுகளை வலியுறுத்தி இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருக்கிறது.”

"கோதாவரி-காவிரி இணைப்பு தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமா?”

Vikatan

"கோதாவரி ஆற்றில் ஆண்டுக்கு சுமார் 1,000-3,000 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. இதில் குறைவாக மழைபெய்தால் ஆண்டுக்கு 1,000 டி.எம்.சி நீரும், மழை நன்றாகப் பெய்தால் 3,000 டி.எம்.சி நீரும் செல்கிறது. நதியென்றால் அதில் தண்ணீரின் போக்கு இருக்க வேண்டும். ஆற்றில் ஓடும் தண்ணீரின் ஒரு பகுதியை கிராவிட்டி போர்ஸ் மூலமாகத் தண்ணீரைத் திருப்பலாம். இந்தத் தண்ணீரைக் கால்வாய் அல்லது சுரங்கப் பாதை அமைத்துக்கொண்டு செல்லலாம். மற்றபடி நதியின் போக்கையே திருப்புவது சாத்தியமற்றது. இன்னொன்று கடலோர ஆந்திரா, சித்தூர், நெல்லூர் அடங்கிய ராயலசீமா. இந்தப் பகுதிகளைத் தாண்டிதான் கோதாவரி நீர் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். ஆனால், இந்தப் பகுதிகளின் நீர்த்தேவையே பெரிய அளவில் இருக்கிறது. இதையெல்லாம் கடந்து தமிழ்நாட்டுக்கு எப்படித் தண்ணீரைக் கொண்டுசெல்வது என்பதைப் பற்றி ஆராய வேண்டும்.”

"நாட்டின் மிகப்பெரிய திட்டமான காளேஸ்வரம் பாசனத் திட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?”

பிரகாஷ் ராவ்
பிரகாஷ் ராவ்

"இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிலே இந்தத் திட்டத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆற்றுத் தண்ணீரை ரிவர்ஸ் முறையில் கொண்டுசெல்வது, சுரங்கப்பாதை வழியாகப் பூமிக்கு அடியில் தண்ணீரைத் தேக்குவது, நீர்த்தேக்கங்கள் கட்டுவது, தடுப்பணைகள் மூலம் நீரைச் சேமிப்பது எனப் பல சிறப்பம்சங்கள் இத்திட்டத்துக்கு உண்டு. ஆற்றில் எங்கு தண்ணீர் கிடைக்கிறதோ, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி தண்ணீர் கிடைக்காத பகுதிகளுக்கு அனுப்பி, அதன்மூலம் பாசனம் மேற்கொள்வதற்கு வசதியாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதோடு தண்ணீர்ப் பற்றாக்குறையாக இருக்கும் நேரங்களில் பயன்படுத்தும் விதமாகவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோதாவரி ஆற்றின் குறுக்கே 80,000 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 தடுப்பணைகள், 19 நீர்த்தேக்கங்கள், 20 லிப்ட்கள், 203 கி.மீட்டருக்குச் சுரங்கப்பாதைகள், 1,531 கி.மீட்டருக்குக் கால்வாய்கள் எனப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் 45 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 5,000 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படும். 2015-16 பட்ஜெட்டில் 60 சதவிகித நிதி பாசனத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ்தான் இந்தக் காளேஸ்வரம் பாசனத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தெலங்கானாவில் உள்ள 20 மாவட்டங்கள் பயன்பெறும். ஹைதராபாத் மாநகரின் வருங்கால தண்ணீர்த் தேவையும் பூர்த்தியாகும். தெலங்கானாவில் 13 மற்றும் 14-ம் நூற்றாண்டில் காகதீயா என்ற மன்னர், நீர் மேலாண்மைக்காகச் சிறப்பாகத் திட்டங்களைச் செயல்படுத்தினார். அவரின் நினைவாக இத்திட்டத்துக்கு காகதீயா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.”

இந்தக் கூட்டத்தின் கடைசி நாளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கூட்டுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் குருசாமி நம்மிடம் பேசினார்.

"குழுவின் மூலம் உருவாக்கப்பட்ட கருத்துப்படி தமிழ்நாடு அரசு, கோதாவரி-காவிரி இணைப்பு குறித்து சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. கோதாவரி நீர் வேண்டுமென்றால், மத்திய அரசுடன் பேசி இதைத் தேசிய செயல்திட்டமாக அறிவிக்க வேண்டும். பிறகு கோதாவரி ஆறு உருவாகும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநில அரசுகளோடும் இதன் செயல்திட்டம் குறித்து தமிழக அரசு பேச வேண்டும். ஏனென்றால் தெலங்கானா மாநில அரசிடம் மகாநதிக்குத் தண்ணீர் கொடுப்பதும், வறட்சி பாதித்த நேரங்களில் ஆந்திராவுக்குத் தண்ணீர் கொடுப்பதுதான் அதன் அஜெண்டாவில் உள்ளது. கோதாவரி நீரைத் தமிழ்நாட்டுக்குக் கொடுப்பது தொடர்பாக எந்த அஜெண்டாவும் இல்லை. இதைத் தமிழக அரசு வலியுறுத்தினால் மட்டுமே அந்தந்த மாநில அரசுகள் இதுகுறித்து ஆலோசித்து தங்களுடைய அஜெண்டாவில் சேர்க்கும்.

இதோடு தென்னிந்திய நதிகள் சம்பந்தமாகச் சில தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளோம். இத்தீர்மானத்தின்படி `காவிரி நீர் பாராளுமன்றம்' என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்படும். இதன்மூலம் காவிரி நீர் முழுமையாகப் பெறும் வகையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின்படி தண்ணீரின் அளவைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கொண்ட குழு உருவாக்கப்படும். அந்தந்த ஆண்டில் பெறும் மழை அளவைப் பொறுத்து தண்ணீர் பெறுவதற்கு இந்தத் தன்னார்வக் குழுவின் பிரதிநிதிகள் முயற்சி எடுப்பார்கள். தீபகற்ப நதிகளின் தண்ணீர் பற்றிப் பேசி முடிவெடுக்க ஒரு கமிட்டி உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களின் தண்ணீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தக் கமிட்டி செயல்படும்” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் செந்தூர் பாரி பேசும்போது, "தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு அண்டை மாநிலங்களைக் குறை சொல்வதைக்காட்டிலும், அறிவியல் முறையில் தீர்வு காண்பதுதான் சிறந்தது. அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

Vikatan

இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் சுந்தர விமல்நாதன், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.