Published:Updated:

ஊரடங்கால் தூய்மையடைந்த கங்கை... பிரதமரின் வார்த்தையை நிறைவேற்றிய கொரோனா!

கங்கை நதி
கங்கை நதி

கங்கை நதி, கடந்த 10 நாள்களில் அந்த நிலை திடீரென்று மாறி நதி பொலிவுறத் தொடங்கியுள்ளது.

கொரோனோ பரவலைத் தடுக்க, மத்திய அரசு ஆலோசித்து மேற்கொண்ட வலுவான முடிவு ஊரடங்கு உத்தரவாகும். இந்த உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பினும் இந்தக் காலகட்டத்தில், இந்நடவடிக்கை அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இதன்தாக்கம் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் மீது மட்டுமன்றிச் சுற்றுச்சூழலிலும் சில மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளது. அதை மெய்ப்படுத்தும் விதமாகக் கங்கை நதி தூய்மையடைந்தது எனக் கூறப்படுகிறது.

மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பெய்த மழையின் காரணமாக கங்கை நதியின் நீர்மட்டமும் சற்று உயர்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொள்ளும்போது நதி தூய்மைப்படும் அளவும் உயர்ந்துள்ளது.
பி.கே மிஷ்ரா, இந்திய தொழில்நுட்பக் கழகம் பல்கலைக்கழகப் பேராசிரியர்

இந்தியாவின் தேசிய நதியான கங்கை, வருத்தமளிக்கும் விதமாகக் கடந்த சில ஆண்டுகளாகக் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளால், மிக மோசமாக மாசடைந்து வருகிறது. ஆனால், கடந்த 10 நாள்களில் அந்த நிலை திடீரென்று மாறி நதி பொலிவுறத் தொடங்கியுள்ளது.

இந்தியத் தொழில்நுட்பக் கழகம் பல்கலைக்கழகப் பேராசிரியரான முனைவர். பி.கே மிஷ்ராவின் கூற்றுப்படி, "இந்த முன்னேற்றம் கொரோனோ பரவலைத் தடுக்க அரசு அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவின் அடிப்படையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட விரும்பத்தக்க விளைவாகும்" என்று கூறியுள்ளார். கங்கை நதியின் பத்தில் ஒரு பங்கு மாசு, தொழிற்சாலைக் கழிவுகளால்தான் ஏற்படுகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் விளைவாக நதியின் நிலைமை மாறி, சற்று முன்னேறி உள்ளது. இது, மிக முக்கியமான முன்னேற்றமாகும். கிட்டத்தட்ட 40 முதல் 50% வரை முன்னேற்றம் கண்டுள்ளதுள்ளது" என மிஷ்ரா, ANI செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

மேலும், ``மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பெய்த மழையின் காரணமாக, கங்கை நதியின் நீர்மட்டமும் சற்று உயர்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொள்ளும்போது நதி தூய்மைப்படும் அளவும் உயர்ந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

வாரணாசி
வாரணாசி

இதை மெய்ப்படுத்தும் வகையில் வாரணாசியில் வசிக்கும் மக்களும் இந்த முன்னேற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவால் சுற்றுச்சூழல் மாசுபாடு கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தினால் ஏற்படும் மாசுபாடு தற்போது இல்லை. காற்றின் தரம் உயர்ந்து வருவதால் இமாச்சல பிரதேசத்தில் உள்ள இமயமலைத் தொடரின் ஒரு பகுதியான தௌலாதர் சிகரம், பஞ்சாபின் ஜலந்தர் பகுதியிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு