Published:Updated:

லாக்டௌனால் வீழ்ச்சியடையும் பழங்குடியினப் பொருளாதாரம்... அரசு செய்வது என்ன? செய்ய வேண்டியது என்ன?

பழங்குடிகள்
பழங்குடிகள் ( AP )

லாக்டௌன் தொடங்கும் முன்னர், ஒடிஷாவிலுள்ள தர்மகார் என்ற கிராம மக்களுக்கு பூரியிலுருந்து மூங்கிலுக்கான ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக அதை ஆர்டர் செய்தவர்களின் கெடு முடியும் முன்னரே லாக்டௌன் தொடங்கிவிட்டது.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியக் காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடியின மற்றும் காடுசார்ந்த 30 கோடி மக்களின் சமூகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை வனப்படு பொருள்கள். மரம் சார்ந்த பொருள்கள், தேன், மூலிகைப் பொருள்கள், புற்கள் என்று காடுசார்ந்த பல பொருள்களைச் சேகரித்து, விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் பயனடைந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய இந்தச் சமூகப் பொருளாதாரம் மூலம், இந்தியப் பொருளாதாரத்தில் காடுசார் பொருளாதாரத்திற்குக் கிடைத்துள்ள மதிப்பு ஆண்டுக்கு 20,500 கோடி ரூபாய்.

ஒரு கிலோ இலுப்பைக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலை, 30 ரூபாய். ஆனால் சந்தையோ வர்த்தகமோ இல்லாததால், அதன்விலை 20 ரூபாயாகக் குறைந்துவிட்டது.

இந்த ஆண்டில், இதற்கான சந்தை முற்றிலும் முடங்கி, சாலையில் கொட்டிய மழைநீரைப் போல் தேங்கிக் கிடக்கிறது. முதல் 21 நாள் லாக்டௌனை மேலும் நீட்டித்தபோது, மத்திய அரசு வனப்படுபொருள்கள் சேகரிப்பு மற்றும் வர்த்தகத்துக்கு விலக்கு அளித்திருந்தது. ஆனால், இன்னமும் இந்த மக்களுடைய வாழ்வாதாரம் தேங்கிய நீராகவே இருக்கின்றது. அதற்குக் காரணம், அரசின் திட்டங்கள் நடைமுறையில் மக்களைச் சென்றடைய அதிக நேரம் எடுப்பது ஒரு காரணமென்றால், உற்பத்தி செய்யப்படும் வனப்படு பொருளுக்கான சர்வதேச சந்தை முடங்கிக் கிடப்பது மற்றுமொரு காரணம். பழங்குடி மக்கள் பொருள்களை விற்பனைக்குக் கொண்டு வந்தாலும்கூட, கொரோனா பாதிப்புகளால் அமெரிக்கா, ஸ்பெயின் என்று இதற்கான சந்தை அதிகமுள்ள நாடுகளுக்குப் பொருள்களைக் கொண்டு சேர்க்க முடிவதில்லை.

அரக்கு, மருந்துத்துறையிலும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. கடந்த 2018-19 ஆண்டில் இந்தியாவிலிருந்து 474 கோடி ரூபாய் மதிப்புள்ள அரக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. அரக்கு, குறிப்பிட்ட தட்பவெப்பநிலையில் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அது பயனற்றதாகிவிடும். இப்போது சந்தைகள் முடங்கி, போக்குவரத்து செயல்படாமலிருப்பதால், சேகரிக்கப்பட்ட அரக்கு விற்பனையாகாமல் முடங்கியுள்ளது. அது, பெரிய இழப்புகளை ஏற்படுத்துகின்றது. அரக்கு மட்டுமல்ல, பிப்ரவரியிலிருந்து அனைத்து சர்வதேச வர்த்தகமும் கிட்டத்தட்ட முற்றிலும் முடங்கிக் கிடப்பதால் அரக்கு உட்பட அனைத்து வனப்படு பொருள்களின் வர்த்தகமும் சேர்ந்தே முடங்கிக் கிடக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை
மேற்குத் தொடர்ச்சி மலை
Pixabay

லாக்டௌன் தொடங்கும் முன்னர், ஒடிஷாவிலுள்ள தர்மகார் என்ற கிராம மக்களுக்கு பூரியிலிருந்து மூங்கிலுக்கான ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது. அந்த ஆர்டருக்குத் தேவையான அளவு மூங்கிலை அவர்கள் சேகரித்தார்கள். துரதிர்ஷ்டவசமாக அதை ஆர்டர் செய்தவர்களின் கெடு முடியும் முன்னரே லாக்டௌன் தொடங்கிவிட்டது. இதன் விளைவாக, ஆர்டர் கொடுத்தவரால் போக்குவரத்து ஏற்பாடு செய்து அந்தச் சரக்கை எடுத்துச் செல்ல முடியவில்லை. அவையனைத்தும் அப்படியே கிடக்கின்றன. மூங்கில், அரக்கு போலவே, பூக்களின் விற்பனையும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இலுப்பைப் பூக்களின் விலை 30 சதவிகிதம் சரிந்துள்ளது. ஒரு கிலோ இலுப்பைக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலை, 30 ரூபாய். ஆனால் சந்தையோ வர்த்தகமோ இல்லாததால், அதன்விலை 20 ரூபாயாகக் குறைந்துவிட்டது. அதுவும் சாலையோரங்களிலோ அதற்கு அருகிலோ வாழ்பவர்களால் மட்டுமே அந்த விலைக்கு விற்கமுடிகிறது. காடுகளுக்குள் வாழும் மக்களுக்கு அதுவும் சாத்தியமில்லை. இலுப்பைப் பூக்களைச் சேகரித்த மக்கள், அதை விற்க வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். லாக்டௌன் காலகட்டமும் பழங்குடியின மக்கள் காடுகளில் வனப்படு பொருள்களைச் சேகரிக்கும் காலகட்டமும் ஒரே நேரத்தில் வந்ததே இந்த இழப்புகளுக்கு முக்கியக் காரணம்.

இவை மட்டுமன்றி பல்வேறு மரம் சாரா பொருள்களின் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இலுப்பை, சல் விதை ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயின் விற்பனை 40 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவற்றுக்கான சந்தை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதையும் தற்போது உறுதியாகச் சொல்ல முடியாத சூழல்தான் நிலவுகிறது. டவுன் டூ எர்த் என்ற அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் இதழுக்குப் பேட்டியளித்துள்ள பழங்குடியின கூட்டுறவுச் சந்தை வளர்ச்சிக்கான அமைப்பின் மேலாண்மை இயக்குநரான பிரவிர் கிருஷ்ணா, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கைவினைப் பொருள்கள் விற்பனையாகாமல் கிடப்பதாகக் கூறியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருள் கண்காட்சி ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15 முதல் 19 வரை நடைபெறும். அது இந்தமுறை நடைபெறவில்லை. கைவினைப் பொருள் விற்பனையைச் சார்ந்து இந்தியாவில் சுமார் 3,00,000 குடும்பங்கள் வாழ்கின்றன.

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள்

காடுகளைச் சார்ந்து வாழும் எளிய மக்களுடைய வாழ்வாதாரமே இந்தப் பொருள்களின் விற்பனையைச் சார்ந்துதான் அமைந்துள்ளது. இந்த நான்கு முதல் ஐந்து மாதங்களில் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம்தான், பெரிதாக வேலைவாய்ப்புகளே இருக்காத குளிர்காலம் மற்றும் மழைக்காலத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுகின்றது. காடுகளைச் சார்ந்து வாழும் 30 கோடி மக்களின் வருமானத்தில் குறைந்தபட்சமாக 20 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 60 சதவிகிதம் வரை வனப்படுபொருள்கள் பங்கு வகிக்கின்றன. ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவை இல்லாத, அரசின் மானியங்கள் கிடைக்கப் பெறாத நிலையில் காட்டுக்குள் சிறுசிறு குக்கிராமங்களில் வாழும் 6,00,000-க்கும் அதிகமான மக்களுக்கு இருக்கின்ற ஒரே வாழ்வாதாரம் இது மட்டும்தான். இவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இதை வைத்தே புரிந்துகொள்ள முடியும்.

உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்; உதவி செய்யும் நல் உள்ளங்கள்! - தீர்வை நோக்கி கோவை பழங்குடி கிராமம்

அத்தகைய ஒரு சாதாரண குடும்பம், மூங்கில் கூடை, துடைப்பம் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதன் மூலமாக வாரத்துக்கு 600 ரூபாய் வருமானம் பார்க்க முடியும். அது தற்போது தடைப்பட்டுள்ளது. கோவிட் 19 ஊரடங்கு காரணமாக, அந்தந்த மாநில அரசுகள் அந்த மக்களுக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி, உப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளன. அவர்கள் அதை வைத்துதான் பிழைத்துக்கொண்டிருக்கின்றனர். கிராம மக்களில் ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் 500 ரூபாய் போடப்பட்டிருந்தாலும் அதை எடுத்துப் பயனடைந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு அருகே வங்கியோ, ஏ.டி.எம் மையங்களோ இல்லை. சர்வதேசச் சந்தை முடங்கிய போதிலும் உள்ளூர்ச் சந்தையை வர்த்தகர்களுடனான சிறு சிறு உடன்படிக்கைகள் மூலம் கிராம சபைகள் சற்று உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் அதை நீண்ட நாள்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அதுவும் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது.

பிரதான் மந்திரி வன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் அவர்களுடைய சொந்தப் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
அர்ஜுன் முண்டா, மத்திய பழங்குடியின அமைசச்ர்

இந்த ஆண்டில் பழங்குடியினப் பொருளாதாரம், 40 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. பழங்குடியின வர்த்தகர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கான இப்போதைய ஒரே ஆதாரமாக விளங்குவது, பீடி தயாரிக்க உதவும் புகையிலை மட்டும்தான். ஆண்டுக்குச் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை பங்கு வகிக்கக்கூடிய புகையிலையை வனப் பொருளாதாரத்தில் 'தங்க இலை' என்று அழைக்கின்றனர். இந்த விகிதம் இந்த ஆண்டில் சற்று குறைந்திருந்தாலும், பெரியளவில் இழப்புகளைச் சந்திக்கவில்லை. டெஹ்ராடூனிலுள்ள இந்திரா காந்தி தேசிய காடுகள் சங்கத்தின் (Indira Gandhi National Forest Academy) தரவுகள், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 2,00,000 டன் புகையிலை உற்பத்தி ஆவதாகக் கூறுகின்றது. இந்த உற்பத்தி ஓரளவுக்குக் குறைந்திருந்தாலும் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை.

இன்றைய சூழலில் புகையிலைக்கான சந்தை மட்டுமே வீழ்ச்சியடையாமல் இருக்கின்றது. அவற்றைச் சுமார் 6 மாதங்கள் வரை பதப்படுத்தி வைத்திருக்க முடியும் என்பதால், பீடித் தொழிற்சாலைகள் புகையிலைகளை வாங்கிக் கொள்கின்றன. இப்போதைக்கு அதன் சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை, பங்களாதேஷ், மேற்கு ஆசியப் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வது மட்டும் தடைப்பட்டுள்ளது. மற்றபடி பீடித் தொழிற்சாலைகள் புகையிலையை வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. காடுசார்ந்த இதர உற்பத்திப் பொருள்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது என்றால், புகையிலைக்கு 18 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. அந்த வரியை மீண்டும் பழங்குடியின மக்களின் நன்மைக்கே பயன்படுத்தலாம். அது இன்னும் பல பகுதிகளில் வாழும் பழங்குடிகளுக்குப் பல நன்மைகளைச் செய்யும்.

காடு
காடு
Pixabay

லாக்டௌன் அமலுக்கு வந்த பிறகு, மத்திய பழங்குடியின அமைசச்ர் அர்ஜுன் முண்டா அனைத்து முதலமைச்சர்களுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் பழங்குடிகளின் நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று தெரிவித்திருந்தார். பிரதான் மந்திரி வன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் அவர்களுடைய சொந்தப் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்பிறகு, 49 முக்கியக் காடுசார் உற்பத்திப் பொருள்களின் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உறுதிப்படுத்தியது. இது சுமார் 20 மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் சிறு குறு பழங்குடியின உற்பத்திப் பொருள்களுக்குப் பயனளித்திருக்க வேண்டும்.

ஒருசில பகுதிகளில் இது பயனளித்திருந்தாலும், நடைமுறையில் அனைவருக்குமே பயனளிக்கவில்லை. காடுசார் உற்பத்திப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச விலையையும் பிரதான் மந்திரி வன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கிடைக்கும் சலுகைகளையும் உறுதிப்படுத்த வேண்டுமென்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அந்த உறுதி அதன் பலன்கள் அந்த மக்களுக்குக் கிடைக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கவில்லை. பொது விநியோக சேவைகள் காடுகளுக்குள் அமைந்துள்ள குக்கிராமங்களில் வாழும் மக்களுக்குப் போதிய அளவில் இருப்பதில்லை என்பது இதற்கு முக்கியக் காரணம். அந்த மக்களின் உணவுப் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதற்கும் அரசாங்கத்தின் பொது விநியோக சேவை பற்றாக்குறையாக இருப்பது ஒரு காரணம். ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்றவை இல்லாத, பொருள்கள் தேவைப்படுகின்ற அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன் பொருள்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய் என்று தேவையான அனைத்தையும் வழங்க வேண்டும்.

காணி பழங்குடிக் குடியிருப்பு, பொதிகை மலை
காணி பழங்குடிக் குடியிருப்பு, பொதிகை மலை

காட்டுயிர் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகங்களைச் சுற்றி வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, அவர்களுடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய, மத்திய பழங்குடியின அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் வாழும் பழங்குடியினச் சமூகங்களுடைய உணவு, இருப்பிடம் மற்றும் வருமானம் உறுதிப்பட, அவர்களின் வாழ்வாதார உரிமைகளை உறுதி செய்வதில் சுற்றுச்சூழல் அமைச்சக்ம் கவனம் செலுத்த வேண்டும்.

வன விலங்குகள், பறவைகளுக்கு உணவு தருவது சரியா..? ஓர் அலசல்!

லாக்டௌன் காலகட்டத்தில், மற்ற மக்களைவிட பழங்குடியின மக்கள் சமூக விலகலைச் சரியாகக் கடைப்பிடிக்கின்றனர். காடுசார் பொருள்களைச் சேகரிக்கையில்கூட அவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கின்றனர். பல்வேறு பகுதிகளில் உள்ளூர் நிர்வாகங்களின் உதவியோடு அவர்கள் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றனர். மரமேற வேண்டிய சூழல்களில் ஒருநேரத்தில் ஒருவர் மட்டுமே ஒரு மரத்தில் ஏற வேண்டும் என்று அவர்கள் தத்தம் நலனுக்காகச் சுயக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

மலை வாழிடம்
மலை வாழிடம்

பல பகுதிகளில் அந்த மக்கள் வெளித்தொடர்புக்கான பாதைகளைத் தடுப்புப் போட்டுத் தடை செய்து வைத்துள்ளனர். அதன்மூலம் வெளியாட்களுடனான தொடர்பைத் தவிர்க்கின்றனர். அதேநேரம், தங்கள் மக்களின் உணவுத் தேவையையும் பூர்த்தி செய்துகொள்வதில் சமூக சமையலறை முயற்சியின் மூலம் பொள்ளாச்சி, கோவை பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிகள் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் அரசு சொன்ன அனைத்தையும் முறையாகக் கடைப்பிடிக்கின்றனர். கொரோனா காலத்தில் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் உண்டான இந்தப் பேரத்தில் அவர்கள் தங்கள் தரப்பு பேரத்தைச் சரியாகக் கடைப்பிடிக்கின்றனர். இப்போது அரசாங்கம் தன் தரப்பில், அவர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து பழங்குடிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு