Published:Updated:

`பல்லர்ஷா ஆலையும், ஐரோப்பிய இயந்திரங்களும்!' - EIA2020 குறித்து மாதவ் காட்கில் சொல்லும் உதாரணம்

தொழிற்சாலைகளுக்கும் நகர நிர்வாகங்களுக்கும் இப்படி முழு உரிமத்தையும் வழங்குவது, சுற்றுச்சூழல் மீது பல பின்விளைவுகளைக் கொண்டுவரும். இது, வளர்ச்சிக்கான செயல் அல்ல.

இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020-ம் ஆண்டுக்கான வரைவு தேசியளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தொழில் வளர்ச்சித் திட்டங்கள், நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிடாதவாறு பாதுகாப்பதற்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளை இந்த வரைவு தகர்ப்பதாகவும் இது கொண்டுவரப்பட்டால் நாட்டின் சூழலியல் சமநிலையே சீர்குலையும் என்றும் கூறி, நாடு முழுக்க மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த வரைவுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரான மாதவ் காட்கில் இந்தப் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்த தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த 12 பேர் கொண்ட ஆய்வுக்குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் மாதவ் காட்கில். மாதவ் காட்கில் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையை மத்திய மாநில அரசுகள் அனைத்தும் நிராகரித்தன. அதன் விளைவாக, அவர் அறிக்கையில் எச்சரித்திருந்த அனைத்துச் சூழலியல் பேரிடர்களையும் மேற்குத்தொடர்ச்சி மலை எதிர்கொண்டது. குறிப்பாக, கேரளா, தமிழகம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் பெருஞ்சேதங்களுக்கு ஆளாகின. அத்தனைக்குப் பிறகும்கூட, இன்றளவும் மத்திய அரசும் சரி மாநில அரசுகளும் சரி, மாதவ் காட்கில் ஆய்வறிக்கை பரிந்துரைத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனமாகச் செயல்பட்டு வருகின்றன.

இப்போது அனைவராலும் விமர்சிக்கப்படுகின்ற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு, நாட்டின் சூழலியல் பாதுகாப்பையே இல்லாமல் ஆக்குவதாக விமர்சிக்கும் மாதவ் காட்கில், அது தொழிற்சாலைகளுக்கு நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கான, மாசுபடுத்துவதற்கான உரிமத்தை வழங்குவதாக விமர்சிக்கின்றார்.

மாதவ் காட்கில், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்
மாதவ் காட்கில், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்
Syed Shiyaz Mirza

அவர், ``இந்தப் புதிய வரைவு, ஜனநாயகத்தையே அழிக்கும் முயற்சி. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தாக்க மதிப்பீட்டு முறையில் இருக்கின்ற ஜனநாயகச் செயல்முறையான பொதுமக்கள் கருத்துக் கேட்புகளுக்கு விலக்கு அளிப்பதையும் தாண்டி, இந்த வரைவு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்தி மொழிப் பிராந்தியங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் வாழும் மக்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. ஆங்கிலம் தெரியாத, இந்தி பேசாத மக்கள் வாழக்கூடிய பகுதிகளில், நதியோரங்களில், கடலோரங்களில் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த வரைவின் சாராம்சம் சென்று சேரவில்லை. ஆனால், அவர்கள்தாம் இதன்மூலம் அதிக பாதிப்புகளைச் சந்திப்பார்கள். அவர்களே அளவிட முடியாத மாசுபாடுகளாலும் சுரங்கங்களாலும் குவாரிகளாலும் சட்டவிரோதக் கட்டுமானங்களாலும் மற்றும் நெடுஞ்சாலை, விமான நிலையம், துறைமுகங்கள் போன்றவற்றாலும் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள். அவர்களுடைய நிலங்கள்தான் இந்தத் திட்டங்களுக்காகப் பிடுங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்கொண்டு விவரித்திருந்த மாதவ் காட்கில், ``மக்கள் மத்தியிலிருந்து ஏற்கெனவே இந்த வரைவு அறிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்துகொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்குச் சென்று சேர்ந்த 17 லட்சம் எதிர்ப்புக் கடிதங்களே சாட்சி. இருப்பினும், இதுவரையிலான எதிர்ப்புகள் ஆங்கிலம் தெரிந்த, கல்வியறிவு பெற்றவர்களுடையவையாகவே இருக்கின்றன. இந்த வரைவின் சாராம்சம் முழுவதுமாக நாட்டின் அனைத்து மூலைக்கும் சென்று சேர்ந்தால், வேர் வரை இதன் தகவல்கள் செல்லமுடிந்தால், அந்த மக்களும் இதன் தீவிரத்தைப் புரிந்துகொண்டால் எதிர்ப்பு இதைவிடப் பல மடங்கு பலமாக இருக்கும்.

அனைத்து மக்களுடைய மொழிகளிலும் இது கிடைத்திருந்தால், அமைச்சகத்தைச் சென்றடையும் எதிர்ப்புக் கடிதங்களின் எண்ணிக்கை 17 லட்சமாக இருக்காது, 17 கோடியாக இருக்கும்.
மாதவ் காட்கில், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்

ஆனால், பிராந்திய மொழிகளில் இது வெளியிடப்படாததால் அவையனைத்துமே மக்களுக்குச் சிக்கலாகியுள்ளது. மக்களுக்கு இருக்கும் இந்தச் சிரமத்தை உணர்ந்த தமிழக அரசு, தமிழ் மொழியில் அதை மொழிபெயர்த்து வெளியிட்டு, அடுத்த 50 நாள்களுக்குள் கருத்துகளைப் பெறலாமென்று முடிவு செய்துள்ளது. கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெயஸ்ரீ வெங்கடேசன் போன்ற முக்கியச் சூழலியலாளர்கள் அதற்கான அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்புக் கமிட்டியில் இருக்கின்றனர். அவர் என்னிடம், `இந்த மொழிபெயர்ப்பு முடிந்தவுடன் தமிழ் பேசும் சமூகங்களிடையே இது பொதுவெளியில் கொண்டுசேர்க்கப்படும். இதுகுறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். பின்னர், தமிழ் மக்களை அவர்களுடைய தமிழ் மொழியிலேயே அமைச்சகத்திற்கு எதிர்ப்புக் கடிதம் எழுத வைக்கவும் முயற்சிகளை மேற்கொள்வோம்' என்று கூறினார். தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட, சமூக வலைதளக் காலகட்டத்தில் இதுவோர் அருமையான வெளிப்பாடாக நான் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

அதேபோல், கேரளாவில் வழக்கறிஞர் ஹரீஷ் வாசுதேவன் தன்னுடைய சுய முயற்சியில் மலையாளத்தில் இதைத் தெளிவாக மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். அது தயாரானவுடன், அவரும் வழக்கறிஞர் வினோத் பய்யடாவும் கேரளத்தின் அனைத்துத் தட்டு மக்களுக்கும் அதைக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப் போகிறார்கள். அதன்மூலம், கேரள மக்களையும் மலையாள மொழியிலேயே அமைச்சகத்திடம் அவர்களுடைய எதிர்ப்புகளைப் பதிவு செய்ய வைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். மேலும் மேற்கு வங்கத்தில், மேற்கு வங்க மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியரான முனைவர்.சிலஞ்சன் பட்டாச்சார்யாவும் பெங்காளி மொழியில் இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். இவற்றையெல்லாம் குறிப்பிட்ட மாதவ் காட்கில், மற்ற மாநிலங்களிலும் இத்தகைய முன்னெடுப்புகள் கூடிய விரைவில் நிகழும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்.

தொழிற்சாலை / Representational Image
தொழிற்சாலை / Representational Image
Pixabay

தொழிற்சாலைகளுக்கும் நகர நிர்வாகங்களுக்கும் இப்படி முழு உரிமத்தையும் வழங்குவது, பல பின்விளைவுகளைக் கொண்டுவரும். இது, வளர்ச்சிக்கான செயல் அல்ல. மாதவ் காட்கில் இதற்கு ஓர் உதாரணத்தையும் குறிப்பிடுகிறார். மகாராஷ்டிராவிலுள்ள சந்திரபூர் மாவட்டத்தில் பல்லர்ஷா காகித ஆலை அமைந்துள்ளது. அது தொடங்கப்பட்டதிலிருந்தே, அரசாங்கம் அந்த ஆலைக்கு அதிக மானியத்தோடு மூங்கில் விநியோகம் செய்தது. அதற்குத் தேவைப்பட்ட மூங்கில், அரசுக் கட்டுப்பாட்டிலிருந்த காப்புக் காடுகளுக்குள்ளிருந்து, உள்ளூர் ஏழைப் பழங்குடியின மக்களைக் குறைந்த ஊதியத்தில் வைத்து வேலை வாங்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டன.

அந்தக் காகித ஆலை, அதிகளவிலான காற்று மற்றும் நீர் மாசுபாட்டைச் சுற்றுவட்டாரத்தில் ஏற்படுத்துகின்றது. அங்கிருக்கும் வார்தா நதியில் அதன் கழிவுகள் திறந்துவிடப்பட்டதால், அதில் வாழ்ந்த மீன்கள் அழிந்தன. அது, அந்த நதியைச் சார்ந்திருந்த மீன்பிடிச் சமூகங்களைப் பெரியளவில் பாதித்தது. மீனவர்களிடம் மீன் வாங்கக்கூடிய உள்ளூர் நுகர்வோருக்கு மீன் உணவு மூலமாக குறைந்த விலையில் கிடைத்த ஊட்டச்சத்து கிடைக்காமல் போனது. அவர்கள் அந்த ஊட்டச்சத்தை ஈடுசெய்ய மீன் உணவு அளவுக்குக் குறைந்த விலையில் வேறு உணவு கிடைக்காது.

மலைகள் / Representational Image
மலைகள் / Representational Image
Pixabay

2009-ம் ஆண்டு, அந்த ஆலை புதிய இயந்திரங்களை இறக்குமதி செய்து, பழைய இயந்திரங்களுக்குப் பதிலாக மாற்றியமைத்தது. அந்தப் புதிய இயந்திரங்கள், ஐரோப்பாவிலுள்ள காகிதத் தொழிற்சாலைகளால் பழையனவாக விற்கப்பட்டவை. அங்கு அதிகமாக மாசுபடுத்தும் இந்தத் தொழில்நுட்பங்களை அப்புறப்படுத்திவிட்டு அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டபோது, அவற்றை வாங்கி வந்து பல்லர்ஷாவில் அமைத்தனர். அதன்விளைவாக, அப்பகுதியின் காற்று மாசடைந்தது. உள்ளூர் மக்கள் அதற்கு எதிரான கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆலையை மூடினால், அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று அச்சுறுத்தி அந்தப் போராட்டத்தை அவர்கள் ஒடுக்கிவிட்டார்கள். வார்தா நதியின் மாசுபாடு மேலும் அதிகரித்தது. ஆனால், மீனவச் சமூகங்களையும் உள்ளூர் நுகர்வோரையும் ஒருங்கிணைக்க முடியாமல் போனதால் அவர்களால் வலிமையான போராட்டத்தை முன்னெடுக்கவும் முடியாமல் போனது.

``நான் 1996-ம் ஆண்டின்போது, இந்தோனேசியாவின் போகோரில் சர்வதேசக் காடுகள் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தேன். எங்கள் குழுவில் ஒருவர், ஃபின்லாந்தைச் சேர்ந்த ஒரு காகிதத் தொழிற்சாலையின் மூத்த தொழில்நுட்பவியலாளர். 1950-களில் ஃபின்லாந்து காகித ஆலைகள் மோசமான மாசுபாடுகளை உருவாக்கவல்ல இயந்திரங்களையே பயன்படுத்திக் கொண்டிருந்ததாக அவர் என்னிடம் கூறியுள்ளார். நீரோடைகளை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடந்து, அதன்விளைவாகத் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பூஜ்ஜிய திரவ வெளியீட்டுத் திறனுடைய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. காகித உற்பத்தியில் ஃபின்லாந்து பெரும்பகுதியை ஏற்றுமதி செய்கின்றது. அந்தத் துறையிலிருந்து அவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கின்றது. அவையனைத்தையுமே அவர்களால் மாசுபாடற்ற பூஜ்ஜிய திரவ வெளியீட்டுத் திறனுடைய இயந்திரங்களைக் கொண்டு செய்யமுடிகிறது." என்று கூறுகிறார் மாதவ் காட்கில்.

மேற்கொண்டு அவர், ``இப்போதைய புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு, பல்லர்ஷா போன்ற காகித ஆலைகள் சிரமமின்றிச் செயல்பட உதவும். மேன்மேலும் அதிக மாசுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டே அதீத உற்பத்தியில் அவர்களால் இனி ஈடுபட முடியும்" என்று கூறுகிறார்.

மேற்குத்தொடர்ச்சி மலை
மேற்குத்தொடர்ச்சி மலை
Pixabay

இந்தியாவின் சுற்றுச்சூழல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சூழலியல் சீர்கேடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதன்விளைவாகப் பல சமூக முரண்பாடுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் மக்கள் மத்தியில் அரசுகள் மீதான நம்பிக்கையைக் குலைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் இந்த நிலைமை, உலக மகிழ்ச்சி தரப் பட்டியலில் பிரதிபலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2020-ம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலில் இந்தியா 156 நாடுகளில் 141-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிடும் மாதவ் காட்கில், ``இந்திய மக்களுடைய மகிழ்ச்சி வீழ்ந்துகொண்டிருக்கிறது" என்கிறார். உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளே இந்தியாவிற்கு அடுத்தபடியாகப் பட்டியலில் பின்வரிசையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுடைய மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் சீர்குலையும்போது, அதன்கூடவே அந்நாட்டின் வளர்ச்சியும் பாதாளத்திற்குச் செல்லும். அதற்கான சட்டப்பூர்வ அடித்தளத்தையே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான 2020-ம் ஆண்டின் புதிய வரைவு உருவாக்குகின்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு