Published:Updated:

`கிரிஜா நியமனம் சரியே!' - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்படும் அளவுக்கு அவருக்குத் தகுதி இருப்பதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்படுவதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் தலைமை நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

2010-ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டத்தின்படி, நிபுணத்துவ உறுப்பினராகப் பதவி வகிக்கும் அதிகாரிக்கும் ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும். ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்கள் மட்டுமே அனுபவம் இருக்கிறது. இந்தக் காரணத்தால், கடந்த ஏப்ரல் 9-ம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல நிபுணத்துவ உறுப்பினராக நியமிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்திருந்தனர்.

Madras High Court
Madras High Court

நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி, சுற்றுச்சூழல், நுகர்வோர் விவகாரங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குப் போதுமான நிபுணத்துவம் இல்லையென்ற காரணத்தாலேயே தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அத்தகைய தீர்ப்பாயங்களில் நிபுணராக இல்லாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் நிபுணத்துவ உறுப்பினர் பதவி வகிப்பதற்கு நிபுணராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதோடு, ``காலை நடைபயிற்சிக்குச் செல்பவர்கள்கூட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்தாம். ஆனால், நிபுணத்துவம் என்பது வேறு" என்றும் கடுமையாகச் சாடிய நீதிபதிகள் வழக்கை 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக சுகாதாரத்துறை செயலாளராக, நில நிர்வாகத் துறை செயலாளராக, தலைமைச் செயலாளராக, அவர் சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களைக் கவனித்துள்ளதாகக் கூறி, அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அதோடு, பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவதில், அதற்கான குழுவின் தலைவராகச் செயல்பட்டுள்ளார். கூவம் நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான குழுவிலும் தலைவராகச் செயல்பட்டுள்ளார். அதோடு மருத்துவக் கழிவுகள் மேலாண்மையிலும் அவருக்கு அனுபவம் உள்ளதாகக் கூறிய கிரிஜா வைத்தியநாதன் தரப்பு, இதன்மூலம் பசுமைத் தீர்ப்பாய சட்டத்தின்படி தேவையான ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களை அவர் பெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டியது.

கிரிஜா வைத்தியநாதன்
கிரிஜா வைத்தியநாதன்

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர். அதோடு, பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்படும் அளவுக்கு அவருக்குத் தகுதி இருப்பதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், ``தலைமைச் செயலராகத் தனது பணிக்காலத்தில் பிளாஸ்டிக் தடை கண்காணிப்பு, மருத்துவக் கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு குழுக்களின் தலைவராகப் பணியாற்றிய அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கிரிஜா வைத்தியநாதன் நியமனம் சரி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோன்ற குழுக்களில் நிர்வாக ரீதியாக எடுத்த முடிவுகளை வைத்து மட்டுமே அவரை நிபுணத்துவம் பெற்றவராகக் கருத முடியாது என்பது எங்களது வாதமாக இருந்தது. ஆனாலும், கிரிஜா வைத்தியநாதன் பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக தகுதி பெறுகிறார் எனத் தீர்ப்பளித்துள்ளது. அவரது நியமனத்துக்கான தடையையும் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

National Green Tribunal
National Green Tribunal
Photo: Vikatan / Ashok kumar.D

இப்படி தீர்ப்பளித்ததன் மூலம், சென்னை உயர் நீதிமன்றம் தவறான முன்னுதாரணத்தைக் காட்டியுள்ளது. அதாவது, நிர்வாகரீதியாகப் பெற்ற அனுபவத்தை நிபுணத்துவமாகக் கருதுவதன் மூலம், யார் வேண்டுமென்றாலும் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு வழிவகுக்கும். இது வரலாற்றில் நிகழ்ந்துள்ள தவறு" என்று கூறினார்.

கிரிஜா வைத்தியநாதன் நிர்வாக ரீதியிலான பொறுப்புகளில் இருக்கும்போது அனுமதியளிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான வழக்குகள், இனி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வரும்போது, தீர்ப்பாயத்திலும் நிபுணத்துவ உறுப்பினராக இருந்து அவரே விசாரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு