Published:Updated:

`இதற்கு கிரிஜா வேண்டாம்!' - உயர்நீதிமன்றம் சொன்ன காரணம்

முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக ரீதியிலான அனுபவம் இருந்தாலும், அவருக்குச் சுற்றுச்சூழல் துறையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அனுபவமில்லை.

சில நாள்களுக்கு முன்னர், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். அதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கிரிஜா வைத்தியநாதனை பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல நிபுணத்துவ உறுப்பினராகப் பணியமர்த்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

National Green Tribunal
National Green Tribunal
Photo: Vikatan / Ashok kumar.D

அண்மையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினருக்கான பணியிடங்களை நிரப்பும் பணியில் மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு ஈடுபட்டது. அப்போது, தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகியோரை மத்திய அமைச்சரவையின் பணி நியமன குழு நியமித்தது.

கிரிஜா வைத்தியநாதன், தேசிய பசுமைத்த் தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல உறுப்பினராகச் செயல்படுவதற்கு பதவி வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை கடந்த 5-ம் தேதியன்று, பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு அறிவித்தது. அதன் அடிப்படையில், கிரிஜா வைத்தியநாதன் 4 ஆண்டுகளுக்கு தெற்கு மண்டலத்தின் நிபுணத்துவ உறுப்பினராகப் பதவி வகிப்பார் என்றும் கூறப்பட்டது.

ஏற்கெனவே, பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல அமர்வில் பணியாற்றிய நிபுணத்துவ உறுப்பினர் சைபல் தாஸ்குப்தா, கொல்கத்தாவிலுள்ள கிழக்கு மண்டல அமர்வுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். எனவே, அவருக்குப் பதிலாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நியமிக்க உள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் வரும் 19-ம் தேதியன்று பதவியேற்கத் தயாராக இருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்நிலையில், இந்தப் பதவியை ஏற்பதற்குரிய போதிய அனுபவம் அவருக்கு இல்லையென்று கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல அமர்வில் துறை சார்ந்த நிபுணத்துவ உறுப்பினராக பதவியை முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை அமர்த்துவது சட்டத்திற்குப் புறம்பானது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி, இந்தப் பணி நியமன உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தைப் பொறுத்தவரை, அந்த அமர்வில் இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒருவர் நீதித்துறை சார்ந்தவர், மற்றொருவர் சுற்றுச்சூழல் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்றவர். இந்த அமர்வுதான் வழக்குகளை விசாரிக்கும். இதில், முதல் உறுப்பினர் நீதித்துறை சார்ந்தவராக இருக்க வேண்டும். நிபுணத்துவ உறுப்பினர் என்பவர், சூழலியல் குறித்த துறை சார்ந்த புரிதல் உள்ளவராக இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆகவே, இதற்குத் தகுந்த தகுதிகள் இருக்க வேண்டுமென 2010-ம் ஆண்டின் தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டம் கூறுகின்றது. அதிலும் குறிப்பாக சட்டப்பிரிவு-5 யாரையெல்லாம் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கலாம் என்பதை, இரண்டு உட்பிரிவுகளில் வரையறுக்கின்றது. முதல் உட்பிரிவின்படி, ஒரு கல்வியாளரை நியமிக்கலாம். அவர் இந்தத் துறை சார்ந்து 15 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். அதிலும், 5 ஆண்டுகள் கள அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

நிபுணத்துவ உறுப்பினராகும் அரசு அதிகாரிக்கு 15 ஆண்டுகள் அனுபவமும் அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் துறை அனுபவமும் இருக்க வேண்டும்.

அதாவது, அணு உலை போன்ற அபாயகரமான வேலைகள், மாசுபாடு, பல்லுயிரிய வளப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் கள அனுபவம் உடையவராக அவர் இருக்க வேண்டும். அல்லது இரண்டாவது உட்பிரிவின்படி, ஓர் அரசு அதிகாரியை நியமிக்கலாம். ஆனால், அந்த அரசு அதிகாரிக்கும் சில தகுதிகளை இந்த உட்பிரிவு வரையறுக்கின்றது. அவை யாதெனில், நியமிக்கப்படும் அதிகாரிக்கு 15 வருடங்கள் நிர்வாக அனுபவம் இருக்க வேண்டும். அந்த 15 வருடங்களில், 5 வருடங்களுக்கு அவர் வனத்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த தனித்துவமான துறைகளில் பணிபுரிந்திருக்க வேண்டும். இந்தத் தகுதிகளில் எதையேனும் பூர்த்தி செய்தால் மட்டுமே அவர் பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராகப் பதவியேற்கத் தகுதியுடையவர் ஆவார்.

ஆனால், முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக ரீதியிலான அனுபவம் இருந்தாலும், அவருக்குச் சுற்றுச்சூழல் துறையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அனுபவமில்லை. அதனால், அவருக்கு இந்தப் பதவியை வழங்கியது, பசுமைத் தீர்ப்பாய சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருக்கும் விதிகளுக்கு எதிரானது என்று கூறி பூவுலகின் நண்பர்கள் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதுதான் நீதிபதிகள், கிரிஜா வைத்தியநாதனுடைய சுற்றுச்சூழல் சார்ந்த அனுபவம் திருப்தியளிப்பதாக இல்லையென்று கூறி, அவருடைய பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

Edappadi Palanisamy and Girija Vaidyanathan
Edappadi Palanisamy and Girija Vaidyanathan
Photo: Vikatan / Sathishkumar.V

இதுகுறித்து நம்மிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ``பசுமைத் தீர்ப்பாயத்தில் நிபுணத்துவ உறுப்பினராகப் பதவி ஏற்கும் அதிகாரி கட்டாயமாக 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு, சுற்றுச்சூழல் துறையில் 3.6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். அதே காலகட்டத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திலும் பணிபுரிந்திருக்கிறார். ஆக, அவருக்கு மூன்றரை ஆண்டுக்கால அனுபவம் மட்டுமே சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் இருக்கின்றது, ஐந்தாண்டுக் காலத்துக்கு இல்லை.

ஆனால், மத்திய அமைச்சகத் தரப்பு, சுகாதாரத் துறை, திட்டக் குழு (Planning Commission) ஆகிய துறைகளில் பணிபுரிந்திருப்பதாகவும் தலைமைச் செயலாளராக இருந்திருப்பதாகவும் அந்த நேரங்களில் எல்லாம் சூழலியல் சார்ந்து செயல்பட்டிருப்பதாகவும் கூறியது. ஆனால், அதை சுற்றுச்சூழல் சார்ந்த அனுபவமாக ஏற்றுக்கொள்ள முடியாது, நேரடியாக சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் அனுபவம் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. கல்வியாளர்களைப் பொறுத்தவரை, என்ன மாதிரியான தகுதிகளை நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதேபோலத்தான் அதிகாரிகளை நியமிப்பதிலும் பின்பற்ற வேண்டும் என்ற எங்கள் வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அதன் அடிப்படையிலேயே இந்த இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியுள்ளனர்.

வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்
வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்

மேலும், கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக இருந்தபோது பல திட்ட முன்மொழிதல்களுக்கு அனுமதி வழங்கியிருப்பார். அதில், சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்கள் பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தால், நிபுணத்துவ உறுப்பினராக அவரே இருப்பது, கட்டாயம் கருத்து வேற்றுமைக்கு வழிவகுக்கும்" என்று கூறினார்.

இந்தியாவில் சுற்றுச்சூழல் சார்ந்த பேரிழப்புகளைக் கட்டுப்படுத்த, வளர்ச்சித் திட்டங்களால் அழிக்கப்படும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க என்றே தனித்துவமாக அமைக்கப்பட்டதுதான் தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இதில், சட்டம் மட்டுமன்றி, துறை சார்ந்த நிபுணத்துவம் கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆகவே, அதில் நிபுணத்துவ உறுப்பினர்களை பணியமர்த்துவதில் மத்திய அரசு எவ்வித பாரபட்சமும் இன்றி நடந்துகொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு