சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, வாட்டர் ஏ.டி.எம் மையங்கள், அந்நிய களைத் தாவரங்கள் அகற்றும் பணி, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பகுதியில் யானைகள் வழித்தடம் போன்றவற்றை நேரில் ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் நீலகிரிக்கு வருகை தந்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நீதிபதிகள் பாரதிதாசன், சுப்பிரமணியன், சதீஷ்குமார், தண்டபாணி, பொங்கியப்பன், இளந்திரையன் அடங்கிய குழுவினர் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் வழங்கும் இயந்திரத்தை ஆய்வு செய்தனர். அம்மா உணவகம் அருகில் உள்ள வாட்டர் ஏ.டி.எம் இயந்திரத்தில் 5 ரூபாயைச் செலுத்தி ஒரு லிட்டர் குடிநீர் கிடைக்கிறதா என்பதையும் சோதனை செய்தனர். குடிநீரை குடித்துப் பார்த்து தரத்தை பரிசோதனை செய்தனர். வாட்டர் ஏ.டி.எம்-களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தொடர்ந்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையாளர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து ஊட்டி வென்லாக் டவுன் வனப்பகுதியில் சோலை மரக்கன்றுகளை நடவு செய்தனர். பின்னர், தலைக்குந்தா பகுதியில் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மையத்தைத் திறந்து வைத்தனர். தொடர்ந்து மசினகுடிப் பகுதிக்குச் சென்ற நீதிபதிகள், அந்நிய களைத் தாவரங்கள் அகற்றும் பணி, முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதோடு முதுமலை புலிகள் காப்பகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளால் யானைகள் வழித்தடம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நேற்று இந்தப் பகுதியில் ஆய்வு நடத்திய நீதிபதிகள், 'இந்தப் பகுதிகளை யானைகள் கடந்துச் செல்ல போதுமான இடம் இல்லை. யானைகள் கடக்க போதுமான இடம் விட்டு சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைக் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றனர்.
நீலகிரியின் சூழலியல் பாதிப்புகளை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்திருப்பதால் நல்ல மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.