Published:Updated:

``மனசு தாங்கலை... மரத்தை விட்டுருங்கய்யா!'' - மதுரை மண்ணிலிருந்து ஒரு கடிதம்

ஸ்மார்ட் சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்
ஸ்மார்ட் சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்

ஸ்மார்ட்டு சிட்டிக்கு வைகைக் கரையில ரோடு போடுறதா சொல்லி, கரைகளுக்குள்ள மதில் சுவர்களைக் கட்டி கரையோட அளவைச் சுருக்கிக்கிட்டு இருக்கிற அரசாங்கத்துக்கு மரத்தோட அருமையெல்லாம் தெரியவாப்போகுது?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரையில் வரவிருக்கும் ஸ்மார்ட் சிட்டிக்காக அரசு ஒரு பக்கம் நிதியை அள்ளிக் கொட்டிக்கொண்டிருக்க, மறுபக்கம் மதுரையின் சாலைகளில் இருமருங்கிலும் இருக்கும் மரங்களை வெட்டி அதன் பசுமையைக் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிறது மாநகராட்சி. இதைக் கண்ணீருடன் தனது கடிதத்தில் பதிவுசெய்கிறார் மதுரையின் மூத்தகுடி ஒருவர்...

"சித்திரை மாசம் சுளீர் வெயிலுக்குப் பேருபோனது, மதுரை. ஆனா, அக்கினி வெயில்லயும் நிழலுதேடி ஒதுங்கினா 50 வயசு மரங்கள் அப்படியே அரவணைச்சிக்கிடும்."
ஸ்மார்ட் சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்
ஸ்மார்ட் சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்

சித்திரை வீதியெல்லாம் மரங்கள் இருக்கும். அங்கங்கதான் கோபுரங்கள் தெரியும். நாளும் கிழமையும் மீனாட்சிக்கோயில் பக்கம் போனா அம்புட்டு சந்தோஷம். இப்போ ஓரங்கட்டி வேலிபோட்டு, அழகுக்கு மரங்களை வளர்க்கிறாக. திருநா வந்தா அங்கே தகரக் கொட்டகைதானேய்யா போடுறாக! ரயில்வண்டி ஸ்டேஷனுக்கு வெளிய பூங்கா இருந்துச்சு.

அந்த மரங்கள் தவமிருந்து, வீசுற காத்த நமக்கு வரமா கொடுத்திச்சு. அந்தப் பூங்காவை, ஸ்மார்ட்டு சிட்டிக்கி ஆகாதுன்னு எடுத்திட்டாக. குரு தியேட்டர் பைபாஸ் ரோட்டோரம் பெத்தானியாபுரம் ஏரியாவே மரங்கள் மூடிக்கெடக்கும். ரோடு அகலப்படுத்த 10 வருஷம் முன்ன ஓரங்காலை வெட்டுனாக, இப்போ பாலம் கட்டுறேனு ஒட்டுமொத்தமா வெட்டுறாக. எங்களைவிடுங்க, கால்கடுக்க நிக்கிற டிராஃபிக் ஏட்டுகளைக் கேட்டா அவுக சொல்லுவாக, `ரோட்டோரத்தில மரங்கள் வேணுமா வேணாமா?’னு!

ஸ்மார்ட் சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்
ஸ்மார்ட் சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்

டவுனு ஏரியா உச்சிச்சூடு காளவாசல் வரைக்கும்தான் கண்ணைக் கட்டும். மேலக்கால் ரோட்டுல பைய போனாக்கா துவரிமான் கண்மாய் பக்கம் மரம்ன்னா மரம் அம்மாடி, நிமிஷத்துல ஆளைச் சொக்கடிச்சிப்புடும். இப்பவும் பார்க்கலாம். அப்படியே, காளவாசலுக்கு மேற்கே உசிலம்பட்டி ரோடு. அத்தினி மரங்களும், செடிகொடிகளும் நின்னு கண்ணடிக்குங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனா, அகல ரோடு போட்டாக. இப்போ, அந்த மரங்கள் ஒண்ணத்தையுமே காங்கலை. தேனி போறப்போவெல்லாம் `திடுக்’குன்னுதய்யா. பரவை மெயின்ரோட்ல நடந்துபோனாலே ஈரக்காத்து உடம்புல மேயும். இப்போ பேரப்புள்ள ஸ்கூட்டர்ல வச்சு `ஜல்’லுன்னு கூட்டிப் போறான். வெக்கைக் காத்துதான் சூடுபறக்குது.

ஸ்மார்ட் சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்
ஸ்மார்ட் சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்

மேலூர் டவுனு வெயிலுல நாயா அலைஞ்சு அப்பிடியே அழகர்கோயில் ரூட் பஸ் ஏறினா, வல்லாளபட்டி கிட்டக்க இன்னும் வரிஞ்சுக்கட்டி வளைஞ்சுகெடந்து விசிறி விடுதுய்யா எங்கூட்டு மரங்க. அழகர் மதுரைக்கு வர்ற ரோட்டுல விசிறிகளைவிட மரங்களோட கிளைகளும் இலைகளும்தான் அவருக்குக் காத்தே.

இப்போ அம்புட்டையும் ரோட்டை அகலமா போடுறேனு வெட்டுறாக. வேலை நடந்திட்டு இருக்கிற ரோட்டுப்பக்கம் துண்டா நிக்கும் மரத்தைப் பார்த்தா அநாதையாச் சாகப்போற ஏக்கம் அதுக்கு இருக்கிறது தெரியும். கெடைக்கிறதுக்குக் கடுசா இருக்கிற மருத மரம், குறுந்த மரம், நெல்லி மரமெல்லாம் இந்த ரோட்டுல பார்க்கலாம். அத்தனையும் போச்சேய்யா!

ஸ்மார்ட் சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்
ஸ்மார்ட் சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்

புதுநத்தம் ரோட்டுல ஊமச்சிக்குளம் பக்கம் போனா அங்கேயே இருந்திடனும்னு தோணும். பச்சைப் பச்சையா பரவி நிறைஞ்சிருக்கும். இப்போ அதையும் பாலம் கட்டுறதுக்காக வெட்டித் தள்ளிட்டு வர்றாக. அதே ரோட்டுலதான் பேங்க் காலனி மந்தையம்மன் கோயில் இருந்துச்சு. வெளிநாட்டு ஐடியாவைப் பயன்படுத்தி அந்தக் கோயிலையே சில அடிகளுக்குத் தூர நகர்த்தி வச்சிருக்காக. கோயிலை அலுங்காம ஓரங்கட்ட யோசிச்ச நாம, மரத்தைப் பிடுங்கி ஓரமா நட்டுவச்சுக்கணுமேனு யோசிக்கலையே? புதுநத்தம் ரோட்டுப் பாலத்துக்காக அவுட்போஸ்ட் கார்ப்பரேஷன்ல இருந்த மரங்களை மாத்தி நட்டு வைக்க முயற்சி பண்ணுனாக. பிடிமண்ணையும் விட்டுட்டு ஆணிவேரை அறுத்துட்டு நட்டா எப்படிய்யா நிக்கும்? போயிடிச்சி. திட்டத்தையும் போட்டுட்டாக.

அலங்காநல்லூர் போற பாதையில சிக்கந்தர்சாவடி தாண்டினா இன்னும் அப்பிடியே ஜில்லுனு குளிரு காத்து அடிக்கும். இந்த மரங்கள்லாம் மத்தியான வெளிச்சத்தையும்கூடத் தடுத்திரும். ஆத்தாவா, தாத்தனா இன்னும் ஆசையா நிக்குதுங்க. ராமேஸ்வரத்துக்கு மதுரையில இருந்து நாலுரோட்டுல போறவங்கள்லாம் கொடுத்து வைக்காதவங்க. கண்ணைத் திறந்துக்கிட்டு சிலைமான் ஊருக்குள்ள ஆத்தங்கரையோர ரோட்டுல போயி வண்டிவிட்டு இறங்கி வேடிக்கை பார்க்கையில மரத்திலிருந்து நம்ம கண்இமைகளுக்கு விழுற மழைச்சொட்டு, சுகம்ய்யா. திருப்பாச்சேத்திக்கே தெய்வங்களா காத்துநின்னு காத்துகொடுத்துவந்த மரங்களைக் காலிபண்ணித்தான் நாலுரோடு நீண்டிருக்கு! மிசின் இல்லையா, காக்க மனசு இல்லையா, கேட்டுச்சொல்லுங்கய்யா. இதையும் சொல்லிடுங்கப்பு. மரங்கள் இன்னும் இருக்கிற இடங்களைச் சொன்னது, அப்பவாச்சும் போயி பார்த்து ரசிக்க மனசு வருமுனுதான். வசதியாப்போச்சினு தேடிப்பிடிச்சு கால பண்ணிருவாக. கவனம்ய்யா!

மனுஷன் வளர்றதுக்குப் பொருளாதாரம், பயணம், வண்டி, ரோடு வேணும். ஆனா, வாழ்றதுக்கு மரம் வேணுமேய்யா. வளர்ச்சிங்கிறது இயற்கையை அனுசரிச்சு வர்றதுதான்; அழிச்சு வர்றதில்ல. பேரன் ஏதோவொரு படத்துல காட்டுனான். மரத்துக்கு மிசினுக இருக்காமே. எல்லா நாடுகளும் எதிர்க்கிற ஸ்டெர்லைட்டு எந்திரத்தைக் கொண்டுவர்றாக. இடம்மாத்தி நடுற மிசினுகளை வச்சு மரத்தைக் காக்கலாம்ல.

சர்க்காருகளும் கருத்துக் கேட்காம கதிரறுக்கிற மாதிரி அறுத்துப் போட்டுட்டுப் போகுதுக, மரங்களை. நம்மூரெல்லாம் இந்தப் பசுமைத் தீர்ப்பாயத்தோட பார்வைக்குள்ள வராதாய்யா?

இந்த 10 வருஷத்துல மதுரை முழுக்க அத்தனை ஆயிரம் மரங்களை வெட்டிச் சாய்ச்சிட்டாக. அதுவும் போன 5 வருஷத்துல மட்டும் மரங்கள்மேல விழுந்த வெட்டுக்கள் ரொம்ப அதிகம். சர்க்காருகளும் கருத்து கேட்காம கதிரறுக்கிற மாதிரி அறுத்துப் போட்டுட்டுப் போகுதுக, மரங்களை. நம்மூரெல்லாம் இந்தப் பசுமைத் தீர்ப்பாயத்தோட பார்வைக்குள்ள வராதாய்யா?

`அட, ஸ்மார்ட்டு சிட்டிக்கு வைகைக் கரையில ரோடு போடுறதா சொல்லி கரைகளுக்குள்ள மதில் சுவர்களைக் கட்டி கரையோட அளவைச் சுருக்கிக்கிட்டு இருக்கிற அரசாங்கத்துக்கு மரத்தோட அருமையெல்லாம் தெரியவாப்போகுது? நாமதான் எடுத்துச் சொல்லணும்’னு நினைச்சுக்கிட்டே போனவாரம் ஒருநா, பஸ்ஸ்டாண்டுப் பக்கம் போனேன். கார்ப்பரேஷனும் காட்டு இலாகாவும் சேர்ந்து மரக்கன்று கொடுக்கிற விழாவை நடத்திக்கிட்டு இருந்துச்சு. எனக்கென்னமோ அப்பனைக் கொன்னு சாம்பலை நெத்தியில பூசிக்கிறதுக்குத் தர்ற மாதிரி இருந்துச்சு.

மனசு தாங்கலை, மரத்தை விட்டுருங்கய்யா!" என்கிறார், அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு