Published:Updated:

`பனை மரத்தை  வெட்டினால் தண்டனை' - மதுரை நீதிமன்றம் அதிரடி!

பனை மரம்
பனை மரம்

ஆயிரமாண்டு கால தமிழர் மரபைப் பறைசாற்றுவதற்கான முதல் படியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை எடுத்துள்ளது.

எதைக் கேட்டாலும் கொடுக்கின்ற மரத்தைக் கற்பக விருட்சம் என்பர். பனை ஓலை,நுங்கு, பதனீர், பனம் பழம், பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனை விசிறி, பனையிலிருந்து செய்யப்படும் சாமான்கள் எனப் பல வகைகளில் பயன்படுத்தக்கூடிய பொருள்களையே வழங்கும் பனை மரம்தான் தமிழகத்தின் கற்பக விருட்சம்.

அந்தக் கற்பக விருட்சம், கடந்த 50 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமான சேதங்களைச் சந்தித்துவிட்டது. கணக்கிட முடியாத அளவுக்கு அழிந்துவிட்டது. இப்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது.

பனை மரம்
பனை மரம்

2018-ம் ஆண்டுக் கணக்குப்படி, இந்தியாவில் உள்ள பனைமரங்களின் எண்ணிக்கை 8.59 கோடி. அதில் 5.10 கோடி மரங்கள் தமிழகத்தில்தான் இருப்பதாகச் சொல்கிறது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். ஆனால், அதிகமாக வெட்டப்பட்டதால் இப்போது 2.50 கோடியாகக் குறைந்துவிட்டதென குற்றஞ்சாட்டுகிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

தொடர்ந்து வெட்டப்படுவதாலும், அழிவை ஈடுகட்டும் வகையில் வளர்க்கப்படாததாலும், பனையைப் பாதுகாக்க மதுரை உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பனை மரத்தை அரிய வகை மரமாக அறிவித்துள்ள மதுரை உயர்நீதிமன்றம், அழியும் நிலையிலுள்ள இந்த மரத்தை வெட்டக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை வழக்கறிஞர் ஜெயராம் சித்தார்த், பனை மரங்களைப் பாதுகாக்குமாறு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொதுநல மனு தாக்கல் செய்தார். ``தமிழகத்தின் மாநில மரம் பனை. இதன் ஓலை முதல் அனைத்துப் பாகங்களும் பலன் தருபவை. ஒரு மரத்தின் ஆயுள் 150 ஆண்டுகள். அவற்றை செங்கல்சூளை, தொழிற்சாலை பயன்பாட்டிற்காக அழித்து வருகிறார்கள். பனைமரங்களைப் பாதுகாக்க அரசு சட்டம் கொண்டுவந்தது. பனை மர நல வாரியம் தொடங்கப்பட்டது. பனைப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் அவற்றைப் பாதுகாப்பதோடு சரி. இந்த மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை, திட்டம் எதுவும் இல்லை. மீதமுள்ள மரங்களைப் பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பனை மரப் பாதுகாப்பு தொடர்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், பனையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். அதை விசாரித்த நீதிபதிகள், ``இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை. மேலும், எதிர்காலச் சந்ததியினரை மனதில் கொண்டு அன்றாட வாழ்க்கைக்கு அதிக அளவில் பயன்படும் பனைகளை அதிக அளவில் நடவேண்டியதும் தமிழக அரசின் கடமை" என்று கூறி அதிகப் பனை மரங்களை நட உத்தரவிட்டதோடு, கூடுதலாகப் பனையை அரிய வகை மரமாக அறிவித்து, அதை வெட்டவும் கூடாதென்று தடை விதித்துள்ளது.

தமிழகத்தின் மாநில மரமாகப் பனை அறியப்படுகிறது. ஆனால், அதை நாம் மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால்தான், அதைப் பாதுகாக்க நீதிமன்றம் நாடிச் செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவுதான், இன்று அதை அழியும் நிலையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டது.

கஜா புயலின்போது, அதன் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அத்தனை மரங்களும் மண்ணோடு சரிந்தன. வானுயர்ந்து நின்ற தென்னைகள் மரங்கள் மண்ணைத் தொட்டபோது, விவசாயிகள் பட்ட துயரங்களைக் கூற வார்த்தைகள் போதாது. ஆனால், அவ்வளவு பெரிய புயலையும் கடந்து கம்பீரமாக நின்றது பனை மட்டும்தான்.

மண்ணைக் கெட்டியாகப் பிடித்து வைக்கக்கூடிய பனை மரங்கள், தமிழனைப் போலவே உறுதிகொண்டவை. அவை அவ்வளவு எளிதில் சாய்ந்துவிடுவதில்லை. அவற்றைச் சாய்க்க இயற்கையே போராடவேண்டும். தல விலாசத்தில் 801 வகையாகப் பனை மரத்தின் பாகங்கள் பயன்படுவது குறித்துப் பாடப்பட்டுள்ளது. பனை குறித்துத் தொல்காப்பியர் காலத்திலேயே பேசப்பட்டுள்ளது. அப்போதிருந்தே அதுசார்ந்த பொருள்களின் பயன்பாடு தமிழ்ச் சமூகத்தில் இருந்துள்ளது என்பதே அதற்கான சான்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான வரலாறுகள் பலவும் பனை ஓலைகளின் மூலமே பாதுகாக்கப்பட்டு, நம் காலம் வரை கடத்தப்பட்டுள்ளன.

தமிழர் மரபின் அதே பழைய நடைமுறையை இப்போது மதுரை உயர்நீதிமன்றம் பின்பற்றியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்
ஆ.சிவசுப்பிரமணியன்
ஆ.சிவசுப்பிரமணியன்

பனை மரத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள அங்கீகாரம் குறித்துப் பேசிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், ``ஒரு தாவரத்தின் தேவையென்பது சமூக வளர்ச்சியோடு தொடர்புடையது. ஒன்று அந்தத் தாவரம் சமூக வளர்ச்சியில் பாதிப்புகளை, மாறுதல்களை ஏற்படுத்தும். அதேமாதிரி, சமூக வளர்ச்சி சில தாவரங்களைத் தேவையில்லாததாகவும் மாற்றிவிடும். இவையிரண்டையும் வரலாற்று நியதி என்றுகூட சொல்லலாம். பனையைப் பொறுத்தவரை, சில பயன்பாடுகள் இப்போது தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், அடிப்படையில் பனையின் தேவையென்பது நம் வாழ்வியலில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. ஆனால், இப்போதைய சூழலில் உடனடி லாபம் பார்க்க வேண்டுமென்பதற்காகப் பனை மரத்தை வெட்டிவிடுகிறார்கள். அதை வளர்த்து அதன் பயனை நுகர்வதைவிட, அதை அழித்து அதன் பயனை நுகர்வதுதான் இப்போது அதிகம் நடக்கிறது. அதிகமாகச் செங்கல் சூளைக்கு எரிபொருள் ஆவதால், பனையை அதிகமாக வெட்டுகிறார்கள்.

`தமிழ்நாடு கத்துக்கணும்!' பனைமர பாதுகாப்பில் அசத்தும் கம்போடியா

அதேநேரம், வெட்டப்படும் பனைக்கு மாற்று நடப்படுவதில்லை. ஒன்று அந்த நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள் அல்லது கட்டடம் கட்டுகிறார்கள். அதனால் பனையினுடைய எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்துகொண்டே வருகிறது. அவை குறித்த நம்பத்தகுந்த சரியான புள்ளிவிவரங்களை நாம் முறையாகச் சேகரிக்கவில்லை. கிராமங்களில் இருக்கும் பனையினுடைய எண்ணிக்கைக்கும் ஆவணத்திலிருக்கும் பனையினுடைய எண்ணிக்கைக்கும் இடையில் பெருத்த வேறுபாடு இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.

திருவண்ணாமலை அருகே திருப்பனங்காட்டங்குடி என்றொரு தலம் உண்டு. அந்தக் கோயிலின் தல விருட்சம் பனைதான். அந்தக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டில், உயிருள்ள பனையை வெட்டுபவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, மன்னராட்சி காலத்திலிருந்தே பனை மரத்தை வெட்டுபவர்களுக்குத் தண்டனை வழங்கும் நடைமுறை இருந்துள்ளது. தமிழர் மரபின் அதே பழைய நடைமுறையை இப்போது மதுரை உயர்நீதிமன்றம் பின்பற்றியுள்ளது என்றுதான் கூறவேண்டும்" என்று கூறினார்.

பனை மரம்
பனை மரம்

பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தின் அடையாளமாக இருந்த பனையின் மரபை மறக்கடிக்கும் வகையிலான வாழ்வியல் முறைக்கு நாம் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்குள் மாறத் தொடங்கிவிட்டோம். அந்த மாற்றம் நமக்குக் குறுகிய காலப் பயன்களையும் நீண்டகாலத் தீமைகளையும் செய்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, பனை என்ற ஒரு தாவர வகையையே அழிவின் விளிம்பிற்குத் தள்ளிவிட்ட அபாயத்தையும் அந்த மாற்றம் ஏற்படுத்திவிட்டது. இதைச் சரிசெய்ய, ஆயிரமாண்டுக்கால தமிழர் மரபைப் பறைசாற்ற மதுரை உயர்நீதிமன்றக் கிளை முதல் படியை எடுத்து வைத்துள்ளது. தமிழக அரசாங்கமும், பனை மர நல வாரியத்தின் மூலம் உரிய திட்டங்களைத் தீட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு