Published:Updated:

நீலகிரி அதிர்ச்சி: மூங்கில் தேடிவந்த யானை! - தனியார் ரிசார்ட்டில் உயிரிழந்த சோகம்

இறந்துகிடந்த யானை
இறந்துகிடந்த யானை

தனியார் ரிசார்ட்டுக்குள் மூங்கில் புதர் ஒன்று உள்ளது. இரவு நேரத்தில் மூங்கிலை உண்பதற்காக வந்த யானை தும்பிக்கையை உயர்த்தி மூங்கிலை வளைத்துள்ளது. அதற்கு சற்று உயரத்தில் மின் கம்பி இருந்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி அருகில் உள்ள 'பேம்பு பேங்க் ரிசார்ட் ' எனும் தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

elephant found dead
elephant found dead

யானை இறப்பு தகவலைக் கேள்விப்பட்டு நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள் யானை இறந்திருப்பதை உறுதி செய்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் ஆய்வில், யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டனர்.

காதில் ரத்தம்; உயிரிழந்த பெண் யானை! - மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி

யானையின் இறப்பு குறித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்திடம் பேசினோம். "தனியார் ரிசார்ட்டுக்குள் ஒரு மூங்கில் புதர் உள்ளது. இரவு நேரத்தில் மூங்கிலை உண்பதற்காக வந்த யானை தும்பிக்கையை உயர்த்தி மூங்கிலை வளைத்துள்ளது.

அதற்கு சற்று உயரத்தில் மின் கம்பி செல்கிறது. மூங்கில் மின்கம்பியில் உரசி யானையின் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. இறந்தது ஒரு ஆண் யானை. சுமார் 15 வயது இருக்கும். அரசின் அனுமதி பெற்றே இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. மின்கம்பியும் சரியான உயரத்தில் உள்ளது. இருப்பினும், விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

யானை மரணம்
யானை மரணம்

நீலகிரியைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகையில், ``யானைகளின் இறப்பு பேரிழப்பாக உள்ளது. அதுவும்‌ ஆண்‌ யானைகளின் இறப்பு இயற்கை சமநிலையை அழிவும் பாதைக்கு இட்டுச்செல்லும் எச்சரிக்கையாகவும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே முதுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தங்கும் விடுதி வளாகங்களில் மின்சாரம் தாக்கியும், கழிவுநீர் தொட்டியில் விழுந்தும் யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. மனிதத் தவறுகளால் யானைகள் உயிரிழப்பு இனியும் தொடர்ந்தால் அது மனித இனத்திற்கே தீங்காய் அமைந்துவிடும்" என எச்சரிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு