Published:Updated:

`1.5 ஏக்கர், 3,000 புற்கள்!- இயற்கையின் நீர் வங்கிக்கு 6 மாதத்தில் உயிர்கொடுத்த உள்ளூர் மக்கள்

சதுப்பு நில நிலத்தில் நடவு செய்யப்பட்ட புற்கள்
News
சதுப்பு நில நிலத்தில் நடவு செய்யப்பட்ட புற்கள் ( கே.அருண் )

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடரும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், சதுப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் ஆட்சியரின் உதவியுடன் உள்ளூர் மக்களே ஈடுபட்டு வெற்றிகண்டுள்ளனர்.

'தென்னகத்தின் தண்ணீர்த்தொட்டி' என அழைக்கப்பட்ட நீலகிரி மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாகத் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்துவருகிறது. குறிப்பாக, குன்னூர் நகரம் முழுக்க தண்ணீர்ப் பஞ்சம் நாளுக்கு நாள் ஆட்டிப்படைக்கிறது. 3௦ வார்டுகள் உள்ள குன்னூர் நகரில், 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்துவருகின்றனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரமாக, ரேலியா அணை உள்ளது.

சதுப்பு நிலத்தில் வளர்ந்துள்ள கோரைப்புற்கள்
சதுப்பு நிலத்தில் வளர்ந்துள்ள கோரைப்புற்கள்

43.6 அடி உயரம் உள்ள ரேலியா அணையில், தற்போது 10 அடி மட்டுமே நீர் இருப்பில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குன்னூரில் 2௦ நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஏழை மக்கள் தண்ணீரை விலைகொடுத்து வாங்க முடியாமல் தவித்துவருகின்றனர். குன்னூரில், தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகள், சதுப்பு நிலங்கள், ஆக்கிரமிப்பு, களைத் தாவரங்கள் போன்றவைதான் என சூழலியல் ஆய்வாளர்கள் கூறிவந்தனர். நீராதாரங்களைப் பாதுகாக்க, நகராட்சியும் அக்கறை காட்டவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், குன்னூரில் உள்ள மக்கள் சிலர் கூட்டாக இணைந்து, கைவிடப்பட்ட நீராதாரங்களைத் தேடி அலைந்து சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.இதன் ஒரு அங்கமாக, குன்னூர் எடப்பள்ளி அருகில் ஆக்கிரமிப்புகளாலும் களைத் தாவரங்களாலும் அழிவுக்குத் தள்ளப்பட்ட 1.50 ஏக்கர் சதுப்பு நிலத்தை மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் புனரமைத்து, நேட்டிவ் கிராஸ் எனப்படும் பூர்வீக புற்களை நடவுசெய்தனர். முதல் கட்டமாக, 3 ஆயிரம் புற்களை நடவுசெய்தனர். இதன்மூலம், இந்தப் பகுதியில் தற்போது நீர்வளம் அதிகரித்துள்ளது.

மீட்கப்பட்ட சதுப்பு நிலம்
மீட்கப்பட்ட சதுப்பு நிலம்

சதுப்பு நில மீட்பில் ஈடுபட்டிருந்த குன்னூர் வசந்தன் கூறுகையில், “மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் கடந்த பிப்ரவரி மாதம், சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய பூர்வீக புல் வகைகளை நடவு செய்தோம். இந்த வகை புற்களின் வேர்கள், நீரை ஸ்பான்ச் போன்று தக்கவைத்து, மெல்ல கசியச்செய்யும். மேலும், நீரைத் தூய்மைசெய்து குடிப்பதற்கு உகந்ததாக நேரடியாகக் கிடைக்க செய்யும். சதுப்பு நில மீட்பு நல்ல பலனைத் தந்துள்ளது. இதே போன்று மற்ற இடங்களிலும் செய்ய திட்டம் வைத்துள்ளோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து குன்னூர் நகர நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் மனோகரன் கூறுகையில், “குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரிக்கும் காட்டேஜ்கள் மற்றும் அளவுக்கு அதிகமாகப் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், கண்டுகொள்ளப்படாத நீர் நிலைகள் போன்ற பல காரணங்களால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதுபோன்ற சதுப்பு நில மீட்பு நடவடிக்கைகள்மூலம் நீர் வளத்தைப் பெருக்க முடியும்” என்றார்.

ஆக்கிரமிப்புகளாலும் களைத் தாவரங்களாலும் அழிவுக்குத் தள்ளப்பட்ட 1.50 ஏக்கர் சதுப்பு நிலத்தை மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் புனரமைத்து, நேட்டிவ் கிராஸ் எனப்படும் பூர்வீக புற்களை நடவுசெய்தனர்.

குன்னூர் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, எடப்பள்ளி சதுப்பு நிலத்தில் புற்களை நடவு செய்ததன்மூலம் நீர்வளம் நன்கு அதிகரித்துள்ளது. தற்போது, இந்தப் பகுதியில் குடிநீருக்காக கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சில அடிகளிலேயே நல்ல நீர் கிடைக்கிறது” என்றனர்.