Published:Updated:

`மத்திய தரைக்கடலில் ஜெல்லி மீன்களைவிட அதிக மாஸ்க்குகள்!' - எச்சரிக்கும் நிபுணர்கள்

மாஸ்க்
மாஸ்க் ( Pixabay )

மாஸ்க், கையுறைகளோடு சேர்த்து, ஒற்றைப் பயன்பாட்டுப் பொருள்களான நெகிழி டம்ளர்கள், தட்டுகள், மெழுகு பூசப்பட்ட தட்டுகள், டம்ளர்கள், ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பைகள் போன்றவை சந்தைக்குள் புதுப்பிறவி எடுக்கத் தொடங்கியுள்ளன.

கொரோனா பேரிடர்சூழலில் உடல்ரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ மனரீதியாகவோ ஏதாவதொரு வகையில் எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பாதிக்கப்படாத துறை என்றால், அது பிளாஸ்டிக் உற்பத்தித் துறைதான். ஊரடங்கு காலகட்டத்தில் அந்த அளவுக்கு அதிகமாக ஒற்றைப் பயன்பாட்டுப் பிளாஸ்டிக் உற்பத்தி அதிகரித்துள்ளது.

மறு பயன்பாடு செய்யக்கூடியதாக உற்பத்தி செய்யப்பட்டவை அனைத்துமே, மனிதர்களுக்கு இடையிலான தொடர்பிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக, இப்போது வலிய தவிர்க்கப்படுகின்றன. இது, முன்பைவிட அதிகளவிலான கழிவுகளை உருவாக்குகின்றது. இவற்றோடு நாம் நம்மை கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் மற்றுமொரு பொருளும், அஞ்சத்தக்க வகையில் கழிவுக்கூடங்களில் குப்பையாகக் குவிந்துகொண்டிருக்கின்றது.

PPE
PPE
Medgadget
விரைவில் மத்திய தரைக்கடலில் ஜெல்லி மீன்களைவிட அதிகமாக மாஸ்க்குளைப் பார்க்கலாம்.
லாரென்ட் லொம்பார்ட் (Laurent Lombard)

ஒற்றைப் பயன்பாட்டுப் பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளால் தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி ஒற்றைப் பயன்பாட்டுப் பொருள்களைப் பயன்பாட்டிற்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றனர். ஒற்றைப் பயன்பாட்டுப் பொருள்களான நெகிழி டம்ளர்கள், தட்டுகள், மெழுகு பூசப்பட்ட தட்டுகள், டம்ளர்கள், ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பைகள் போன்றவை சந்தைக்குள் புதுப்பிறவி எடுக்கத் தொடங்கியுள்ளன. இதன்காரணமாக ஒருபுறம் கழிவுகள் கூடிக் கொண்டேயிருக்க, இன்னொருபுறம் சுகாதாரக் கழிவாகக் கருதப்படும் மாஸ்க்குகளின் எண்ணிக்கையும் கழிவுக்கூடத்தில் கூடிக்கொண்டேயிருக்கின்றது.

1,88,708 பாட்டில்கள், 25,000 ஆடைகள்... பிளாஸ்டிக் மறுசுழற்சியில் கலக்கும் திருப்பூர் நிறுவனம்!

இன்றைய கொரோனா பேரிடர் காலத்தில், படையின் முன் வரிசையில் நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்களிலிருந்து மருத்துவர்கள் வரை அனைவருக்குமே நெகிழி அத்தியாவசியமானதாக இருக்கின்றது என்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது. மருத்துவ உபகரணங்களில், பாதுகாப்பு உபகரணங்களில் பிளாஸ்டிக் முக்கியப் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழலில், பொதுமக்களுடைய பாதுகாப்பிற்கும் பிளாஸ்டிக்துறை அவசியமாக உள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஒற்றைப் பயன்பாட்டு மாஸ்க், பாலி புரொப்பலீன் என்ற ஒருவகை நெகிழிப் பொருளிலிருந்து தான் செய்யப்படுகின்றது. இவை இன்றைய சூழலில் நம் வாழ்க்கை முறையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகிவிட்டது.

mask
mask
26,000 டன்
இந்தியா ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் நெகிழிக் கழிவுகள்.

இந்நிலையில், இங்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் நெகிழி மாசுபாட்டை எப்படிக் கையாள்வது, எப்படி அணுகுவது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். அதிகரிக்கும் கழிவுகளை, அவை அதிகரிக்கும் வேகத்திற்கு நிகராக மறுசுழற்சி செய்ய முடியாமல் மறுசுழற்சி ஆலைகள் திணறுகின்றன. உலகளவில் 8.3 பில்லியன் மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. 2020-ம் ஆண்டுக் கணக்குப்படி, உலகில் மொத்தமாகச் சுமார் 5.25 டிரில்லியன் சிறு சிறு பிளாஸ்டிக் பொருள்கள் நம்முடைய பெருங்கடல்களில் இருக்கின்றன. அதாவது, ஒரு சதுர மைல் பரப்பளவுக்கு 2,69,000 டன் நெகிழிக் கழிவுகள் குவிந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட கணக்குப்படி, இந்தியா ஒரு நாளைக்கு 26,000 டன் நெகிழிக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றது.

கடந்த இரண்டு மாதங்களில் இந்த அளவு அதிகரித்திருக்கும் என்று சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர். தமிழகத்தில் 56.82 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் பெரும்பான்மைக் குடும்பங்கள் தினக்கூலி, வாரக் கூலியை நம்பி வாழ்பவர்கள், விவசாயக் குடும்பங்கள் போன்றவையே உள்ளன. குடும்பத்திற்கு ஒருவர் என்ற கணக்கில் தினமும் காய், கனி, பால் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்காக, வேலைக்காக என்பன போன்ற காரணங்களால் வெளியே வந்தாக வேண்டும். ஒரு மாஸ்கினுடைய எடை குறைந்தபட்சம் 10 கிராம். இந்நிலையில், குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு மாஸ்க் பயன்படுத்தப்பட்டாலும்கூட, தமிழகத்தில் மட்டுமே நாளொன்றுக்குச் சுமார் 56.82 டன் மாஸ்க் கழிவுகள் உற்பத்தியாகும். இந்நிலையில் இவற்றைக் கையாள்வது குறித்துச் சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆபத்தாக மாறும் மாஸ்க் கழிவுகள்
ஆபத்தாக மாறும் மாஸ்க் கழிவுகள்
Gary Stokes

சர்வதேச இயற்கை நிதியம் (World Wide Fund for Nature) சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, அதிகபட்ச மாஸ் கழிவுகளை முறையாகக் கையாண்டு, வெறும் குறைந்தபட்ச கழிவுகளை அப்படியே விட்டால்கூட, ஒரு மாதத்திற்குச் சுமார் 10 மில்லியன் மாஸ்க்குகளை நாம் கழிவாகக் குவித்துக்கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, இத்தாலியில் கடந்த மே மாதம் மட்டுமே ஒரு பில்லியன் மாஸ்க்குள் மற்றும் அரை பில்லியன் கையுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கொரோனா கொசுவை அடிக்கும் கோடாரி... பலன் அளித்துள்ளதா 100 நாள் ஊரடங்கு?

ஒளிப்படக் கலைஞரும் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளரும் ஓஷன் ஏசியா என்ற அமைப்பின் துணை நிறுவனருமான கேரி ஸ்டோக்ஸ், கடந்த பிப்ரவரி 29-ம் தேதி அவருடைய ஃபேஸ்புக் பதிவில் ஹாங்காங் கடற்கரைகளில் குவியும் மாஸ்க் குப்பைகள் குறித்த ஒளிப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அந்த நிலை, தற்போது இந்திய நகரங்களின் கடற்கரைகளிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து, "ஹாங்காங் கடற்கரையில் 5 மாதங்களுக்கு முன்பு பார்த்த நெகிழிக் கழிவுகளைவிட தற்போது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது" என்று கேரி ஸ்டோக்ஸ் பதிவு செய்துள்ளார். அதேபோல், ஐரோப்பாவிலுள்ள பிரெஞ்சு சூழலியல் போராளியான லாரென் லொம்பார்ட் பிரான்ஸ் நதிகளில் கொரோனா காலகட்டத்தில் அதிகரிக்கும் நெகிழிக் கழிவுகள் குறித்து ஆவணப் படம் ஒன்றை இயக்கியுள்ளார். அவர், "இன்னும் 2 பில்லியன் ஒற்றைப் பயன்பாட்டு மாஸ்க்குகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டேன். விரைவில் மத்திய தரைக்கடலில் ஜெல்லி மீன்களைவிட அதிகமாக மாஸ்க்குளைப் பார்க்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

Sadly No Shortage of Surgical Masks On Hong Kong Beaches OceansAsia are currently 5 months into a year long study of...

Posted by Gary Stokes on Saturday, February 29, 2020

மாஸ்க் தயாரிக்கப் பயன்படும் பாலி புரொபலீன் மக்கும் தன்மை கொண்டதல்ல. அப்படியென்றால், அது சூழலுக்கு இசைவானது அல்ல என்று பொருள். இது மோசமான நெகிழி மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். தமிழ்நாடு மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை உத்தரவு, நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கவில்லை என்றாலும்கூட, ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது. ஆனால், எடுத்த முயற்சிகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் தற்போது நிலைமை மோசமடைந்துகொண்டிருக்கிறது. இதற்கு கொரோனாவை ஒருபக்கம் குற்றம் சாட்டினாலும், நம்முடைய இந்த மோசமான நிலைக்கு முழுப் பொறுப்பையும் அதன் தலையிலேயே சுமத்திவிட முடியாது.

இன்றைய பேரிடர் காலகட்டத்தில்கூட, கழிவுகளை முறையாகச் சேகரித்து மேலாண்மை செய்யாமல் இருக்கின்றன நகர நிர்வாகங்கள். சென்னை பெருநகரம் மட்டுமே ஒரு நாளை 5,000 டன் கழிவுகளை உற்பத்தி செய்கின்றது. அதில் 429 டன் நெகிழிக் கழிவுகள் உள்ளன. இவற்றை வெறுமனே பெருங்குடி போன்ற கழிவுக்கூடங்களில் கொட்டிவிட்டுச் செல்வதால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. அவற்றிடமிருந்து பிரச்னைகள் மேலும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.

நெகிழிக் கழிவுகள்
நெகிழிக் கழிவுகள்
Unsplash
நாம் என்றைக்குமே உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்குக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தைக் கழிவுகளைக் கையாள்வதற்குக் கொடுப்பதே இல்லை.

கடந்த மூன்று மாதங்களில் சுகாதாரப் பணியாளர்களின் வேலைப் பளு முன்பைவிடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களுடைய பணியில் முன்பைப்போல அதே பாதுகாப்பின்மை நிலவுகின்றது. தெருக்களில் தூக்கியெறியப்படும் மாஸ்க், கையுறை போன்றவற்றைக் கையாளும்போது அவற்றிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள போதுமான உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கழிவுகளைச் சேகரிக்க வரும்போது, வெறுமனே முகமூடிகளை மட்டும்தான் அவர்கள் அணிந்து வருகின்றனர். கையுறைகள், முகமூடிகள் மட்டுமன்றி முகக் கவசம், கால் உறை, சானிடைசர் பாட்டில்கள் போன்றவற்றை வழங்கி அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல், திடக்கழிவுகள், சுகாதாரக் கழிவுகள் மட்டுமன்றி மருத்துவக் கழிவுகளையும் கையாளக்கூடிய அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தின் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அப்போதுதான் அவர்களால் கழிவுகளைச் சரியாகக் கையாள முடியும். நாம் என்றைக்குமே உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்குக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தைக் கழிவுகளைக் கையாள்வதற்குக் கொடுப்பதே இல்லை. இது தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்திக்கொண்டேயிருக்க, அதனால் பாதிக்கப்படுகின்ற விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வலிகளைப் பற்றிய கவலையின்றி நாமும் கழிவுகளைத் தொடர்ந்து மெத்தனமாகவே கையாண்டு வருகின்றோம். இந்த நிலை கொரோனா காலத்திலும் தொடர்கின்றது.

ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள்
ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள்
Unsplash

நெகிழிக் கழிவுகள் பல்வேறு விதமான வேதிமங்களைக் கொண்டவை. அந்த வேதிமங்கள் மட்டுமன்றி, அதன் பயனர்களிடமிருந்து ஒட்டும் கிருமிகளும் அதில் உரைந்திருக்கும். இவையனைத்துமே சமுதாயத்தில் பல பின்விளைவுகளைக் கொண்டுவரக்கூடியவை. அதைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமன்றி, கழிவுக்கூடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களையும் அது பாதிக்கும். கூடுதலாக, கால்நடைகள், நாய், பூனை போன்றவை அவற்றை எடுக்கும்போதோ சாப்பிடும்போதோ அவற்றையும் இது மோசமாகப் பாதிக்கும் அபாயம் உள்ளது. மத்திய மாநில அரசுகள், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக, கொரோனா காலகட்டத்தில் உற்பத்தியாகின்ற கழிவுகளை முறையாகக் கணக்கு வைத்து, அவை பயணிக்கும் இடங்களை வரைபடமாக்கி முறையாகத் தணிக்கை செய்ய வேண்டும். அப்போதுதான் அதைக் கையாள்வதற்கான திட்டத்தை வகுக்க முடியும்.

எந்தவொரு சமுதாயம், கழிவுகளைச் சரியாக மேலாண்மை செய்கின்றதோ அந்தச் சமுதாயம்தான் ஆரோக்கியமான சமுதாயமாக விளங்க முடியும். இந்தக் கொள்ளை நோய்ப் பேரிடர் காலத்திலாவது நாம் அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு