Published:Updated:

`முதல்நாள் 5 பெண்கள்; இன்று 1000 பேர்!'- நர்மதா நதிக்கரை மக்களைக் காக்கப் போராடும் மேதா பட்கர்

ஐஷ்வர்யா

முதல் நாள் 5 பெண்களுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய மேதாவுடன், தற்போது 1,000 பேர் இணைந்துள்ளனர்.

மேதா பட்கர்
மேதா பட்கர் ( தே.தீட்சித் )

இந்த மாதத் தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக குஜராத்தின் சர்தார் சரோவர் அணையின் பின்நீர்நிலைகளில் (BackWaters) தண்ணீர் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மத்தியப் பிரதேசத்தின் பர்வானி போன்ற மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. ``இதுகுறித்து காங்கிரஸ் அரசு, குஜராத் மாநில அரசுடனும் மத்திய அரசுடனும் விரைந்து பேசி முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால், மக்களின் வாழ்வாதாரம் அச்சத்துக்குள்ளாகும் சூழலில் இருக்கிறது” என்கின்றனர்.

அவரது கோரிக்கைகள் முழுக்க முழுக்க நியாயமானவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இந்த அணையால் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
மேதாவின் நண்பர்கள்

இதையடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்த சுமார் 100 பேர் பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆனால், மையங்களில் `அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இன்னும் பல்வேறு கிராமங்கள் இந்த வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் அந்த மக்களுக்கான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்' என தொடர்ந்து மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசுக்கு நர்மதா நதி மீட்புக் குழுவின் தலைவர் மேதா பட்கர் வலியுறுத்தி வந்தார்.

மேலும், அணையின் நீர்மட்டம் 133 மீட்டருக்கு அதிகமாகக் கூடாது என்னும் நிலையில், அந்த அளவீட்டைக் கடந்திருக்கிறது. நீர் மட்டம் 127 மீட்டர் உயர்ந்தாலே ராஜ்காட் பகுதி மொத்தமாக நீரில் மூழ்கிவிடும்.

சர்தார் சரோவர் அணை
சர்தார் சரோவர் அணை
குஜராத் அரசு, அணையைத் திறந்துவிடுவதில் காலதாமதம் காட்டிவருகிறது. இதனால் மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. குஜராத் அரசு இந்தப் பாதிப்பை உணராமல் செயல்பட்டுவருகிறது. மத்தியப்பிரதேசத்தின் ராஜ்காட் மற்றும் சோட்டா பட்டா கிராமங்களைச் சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கு இன்னும் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து கடந்த ஏழு நாள்களாக மேதா பட்கர் தொடர் உண்ணாவிரதமும் இருந்துவருகிறார்.

முதல் நாள் 5 பெண்களுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய மேதாவுடன், தற்போது 1,000 பேர் இணைந்துள்ளனர். மேதாவின் நண்பர்கள் இதுகுறித்து கூறுகையில், ``மேதா உண்ணாவிரதம் இருப்பது இது முதல்முறையல்ல. அவர், தனது போராட்டங்களை இதுவரையில் சத்தியாக்கிரக முறையிலேயே மேற்கொண்டிருக்கிறார்.

உண்ணாவிரதத்தால் மோசமாகிவரும் மேதாவின் உடல்நிலை
உண்ணாவிரதத்தால் மோசமாகிவரும் மேதாவின் உடல்நிலை

ஆனால், ஒருவாரம் கடந்த நிலையில் உண்ணாவிரதத்தால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது கோரிக்கைகள் முழுக்க முழுக்க நியாயமானவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இந்த அணையால் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் அரசு, குஜராத் மாநில அரசுடனும் மத்திய அரசுடனும் விரைந்து பேசி முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால், மக்களின் வாழ்வாதாரம் அச்சத்துக்குள்ளாகும் சூழலில் இருக்கிறது” என்கின்றனர்.