Published:Updated:

`இயற்கைக்கு எதிராகச் செயல்படுவது ஆபத்தானது!' மோடி சொன்னதும் மத்திய அரசின் முரண்களும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோடி - பியர் க்ரில்ஸ்
மோடி - பியர் க்ரில்ஸ் ( Discovery Channel )

சுற்றுச்சூழல் செயலாக்கக் குறியீட்டின் படி (Environmental Performance Index), மோசமான நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பியர் க்ரில்ஸுடனான பயணத்தில் சூழலியல் பாதுகாப்பு பற்றிப் பேசிய மோடி, தன் ஆட்சியில் சூழலியல் பாதுகாப்புக்காகச் செய்தவை என்ன?

டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான 'மேன் வெர்சஸ் வைல்ட்' சிறப்பு எபிசோடில் கலந்துகொண்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் பூங்காவின் அடர்ந்த காடுகளில், மோடியும் பியர் க்ரில்ஸும் இணைந்து சர்வைவல் சாகசங்களில் ஈடுபடப் போவதாக விளம்பரங்கள் வெளியானதிலேயே தொடங்கியது எதிர்பார்ப்பு.

'குட்டிப் பையனாகக் குட்டி முதலையை வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கேன்!' #ManvsWild-ல் மோடி #Highlights

பியர் க்ரில்ஸ் முதலில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, ஜிம் கார்பெட் பூங்காவை நமக்கு அறிமுகம் செய்துவிட்டு, 6 கிலோமீட்டர்கள் நடந்துசென்று, மோடிக்காகக் காத்திருக்கிறார். காரில் மோடி வந்து இறங்கியவுடன், இருவரின் சாகசப் பயணம் தொடங்குகிறது.

ஜிம் கார்பெட் பூங்கா இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தளங்களுள் ஒன்று. மலைகள், இயற்கை, ஆறுகள், குளங்கள் முதலானவற்றை விரும்புபவர்களுக்கு இந்தப் பூங்கா சிறந்த இடம். சுற்றுச்சூழலில் நிலவும் பன்முகத் தன்மைக்கு எடுத்துக்காட்டாக இந்த இடம் நிலவுகிறது. இதே போல, இந்தியாவும் பன்முகத் தன்மையில் தலைசிறந்த நாடு. 100 மொழிகள், 1,600 பேச்சு வழக்குகள்.. இதுதான் இந்தியாவின் பன்முகத் தன்மை!
நரேந்திர மோடி, Man Vs Wild சிறப்பு நிகழ்ச்சியில்...

பியர் க்ரில்ஸிடம் இந்தியாவைப் பற்றிய மோடியின் முதல் அறிமுகமே அவர் சார்ந்திருக்கும் பி.ஜே.பி கட்சியின், 'ஏக் பாரத்' (ஒரே இந்தியா) கொள்கைக்கு முரணாக அமைந்திருந்தது.

பியர் க்ரில்ஸ் ஜிம் கார்பெட் பூங்கா ஆபத்தானது என மோடியிடம் கூற, அதை இடைமறிக்கும் மோடி, 'இந்த இடத்தை நாம் ஆபத்தானதாகக் கருதக் கூடாது. இயற்கைக்கு எதிராக செயல்படுவது ஆபத்தானது' என அறிவுறுத்துகிறார்.

மோடியின் கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியில், காடுகள், வன உயிர்கள், கடற்கரைகள் மிகப்பெரிய சூழலியல் பாதிப்புக்குள்ளாகின. மக்களின் அனுமதியின்றி, பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் காடுகள் தாராளமாக அளிக்கப்பட்டன.

Schemes Approved by Modi Govt
Schemes Approved by Modi Govt
Vikatan Infographics

காடுகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைவிட, பி.ஜே.பி-யின் ஆட்சியின் அதிகளவிலான ஒப்புதல்கள் அறிவிக்கப்பட்டன. மத்திய சுற்றுச்சூழல் துறையின் பணியான சூழலியல் பாதுகாப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு, காடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒற்றைச் சாளர அனுமதி அளிக்கும் அலுவலகமாக மத்திய சுற்றுச்சூழல் துறை சுருக்கப்பட்டது.

எந்த ஆட்சியில் அதிகளவிலான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன?
எந்த ஆட்சியில் அதிகளவிலான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன?
Vikatan Infographics

பாஜகவின் ஆட்சியில் காடுகளுக்குள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதோடு, பழங்குடி மக்களின் வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகின.

'குட்டிப் பையனாகக் குட்டி முதலையை வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கேன்!' #ManvsWild-ல் மோடி #Highlights

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியின் பதிலாக, கடந்த ஐந்தாண்டுக்கால மோடி ஆட்சியில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்டது. மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ 1 கோடி மரங்களை வெட்டியுள்ளதாகப் பதிலளித்தது.

மோடி ஆட்சியில் ஆண்டுதோறும் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை!
மோடி ஆட்சியில் ஆண்டுதோறும் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை!
Vikatan Infographics

மோடி ஆட்சியின் முதல் ஆண்டில், 'தொழில் வளர்ச்சிக்காக மாற்றப்பட வேண்டிய 60 முக்கிய குறிப்புகள்' எனச் சுற்றுச்சூழல் துறை அனுமதியை எளிதாகப் பெற வேண்டி இந்தியத் தொழில் கூட்டமைப்பு அளித்த அறிக்கையை நிறைவேற்றியது.

மேலும், அதே ஆண்டில் முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்றை அமைத்த மோடி அரசு, இந்தியாவின் சூழலியல் சட்டங்களில் முக்கியமானவை எனக் கருதப்படும் 6 சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் ஏற்படுத்த முயன்றது. சுப்ரமணியன் குழுவின் பரிந்துரைகள் மீது எதிர்ப்புகள் எழ, அவை கைவிடப்பட்டன.

காடுகளில் வாழும் 11 லட்சம் பழங்குடி குடும்பங்கள் பாஜக ஆட்சியில் காடுகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

விரட்டப்படும் பழங்குடி குடும்பங்கள்!
விரட்டப்படும் பழங்குடி குடும்பங்கள்!
Vikatan Infographics

கடற்கரைகளையும் கடல் எல்லைகளையும் எப்படிப் பயன்படுத்துவது என்று தீர்மானிக்கும் 'கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட' வரைபடங்கள் பூர்வகுடிகளான மீனவ மக்களின் கிராமங்கள் இல்லாமல் வெளியாகி, மீனவ மக்களின் கடும் எதிர்ப்பைப் பெற்றது.

உலகளவில் கணக்கிடப்படும் 'சுற்றுச்சூழல் செயலாக்கக் குறியீட்டில்', 180 நாடுகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்தியா 177வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் ஆட்சியின் முடிவில், இந்தியா பிடித்திருந்த இடம் - 155.

'சுற்றுச்சூழல் செயலாக்கக் குறியீட்டின்' (Environmental Performance Index) படி, மோசமான நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

2018-ம் ஆண்டு முடிவில், உலகம் முழுவதும் மாசடைந்த டாப் 20 நகரங்கள் பட்டியலில், இந்தியாவின் 15 நகரங்கள் இடம்பெற்று, இந்திய சுற்றுச்சூழல் துறையின் செயல்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

இந்தியாவின் நிலைமை இப்படியிருக்க, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, பாஜக வெளியிட்ட வாக்குறுதிகளில் 'காடுகள் மற்றும் சுற்றுச்சூழல்' என்ற தலைப்பின்கீழ், 'காடுகளில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்ற ஒப்புதல்களும் அனுமதிகளும் முன்பைவிட வேகமாக அளிக்கப்படும்' எனக் கூறப்பட்டிருந்தது, பா.ஜ.க-வின் சூழலியல் கொள்கையின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.

மோடி - பியர் க்ரில்ஸ்
மோடி - பியர் க்ரில்ஸ்
Discovery Channel
நான் 13 ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தேன். என் நாடு நான் பிரதமராக வேண்டும் என விரும்பியது. அதனால் கடந்த 5 ஆண்டுகளாகப் பிரதமராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். எனினும் எனது கவனம் முழுவதும் ஒரே குறிக்கோளின் மீது உள்ளது. அது வளர்ச்சி மட்டுமே!
நரேந்திர மோடி, Man Vs Wild சிறப்பு நிகழ்ச்சியில்...

மோடி கவனம் செலுத்தும் வளர்ச்சி என்ற குறிக்கோள், இந்தியாவின் சூழலியலை, பழங்குடிகளின் வாழ்க்கையை, இயற்கை மீதான எல்லைமீறிய சுரண்டலை, இவற்றின் விளைவாகக் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் பெருகுவதை நியாயப்படுத்துவதாகத் தரவுகள் உணர்த்துகின்றன.

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் அவசர கட்டத்தை அடைந்து வரும் சூழலில், 'இயற்கைக்கு எதிராகச் செயல்படுவது ஆபத்தானது' என்று மோடி பியர் க்ரில்ஸிடம் சொன்னதை, அவருக்கும், அவருடைய அமைச்சரவைக்கும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டியது சூழலியல் ஆர்வலர்கள் அனைவரின் கடமையாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு