Published:Updated:

`அழிந்துவரும் பாறு கழுகுகள்'- முதுமலையில் வாகன சவாரிக்கு தற்காலிக தடை!

அடர் வனங்களுக்குள் வாகனங்கள் சென்று வருவதன் மூலம் ஏற்படும் இரைச்சல்களால் பாறு கழுகுகள் இனப்பெருக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதுடன் அவை அழியக் கூடிய அபாயம் உள்ளது.

Mudumalai
Mudumalai

முதுமலையில் அடர் வனப்பகுதிகளாக உள்ள ஜகலிகடவு உள்ளிட்ட 3 வழித்தடங்களில் வாகன சவாரி மேற்கொள்ள வனத்துறை தடை விதித்துள்ளது.

Mudumalai
Mudumalai

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலமான சீகூர், சிங்காரா வனங்களில் சமீபத்தில் சூழல் மேம்பாட்டு திட்டம் செயல்டுத்தப்பட்டது.

வாடகை ஜீப் மூலம் வனத்துக்குள் சுற்றுலாப் பயணிகளை சவாரி அழைத்துச் செல்ல மசினகுடியில் இருந்து சீகூர் அருவி, விபூதிமலை, ஆச்சக்கரை, ஆனிக்கல், ஜகலிகடவு, நெல்சன்தோட்டம், சிறியூர் உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வனத்துறை அனுமதி வழங்கியது.

Mudumalai
Mudumalai

நுழைவுக் கட்டணமாக ரூ.130, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.400 நிர்ணயிக்கப்பட்டது. வாகனங்களின் வாடகை ரூ.2,000 எனவும் தீர்மானிக்கப்பட்டது. கேமரா, வீடியோ கேமரா உள்ளிட்டவற்றுக்கும் தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வழித்தடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஜீப் மூலம் வாகன சவாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர்.

அமைதியான வனமாக இருப்பதால் இங்குள்ள உயரமான மரங்களில் அழிந்துவரும் பட்டியலில் உள்ள பாறு கழுகுகள் கூடுகள் அமைத்து குஞ்சுகள் பொறிக்கின்றன. தற்போது செயல்படுத்தப்பட உள்ள சூழல் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ஜகலிகடவு, ஆனிக்கல் கோயில், நெல்சன் தோட்டம் என 7 இடங்களுக்கு வாகனங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் சென்று வருவதன் மூலம் ஏற்படும் இரைச்சல்களால் பாறு கழுகுகள் இனப்பெருக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதுடன் அவை அழியக் கூடிய அபாயம் உள்ளது. மேலும் புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக காட்டுயிர் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தனர். இது குறித்து விகடனிலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

Mudumalai
Mudumalai

காட்டுயிர் ஆர்வலர்களின் தொடர்‌ எதிர்ப்பால் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பாறு கழுகுகள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்புக் கருதி ஜகலிகடவு, ஆனிக்கல் கோயில், நெல்சன் தோட்டம் ஆகிய வழித்தடங்களில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வாகன சவாரி மேற்கொள்ள அதிரடி தடையை வனத்துறை தடை விதித்தது. தடை குறித்து வனத்துறை அதிகாரிகள், ``வன விலங்குகள் பாதுகாப்புக் கருதி தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்று, வாகன சவாரி மேற்கொள்ள நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தடையை மீறி யாரேனும் வாகன சவாரியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.