Published:Updated:

`புலிகளுக்கும் பாறு கழுகுகளுக்கும் பெரும் ஆபத்து!'- அச்சத்தை விதைக்கும் வனத்துறையின் சூழல் சுற்றுலா

சூழல் சுற்றுலா என்ற பெயரில் வாகன சவாரியை அனுமதித்து லாபம் ஈட்டுவது உள்ளிட்ட காரணங்களால் கானுயிர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

jeep safari
jeep safari

நீலகிரி வடக்கு வனக்கோட்ட கட்டுப்பாட்டில் இருந்த சீகூர், சிங்காரா, தெங்குமரஹாடா ஆகிய 3 வனச்சரகங்கள் கடந்த ஆண்டு முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டன. இந்தப் பகுதிகள் முதுமலையின் வெளிமண்டலமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு 688 சதுர கி.மீ., பரப்பளவுக்கு விரிவடைந்துள்ளது

Jeep safari
Jeep safari

சீகூர், சிங்காரா வனத்தில் சூழல் மேம்பாட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளூர் மற்றும் பழங்குடியின ஜீப் ஓட்டுநர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளை வனங்களுக்குள் அழைத்துச் செல்லும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலப் பகுதியிலும் அண்மையில் சூழல் மேம்பாட்டுத் திட்டம் செயல்டுத்தப்பட்டது. வாகனங்களின் மூலம் வனத்துக்குள் சுற்றுலாப் பயணிகளை சவாரி அழைத்துச் செல்ல மசினகுடியில் இருந்து சீகூர் அருவி, விபூதிமலை, ஆச்சக்கரை, வாழைத்தோட்டம், ஜகலிகடவு, நெல்சன்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன.

Vikatan

நுழைவுக் கட்டணமாக ரூ.130-ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.400-ம் நிர்ணயிக்கப்பட்டது. ஜீப் வாடகை ரூ.2,000 நிர்ணயிக்கப்பட்டது. கேமரா, வீடியோ கேமரா உள்ளிட்டவற்றுக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

Jeep safari
Jeep safari

ஜகலிகடவு, ஆனிக்கல் கோயில் பகுதி உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகன சவாரிக்கு அனுமதிக்கப்படுவதால் புலிகள் மற்றும் அழியும் பட்டியலில் உள்ள பாறு கழுகுகளின் இனப்பெருக்கம் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பாறு கழுகு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பாரதிதாசன் ``முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வெளிமண்டல பகுதியான சீகூர் வனப்பகுதியில் அழியும் பட்டியலில் உள்ள வெண்முதுகு பாறு கழுகுகளின் வாழ்விடமாக உள்ளது.

Barathidasan
Barathidasan

அமைதியான வனமாக இருப்பதால் இங்குள்ள உயரமான மரங்களில் அவை கூடுகள் அமைத்துக் குஞ்சுகள் பொறிக்கின்றன. தற்போது வனத்துறை மூலம் சூழல் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்படும் இரைச்சல்களால் பாறு கழுகுகள் இனப்பெருக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதுடன் அவை அழியக் கூடிய அபாயமும் உள்ளது" என்றார் வேதனையான குரலில்.

இதுதொடர்பாகப் பேசும் காட்டுயிர் ஆர்வலர்கள், `` இங்கு புலிகள் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதியாக உள்ளது. வாகனங்கள் சென்றுவருவதால் வனவிலங்குகளுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளது. மேலும், யானைகள் வழித்தடமாக உள்ள இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இரவு நேரங்களில் தனியார் வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சட்டவிரோத வாகன சவாரிக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது வனத்துறையே சூழல் சுற்றுலா என்ற பெயரில் வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்வகையில் வாகன சவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது" என்கின்றனர்.

jeep safari
jeep safari

சூழல் ஆர்வலர்களின் அச்சம் குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுஷலிடம் கேட்டோம். ``சூழல் மேம்பாட்டுத் திட்டத்தால் சில பகுதிகளில் வாகனங்கள் இயக்கப்படுதால் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் உறுதியாக.