9 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட முதுமலை... மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

வன விலங்குகளைப் பார்க்க காட்டிற்குள் செல்லும் சஃபாரி வாகனங்கள் காலை 6.30 மணி முதல் பத்து மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் செல்ல அனுமதிக்கப்படும்.
கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சுற்றுலாத்தலங்கள், அனைத்தும் மூடப்பட்டன. கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதுமலை புலிகள் காப்பகமும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் முதல் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலிருந்த தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டன. கடந்த மாதம் முதல் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டிலிருந்த தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன.
முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் இன்று முதல் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை 50 சதவிகித சுற்றுலா பயணிகளோடு வனத்திற்க்குள் சென்று வர வாகன சவாரி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் சென்று வந்தனர். முகாமில் உள்ள 26 யானைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்படுவதை காண 9 மணி அளவில் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவிக்கையில், "புலிகள் காப்பகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட முகக் கவசங்களை அணிந்து வரவேண்டும். மேலும் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். முறையான மருத்துவச் சான்றிதழ் மற்றும் எங்கிருந்து வருகின்றனர் என்பதற்கான சான்றிதழ் இருக்கவேண்டும்.
அடையாள அட்டையை கண்டிப்பாகக் காண்பிக்க வேண்டும். சமூக இடைவெளியோடு ஒவ்வொருவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். வன விலங்குகளைப் பார்க்க காட்டிற்குள் செல்லும் சஃபாரி வாகனங்கள் காலை 6.30 மணி முதல் பத்து மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் செல்ல அனுமதிக்கப்படும். 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அமரவைத்து உள்ளே அழைத்துச் செல்லப்படுவர்.
ஓய்வு விடுதிகளில் 2 நபர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும். டார் மென்டரி அறைகளில் 50 சதவீத சுற்றுலாப்பயணிகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். வளர்ப்பு யானைகளைப் பார்க்க தெப்பக்காடு முகாமில் 8:30 முதல் 9 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரையிலும் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அதிகபட்சம் 30 நபர்கள் மட்டுமே முகாமிற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் இருமல் போன்ற தொல்லைகள் இருந்தால் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டாது" எனத் தெரிவித்தனர்.