Published:Updated:

`காட்டுத் தீ, வனவிலங்கு வேட்டையைக் கண்காணிக்கலாம்!' - புது முயற்சியால் முதுமலை அதிகாரிகள் நம்பிக்கை

கண்காணிப்பு கேமரா
கண்காணிப்பு கேமரா

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ மற்றும் காட்டுக்குள் அத்துமீறி நுழைபவர்களைக் கண்காணிக்க ரூ.9.6 லட்சத்தில் ட்ரோன் கேமரா வாங்கப்பட்டுள்ளது.

மழை மறைவுப் பகுதியாகவும், புதர்காடுகள், இலையுதிர்க் காடுகளையும் கொண்டுள்ள முதுமலை ஒவ்வொரு கோடையையும் கடப்பது பெரும் சவால் நிறைந்தது. சுனைகள் வற்றி, ஆறுகள் வறண்டு இடம்பெயரும் வன விலங்குகளைக் கண்காணிக்கவும் வறட்சியை சதாகமாக்கி காட்டைக் கொளுத்தும் சமூக விரோதிகளைக் கண்காணிக்கவும் வனத்துறை ஊழியர்கள் 24 மணிநேரமும் கண்விழித்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முதுமலை
முதுமலை

கடந்த கோடையில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பற்றிய காட்டுத் தீ, அங்கு பெரும் பகுதியைக் காவு வாங்கி, முதுமலையில் 100 ஏக்கர் பரப்பளவையும் விழுங்கியது. அளவுக்கு அதிகமான வறட்சியால், கடந்த ஆண்டு 100-க்கும் அதிகமான காட்டுத் தீ விபத்துகள் பதிவாகின. ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க பெரும் போராட்டமே நடைபெற்றது.

Vikatan

இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே தீத்தடுப்புப் பணிகளில் களமிறங்கியது வனத்துறை. ஒரு படி மேலேபோய் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ பாதிப்புகளை அறிந்துகொள்ளவும் வன விலங்குகள் வேட்டை போன்றவற்றை தடுப்பதற்காகவும் ரூ.9.6 லட்சம் மதிப்பில் ட்ரோன் கேமரா வாங்கப்பட்டுள்ளது. இதைச் சோதனை செய்து பார்க்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் கேமரா
ட்ரோன் கேமரா

பறக்கும் கண்காணிக்கும் கேமரா குறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``முதுமலைப் புலிகள் காப்பகத்துக்கு என வாங்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் கேமரா மூலம் காட்டு தீ, பாதுகாக்கப்பட்ட வனங்களுக்குள் அத்துமீறி நுழைபவர்கள், வன விலங்குகளை வேட்டையாட முயல்பவர்களைக் கண்காணிக்க முடியும்.

மேலும், மனித - வன விலங்குகள் எதிர்கொள்ளல்களைத் தடுக்கவும் பயன்படுத்த முடியும். இந்த ட்ரோன் கேமரா 8 கி.மீ., சுற்றளவில், தரையில் இருந்து 800 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. காட்டுத் தீ ஏற்படக்கூடிய சமயங்களில் எந்தப் பகுதியிலிருந்து காட்டுத் தீ ஏற்பட்டது? மனிதர்கள் ஏற்படுத்திய தீயா எனவும் கண்டறியலாம். இதுதவிர வனப்பகுதிகளில் காயமடைந்த விலங்குகள் உள்ள இடங்களையும் கண்டறியலாம். தற்போது, இதைக் கையாளும் முறைகள் குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

காட்டுத் தீ
காட்டுத் தீ

தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வனத்துறை ஊழியர்கள் பேசுகையில், ``முதுமலைப் புலிகள் காப்பகத்தைப் பொறுத்தவரை 688 சதுர கி.மீ. பரப்பளவில் காட்டுத் தீ கண்காணிப்பு போன்ற பணிகளுக்கான நிரந்தர வன ஊழியர்கள், 150-க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளனர். 17 இடங்களில் வேட்டைத் தடுப்பு முகாம்கள் உள்ளன. இங்கிருந்து 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பது கூடுதல் உதவியாக இருக்கும்'' என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு