Published:Updated:

அந்தமானை குறிவைக்கும் `வளர்ச்சி திட்டங்கள்', ஆபத்தில் லெதர்பேக் கடல் ஆமைகள்; உணருமா அரசு?

லெதர்பேக் கடல் ஆமை
லெதர்பேக் கடல் ஆமை ( Wikimedia Commons )

இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், பல மில்லியன் ஆண்டுகளாக இந்திய நிலப்பரப்பைச் சுற்றியிருக்கும் கடல்பகுதிகளில் நீந்திக்கொண்டிருக்கும் லெதர்பேக் கடல் ஆமைகளின் இருப்பு ஆபத்துக்குள்ளாகும்.

இன்று உலக பெருங்கடல் தினம். உலகளவில் பெருங்கடல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 8-ம் தேதி உலக பெருங்கடல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பெருங்கடல்களின் ஆரோக்கியத்திற்கு, கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு உறுதி செய்யவேண்டும். ஆனால், தற்போது இந்திய அரசு அந்தமான் தீவுக்காக திட்டமிட்டுள்ள ஒரு வளர்ச்சித் திட்டம், கடல் வாழ் உயிரினங்களின் இருப்பையே சிக்கலுக்கு உள்ளாக்கும் வகையில் இருக்கிறது.

சில நாள்களுக்கு முன்னர், அந்தமான் தீவில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு ஒரு திட்டத்தை வரையறுத்தது. ``அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டத்தில், 707 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அந்தமான் தீவானது, அதன் முழு திறனுக்கும் உரிய அளவிலான வளர்ச்சியை இன்னும் சந்திக்கவில்லை. ஆகவே, அந்த நிலவியல் அமைப்பின் பொருளாதாரத் திறனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்" என்று அந்தத் திட்டம் சொல்கிறது.

Leatherback sea turtle
Leatherback sea turtle
Bernard DUPONT/ Wikimedia Commons

குட்டி அந்தமான் (Little Andaman) என்றழைக்கப்படும் அந்தத் தீவுதான், அந்தமான் தீவுக்கூட்டத்திலேயே மிகப்பெரிய தீவாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சிங்கப்பூரின் (728 சதுர கி.மீ) அளவுக்கு நிகரான பரப்பளவைக் கொண்டுள்ள இந்தத் தீவில் அதற்கு நிகரான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பது அரசின் திட்டமாக உள்ளது. மேலும், இந்தோனேசியாவிலுள்ள பாலி, தாய்லாந்திலுள்ள புகெட் ஆகிய பகுதிகளைப் போல், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் குட்டி அந்தமானை மாற்ற வேண்டுமென்று திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 7,615 பேர். ஆனால், அதற்கு நிகரான பரப்பளவுள்ள குட்டி அந்தமானின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 47 பேர். இப்படி மக்கள் பயன்பாட்டுக்கு அதிகம் வராமலிருக்கும் ஒரு தீவை முழு வளர்ச்சியில் ஈடுபடுத்துவதே அந்தத் திட்டம். அதன்கீழ், சர்வதேச விமான நிலையம், சுற்றுலா மையங்கள், சொகுசு விடுதிகள், கசினோக்கள், தீம் பார்க், சிறுகலத் துறைமுகம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய ஒரு நகரத்தையே அங்கு உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதி ஆயோக் அறிக்கையிலும், குட்டி அந்தமான் மற்றும் அதற்குத் தெற்கே அமைந்துள்ள கிரேட் நிகோபார் தீவிலும் இதுபோன்ற வளர்ச்சிகளைக் கொண்டு வர வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது.

குட்டி அந்தமான் தீவு
குட்டி அந்தமான் தீவு
STS-32 Crew Menber/ Wikimedia Commons

ஆனால், இந்த முடிவு இனப்பெருக்கத்துக்காகக் குட்டி அந்தமான் தீவில் கூடு கட்டும் லெதர்பேக் கடல் ஆமைகளின் (Leatherback turtle) இருப்பையே அபாயத்தில் தள்ளும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உலக அளவிலான கடல் ஆமை வகைகளில் ஐந்து கடல் ஆமை இனங்கள் இந்தியக் கடல்களில் காணப்படுகின்றன. அதில் லெதர்பேக் கடல் ஆமை வகை தனித்துவமானது. அதற்கு மற்ற ஆமைகளைப் போல் எலும்பு போன்ற உறுதியான ஓடுகள் இல்லை. தோல் போன்ற அமைப்புடைய, நெகிழ்தன்மை வாய்ந்த மேல்மடிப்பு கொண்ட ஓடுகளைக் கொண்டது. அதன் அடிப்படையிலேயே, தோல் பின்புறம் கொண்ட ஆமை என்பதால், அதற்கு லெதர்பேக் கடல் ஆமை என்று பெயரிடப்பட்டது.

இந்த ஆமை குறித்துப் பேசிய கடல் ஆமைகள் பாதுகாப்புக்கான மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண், ``உலக அளவில் வாழும் கடல் ஆமை வகைகளில் இதுவே மிகப் பெரிதாக வளரக்கூடியது. முழுமையாக வளர்ந்த ஒரு லெதர்பேக் கடல் ஆமை, 6 அடி நீளத்துக்கு வளரக்கூடியது. உலகளவில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதிலேயே பெரிய லெதர்பேக் ஆமை, 11 அடி நீளமும் 1,000 கிலோ எடையும் கொண்டது. இவை ஜெல்லி மீன்களை மட்டுமே உண்ணக்கூடியவை. ஜெல்லிமீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மீன்களின் இருப்பக்குச் சிக்கலை உண்டாக்கும். அப்படி நிகழாமல் தடுப்பதில் இவற்றுக்கு முக்கியப் பங்குண்டு.

லெதர்பேக் கடல் ஆமை
லெதர்பேக் கடல் ஆமை
Wikimedia Commons

இந்த ஆமை இனத்தின் உயிரியல் பேரினத்தின்கீழ் (Genus-Dermochelys) பல வகை ஆமைகள் இருந்தன. அதில் அனைத்து வகை ஆமைகளும் அழிந்துவிட்டன. தற்போது வாழ்ந்துகொண்டிருப்பது இந்த லெதர்பேக் ஆமைகள் மட்டுமே. உலகின் அனைத்து வெப்பமண்டல கடற்கரைகளிலும் இவை கூடமைக்கின்றன. அதில் பல கடலோரங்களில், இவை கூடமைப்பது தற்போது மிகவும் குறைந்துவிட்டது. இவை கூடமைக்கும் மிகச் சில பகுதிகள் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளன. அதில் குட்டி அந்தமானும் ஒன்று. மனித வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுவதாக இருந்தால், இதுபோன்ற அரிதான உயிரினங்களை நாம் இழக்க வேண்டி வரும். அதுமட்டுமன்றி, அந்தமானில் இருப்பது போன்ற அடர்த்தியான காடுகளை அழிப்பதன் மூலம் கொரோனா போன்ற இன்னும் பல விலங்கு-வழி நோய்கள் பரவுவதற்கும் வழிவகுக்கும்" என்று கூறினார்.

ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் கடல் பகுதிகளைத் தவிர, உலகின் அனைத்துக் கடல்களுக்கும் இது பயணிக்கும். இவ்வளவு தனித்தன்மை வாய்ந்த இந்த ஆமை இனம் சமீபகாலமாக எண்ணிக்கையில் மிகவும் குறைந்து வருகிறது. மலேசியாவில் 1960-களில் ஓராண்டுக்கு 5,000 கூடுகள் காணப்பட்டன. ஆனால், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆண்டுக்கு 10 கூடுகள் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டன. கிழக்கு பசிபிக்கில் அமைந்துள்ள கோஸ்டா ரிகாவிலும் இவற்றின் வரத்து மிகவும் குறைந்துவிட்டது.

லெதர்பேக் கடல் ஆமை முட்டைகள்
லெதர்பேக் கடல் ஆமை முட்டைகள்
Bernard DUPONT/ Wikimedia Commons

இந்நிலையில், தெற்காசியாவிலேயே இந்தியாவிலும் இலங்கையிலும்தான் இவற்றின் கூடுகள் தற்போது கணிசமாகக் காணப்படுகின்றன. 2009-ம் ஆண்டில் அதித் சுவாமிநாதன், நவீன் நம்போத்ரி, கார்திக் சங்கர் ஆகிய ஆய்வாளர்களைக் கொண்ட ஒரு குழு, இந்த ஆமைகளின் மீது நடத்திய ஆராய்ச்சியில், 10 லெதர்பேக் ஆமைகளின் மீது செயற்கைகோள் மூலம் கண்காணிப்பதற்கான கருவியைப் பொருத்தினார்கள். அந்த ஆய்விலிருந்து, ஒரு ஆமை 226 நாள்களில் சுமார் 13,000 கிலோமீட்டர் பயணிப்பதைக் கண்டறிந்தனர். ஒரு நாளுக்கு 50 கிலோமீட்டர் தூரத்துக்குப் பயணிக்கிறது. இவர்கள் கண்காணித்த கடல் ஆமைகள், குட்டி அந்தமானிலிருந்து தெற்காசியாவை நோக்கிப் பயணித்துள்ளன. அதில் ஒன்று மட்டும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது.

2019-ம் ஆண்டு கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில், 2004-ம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு, குறையத் தொடங்கிய இவற்றின் வரத்து மற்றும் கூடுகளின் எண்ணிக்கை, தற்போது மீண்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 2021 முதல் 2026 வரைக்குமான தேசிய கடல் ஆமைக்கான செயல்திட்டதுக்காக எழுதிய கடிதத்தில், ``பங்குனி ஆமைகளின் கூடமைக்கும் முக்கியமான இடமாக இந்தியா இருப்பதோடு, மேலும் ஐந்து கடல் ஆமைகளும் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியக் கடல்களில் காணப்படும் இவை, 1972-ம் ஆண்டின் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பட்டியல் 1-ல் ஒன்றில் பாதுகாக்கப்படுகின்றன" என்று தெரிவித்திருந்தார்.

Leatherback Sea Turtle
Leatherback Sea Turtle
Alastair Rae/ Wikimedia Commons

அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், கடல் ஆமைகள் சந்திக்கின்ற சிக்கல்களையும் அவற்றைச் சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பட்டியலிட்டிருந்தார். இருப்பினும், நிதி ஆயோக் அமைப்பின் குட்டி அந்தமான் வளர்ச்சித் திட்டங்கள், அவற்றின் இருப்புக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் தற்போது உருவாகியுள்ளது. இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், பல மில்லியன் ஆண்டுகளாக இந்திய நிலப்பரப்பைச் சுற்றியிருக்கும் கடல்பகுதிகளில் நீந்திக்கொண்டிருக்கும் லெதர்பேக் கடல் ஆமைகளின் இருப்பு ஆபத்துக்குள்ளாகும்.

இந்த ஆமைகள் கூடமைக்கும் பகுதிகளில் குட்டி அந்தமான் தீவுக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இங்கு வந்து முட்டையிடும் இந்த ஆமைகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்துவருகிறார்கள். இதுமட்டுமன்றி, இந்தத் தீவின் பெரும்பான்மை நிலப்பகுதி மனிதக் கால்தடம் படாத, பல்லுயிரிய வளம் மிகுந்த, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்துவருகிறது. அதுமட்டுமன்றி, ஓங்கே பழங்குடிகளின் பல்லாண்டுக்கால வாழ்விடமாகவும் இது இருக்கிறது. இந்நிலையில், சூழலியல் மற்றும் ஓங்கே பழங்குடிகளின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் குட்டி அந்தமான் இருக்கும்போது, அதைச் சிதைத்து புதிய நகரத்தையும் வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவருவது, அந்த நிலத்தையே சீரழித்துவிடும் என்று சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

1906-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஓங்கே பழங்குடிகளின் புகைப்படம்
1906-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஓங்கே பழங்குடிகளின் புகைப்படம்
Wikimedia Commons

சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற பழங்குடியின உரிமைக்காகச் செயல்படும் சர்வதேச அமைப்பு, ஓங்கே பழங்குடிகளைக் குட்டி அந்தமானின் பூர்வகுடிகளாக அங்கீகரித்துள்ளது. தற்போது வெறும் 112 பேர் என்ற அளவுக்கு ஓங்கே பழங்குடிகளின் மக்கள் தொகை குறைந்துவிட்டது. அழிவின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் ஓங்கே மக்களின் வாழ்வாதாரத்தில் குட்டி அந்தமானின் பங்கு முக்கியமானது. இந்நிலையில், அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் இந்த வளர்ச்சித் திட்டங்கள் ஆபத்தில் தள்ளுகின்றன.

காலநிலை அவசரம் உலகளவில் பிரகடனப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியான இயற்கைப் பேரிடர்களை மக்கள் எதிர்கொள்ளும் இன்றைய சூழலில் இதுபோன்ற ஆபத்தான வளர்ச்சிகள் தேவையா என்ற கேள்வியை சூழலியலாளர்கள் இந்திய அரசாங்கத்தை நோக்கி எழுப்புகிறார்கள். அதேநேரம், குட்டி அந்தமான் தீவு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சூழலியல் பகுதியை முற்றிலுமாக அழித்து ஒரு புதிய நகரத்தையே கட்டமைப்பதன் மூலம், பலனடையப்போவது யார் என்ற கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு