மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் ஆய்வறிக்கையில் பிலிகிரிரங்கா மலைத்தொடருக்கும் அங்கு வாழும் சோளகர் பழங்குடிகளுக்கும் அந்த மலையோடு இருக்கும் தொடர்பு குறித்து, முனைவர்.மாதவ் காட்கில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.
``நீலகிரிக்குத் தெற்கே அமைந்துள்ளது பிலிகிரிரங்கா மலைத்தொடர். இந்த மலைதான் சோளகர் பழங்குடிகளின் பூர்வீக வாழிடம். காடுகளைப் புனிதமாகக் கருதி வழிபாட்டு முறைகளின் வழியாகப் பெரியளவில் செண்பக மரங்கள் நிறைந்த காடுகளைப் பாதுகாத்து வந்துள்ளார்கள். இந்தக் காடு, வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டவுடன் சோளகர்கள் இங்கு வேட்டையாட, விவசாயம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. அவர்களின் வாழ்வாதாரத்திலிருந்த இரண்டு முக்கியப் பணிகளைத் தடை செய்துவிட்டதால், இதர பணிகளான தேன் மற்றும் மூலிகைச் செடிகளை சேகரிப்பதில் மட்டும் அவர்கள் முழுக் கவனத்தையும் செலுத்தினார்கள்.

அசோகா (Ashoka Trust For Research In Ecology And The Environment) என்ற அறிவியல் ஆய்வு நிறுவனம் சோளகர்களின் காடுசார் பொருள் சேகரிக்கும் முறைகளையும் இயற்கை வளக் கையிருப்பில் அதன் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவுகள், சோளகர்களின் இந்தச் செயல்கள் எந்தவிதத்திலும் இயற்கைக்குப் பாதகம் விளைவிக்கவில்லை என்பதோடு, அவர்களுடைய செயல்பாடுகள், அந்தக் காட்டு நிலத்தையும் அதன் பல்லுயிரிய வளத்தையும் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதை உறுதி செய்தது. மேலும், துரதிர்ஷ்டவசமாக வனத்துறை காட்டுப் பொருள்களைச் சேகரிக்கவும் விற்கவும் தடை விதித்து, சோளகர்களை வறுமையில் தள்ளியதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஉலகளவில், பூர்வகுடியின மக்களின் பல்லுயிரிய வளப் பாதுகாப்பு செயல்பாடுகளில் மாதவ் காட்கில் குறிப்பிட்டிருப்பது ஒரு சிறு துளி மட்டுமே. பழங்குடியின மக்கள் மற்றும் சமூகங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான கூட்டமைப்பு (ICCA Consortium) என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில், இப்படியாக உலகம் முழுவதும் மொத்தம் 21 சதவிகித காட்டுநிலங்கள் பழங்குடிகளால் பாதுகாக்கப் படுவதாகக் கூறுகிறது. இந்த அறிக்கையின்படி பார்த்தால், உலகம் முழுக்க தேசிய பூங்காக்கள், காப்பிடங்கள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசுகள் மேற்கொள்ளும் காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளைவிட அதிகமாகப் பழங்குடியினக் குழுக்கள் பல்லுயிரிய வளப் பாதுகாப்பை மேற்கொள்கின்றன. வாழ்வின் எல்லைகள் (Territories of life) என்ற இந்த அறிக்கையின்படி, உலகம் முழுக்க, சுமார் 14 சதவிகித காட்டு நிலங்கள் பழங்குடியின மக்களின் வாழ்விட எல்லைக்குள் வருகின்றன.

இப்படியாக, அளவிட முடியாத சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பழங்குடிகளின் பங்கு பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது என்பது இந்த அமைப்பின் வாதம். ஒருவகையில் அவர்கள் சொல்வது உண்மையும்கூட. இன்றைய நவீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறையைப் பொறுத்தவரை, ``இயற்கை மிகவும் உன்னதமானது. மனிதர்களின் கால்தடமே பதியாமல் அதைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்" என்ற பார்வைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், மனிதர்களும் இயற்கையின் ஓர் அங்கம்தான் என்ற அடிப்படையை, இன்றைய நவீன முறைகளை அடைவதற்கான பாதையில் எங்கோ தொலைத்துவிட்டோம். உடன் உறைந்து வாழ்தல் (Co-existence) என்ற பதம் இன்றைய அரசுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தவிர்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த காஷியா போமோ பழங்குடியினத்தின் தலைவரான ரெனோ கியோனி, ``ஒரு நிலத்தின் மீதான பழங்குடிகளின் அறிவு, அவ்வப்போது மேற்கோள் காட்டுவதற்காக மட்டுமே பயன்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, கடந்த 100 ஆண்டுக்கால அமெரிக்க காடுகள் பாதுகாப்பில், உண்மையில் நடப்பது இதுதான்" என்று கூறுகிறார்.
அமெரிக்கா, இந்தியா உட்பட 50 நாடுகள், உலக அளவில் 2030-ம் ஆண்டுக்குள் அவர்களுடைய நிலத்திலிருக்கும் 30 சதவிகித நிலம் மற்றும் நீரைப் பாதுகாக்கப் போவதாக உறுதி எடுத்துள்ளன. ஆனால், அந்த இலக்கை அவர்கள் அடைவதற்காக முதலில் கை வைப்பது பழங்குடியின நிலங்களின்மீதுதான். இதனால், பழங்குடிகளின் நில உரிமைகள் ஆபத்துக்குள்ளாகி நிற்கின்றன என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

இந்த இலக்கை அடைவதில் இப்படியொரு அபாயகரமான முயற்சியை எடுப்பதற்குப் பதிலாக, பழங்குடிகளோடு இணைந்து செயல்படுவதன் மூலம், உலகின் மற்ற பகுதிகளுக்கு ஒரு முன்னுதாரணமான சூழலியல் பாதுகாப்பு முறையைச் செய்துகாட்டவும் முடியும். உள்ளூர் மக்கள் சமூகங்கள் மற்றும் பழங்குடிகளோடு இணைந்து, சூழலியல் பாதுகாப்பில் அவர்களையும் ஓர் அங்கமாக்குவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்த முடியும் என்று இந்த அமைப்பு உறுதியாக நம்புகிறது.
பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில், அந்நாட்டு அரசுகள் பாதுகாக்கின்ற பல்லுயிரிய வளத்துக்கு நிகராக, பழங்குடியின மக்களின் வாழ்விட எல்லைக்குள் அவர்களுடைய கவனிப்பின் கீழ், பாதுகாக்கப்படும் வாழ்விடங்களில் பல்லுயிரிய வளம் பாதுகாக்கப்படுவதாக சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கொள்கை (Environmental Science & Policy) என்ற ஆய்விதழில் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. மேலும், 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ஆய்வு முடிவுகளின் மூலம், பழங்குடிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற காட்டு நிலங்களில் காடழிப்பு நடவடிக்கைகள் மற்ற பகுதிகளில் இருப்பதைவிட மிக மிகக் குறைவாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
உலக அளவில் வாழும் ஒவ்வொரு பழங்குடியின சமூகத்திடமும் வெவ்வேறு விதமான கலாசார பழக்கவழக்கங்களும் மரபுகளும் காணப்படும். ஆனால், அவர்கள் அனைவரிடமும் காணப்படும் ஒரு பொதுவான அம்சமாக, அது தாங்கள் வாழும் நிலத்தில், இயற்கையோடும் அங்கு வாழும் மற்ற உயிரினங்களோடும் உடன் உறைந்து வாழ்கின்ற வாழ்வியல் முறை கூறப்படுகிறது. பூமியின் பூர்வகுடிகளிடம், இயற்கையோடு ஒத்திசைந்த முழுமையான அணுகுமுறையோடு, மனிதத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் வாழ்வியல் முறை காணப்படுகிறது. அவர்களிடம், கோயில் காடுகள், புனித நதி, புனித மரம் போன்ற வழிபாட்டு முறைகள் உறைந்துள்ளன. அவை, தங்கள் நிலத்தின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன. மேலும், அதீத இயற்கை வளம் மற்றும் உயிரினச் சுரண்டலைக் கட்டுப்படுத்தும் வகையில் பழங்குடிகளின் நில மேலாண்மை நிலவுகிறது. இதை, முனைவர்.மாதவ் காட்கிலும் தன்னுடைய ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பழங்குடியின செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான பிஜோய், ``சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதைப் பொறுத்தவரை, மனிதத் தலையீடுகளே இருக்கக் கூடாது என்ற ஒரு பார்வை உள்ளது. ஆனால், மனிதர்களே இயற்கையின் ஓர் அங்கம்தான். ஆகவே, மனிதர்களுக்கு இயற்கைக்குமான உறவு எப்படிப்பட்டது என்ற வகையில்தான் இந்தப் பார்வை இருக்க வேண்டும். அந்த உறவுகள் பலதரப்பட்டவை. கால்நடை மேய்ப்பவருக்கு இயற்கையோடு இருக்கும் உறவையும் அதானி போன்ற பெருமுதலாளிகளுக்கு இயற்கையோடு இருக்கும் உறவையும் ஒரே மாதிரியாகப் பார்க்க முடியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதில், இயற்கையோடு ஒரு சமூகத்துக்கு இருக்கும் உறவு மற்றும் அவர்களுடைய நிலப் பயன்பாட்டு அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த உறவு தவிர்க்க இயலாதது. ஆகவே, அதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் பழங்குடி மக்களுடைய நிலைப்பாடு.
பழங்குடியினச் சமூகங்கள் காலம் காலமாக எந்தெந்த நிலங்களில் அவர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் இயற்கை வளங்களைப் பாதுகாத்துள்ளார்கள், பாதுகாப்பதற்காக இன்றளவும் போராடி வருகிறார்கள். இந்தப் பின்னணியில்தான், இதைப் பார்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில், அதைச் சார்ந்துள்ள மக்களை அதிலிருந்து பிரித்துவிட்டு அதைப் பாதுகாக்க முடியாது" என்று கூறினார்.
உலக அளவில் இன்றுவரை, பழங்குடி மக்கள் தங்கள் நில உரிமைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்தியாவிலும், 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய வன உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த நில உரிமைக்காக, பழங்குடியின மக்கள் மூன்றாண்டுகள் போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். அத்தனை போராட்டங்களுக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட அவர்களுடைய நில உரிமைகள், இன்றுவரை பல சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், தங்கள் போராட்டங்களை பழங்குடி மக்கள் தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.

மானுடவியல் வரலாற்றிலேயே, யாருக்கும் அடிமையாகவோ யாரையும் அடிமைப்படுத்தியோ வாழாமல், சுதந்திரமான வாழ்வியலை முன்னெடுத்தவர்கள் பழங்குடிகள். அதனாலேயே, இன்றுவரை தங்கள் நிலத்தின் மீதான உரிமைகளுக்காக அவர்கள் அடிபணியாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மேலும், அவர்களின் கையில் காடுகள் பாதுகாப்பு மற்றும் நில மேலாண்மை இருக்கும் பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு இந்தியாவில், காடழிப்பு விகிதம் நாட்டின் மற்ற பகுதிகளில் இருப்பதைவிட மிகவும் குறைவாக இருப்பதாகவும் காடுகளின் வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் இந்திய வன அளவை நிறுவனத்தின் அறிக்கையே குறிப்பிடுகிறது. இந்நிலையில், பழங்குடியின மக்கள் மற்றும் சமூகங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான கூட்டமைப்பு குறிப்பிடுவதைப்போல், உலகப் பூர்வகுடிகளோடு இணைந்து பல்லுயிரிய வளப் பாதுகாப்பில் ஈடுபடுவது, சிறப்பான பலன்களைத் தரலாம். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை சர்வதேச அளவில் அரசுகள் எடுக்குமா என்பதுதான் கேள்விக்குறி.