Published:Updated:

ஈக்களை விரட்ட `மைக்ரோ’ வில்லன்..! மதுரை மாநகராட்சியின் பலே முயற்சி

 ஈக்கள்
ஈக்கள்

ஒரே நாளில் முட்டையிலிருந்து இந்த ஒட்டுண்ணி சிறு பூச்சியாக வெளிவரும். வெறும் 15 சென்டிமீட்டர் உயரம் மட்டுமே பறக்கக்கூடிய இந்த ஒட்டுண்ணியால் மற்ற உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே கொசு மற்றும் ஈக்கள் பட்டாளம் படையெடுக்கத் தொடங்கிவிடும். ஆள், அம்பு, சேனைப் பரிவாரங்களோடு கொசுக்களை விரட்டப் பல உத்திகளைக் கையாள்வோம். கொசுக்கள் கடிப்பதாலும் அதன் வலியை உணர்வதாலும்தான் அவற்றை விரட்டுவதற்குக் கூடுதல் முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால் கொசுக்களைப் போல பல நோய்களைச் சத்தமில்லாமல் பரப்பிச் செல்வது ஈக்கள்தான்.

ஒட்டுண்ணி
ஒட்டுண்ணி

நம் வீட்டைச் சுற்றும் ஈக்களால் சுமார் 600 வகையான பாக்டீரியா பரவுகின்றன. ஈக்கள், அவற்றின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் மூலம் ஆபத்தான பாக்டீரியாவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரப்புகின்றன. கழிவுகள், குப்பைகள், சாக்கடை, அழுகிய பொருள்கள் என ஈக்கள் எங்கு வேண்டுமானாலும் உட்காரும். அப்படியே வந்து நாம் உண்ணும் உணவுகள் மீதும் உட்காரும்.

பூச்சி மேலாண்மை:  17 - உயிரியல் ஆயுதமாகும் பூச்சிகள்... ‘காப்பான்’ சொல்லும் பாடம்!

அப்போது அவற்றின் கால்களில் ஒட்டியிருக்கும் ஆபத்தான பாக்டீரியா உணவுகள் மூலம் நம் உடலுக்குள் செல்லும். இந்தக் கிருமிகளால் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காயங்கள் மூலம் ரத்தத்தில் விஷம் பரவுதல், நிமோனியா, டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கொசுக்களால் இன்ன நோய்கள்தான் வரும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஆனால், ஈக்களால் என்னென்ன நோய்கள் பரவும் என்பதைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது என்று தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

ஒட்டுண்ணி
ஒட்டுண்ணி

ஒரு பெண் ஈயானது ஒரே நேரத்தில் 50 முதல் 100 முட்டைகள் வரையிலும், தன் ஆயுள்காலம் முழுவதிலும் சுமார் 500 முட்டைகள் வரையிலும் இடும். முட்டையிலிருந்து வெளிவரும் ஈக்கள் வளர்ச்சியடைந்து, நோய்களைப் பரப்புகின்றன. ஒரே நாளில் முட்டையிலிருந்து வெளிவரும் ஈக்கள் 15 முதல் 20 நாள்களுக்குள் முழு வளர்ச்சியை அடைந்துவிடுகின்றன.

இதுபோன்ற சூழலில் ஈக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி புதிய வழிமுறையைக் கண்டறிந்துள்ளது. பொதுவாக ஈக்களை மூன்று முறையில் ஒழிக்கலாம். முதலாவது கல்ச்சுரல் முறை. வீட்டில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுத்தல், குப்பைத்தொட்டிகளில் அதிகம் குப்பை சேரும்வரை வீட்டிலேயே வைத்திருக்காமல் உடனுக்குடன் அகற்றுவதே கல்ச்சுரல் முறை. இரண்டாவது முறை 'ரசாயன முறை'. சர்க்கரையில் ரசாயனத்தைத் தெளித்து வைப்பதால், சர்க்கரையோடு ரசாயனத்தையும் உண்டு ஈக்கள் இறந்துவிடும்.

 ஈக்கள்
ஈக்கள்

இந்த இரண்டு முறையும் வீடு மற்றும் கடைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றாம் முறையான ஒட்டுண்ணிகள் மூலம் ஈக்களை அழிப்பது. இந்த முறையைத்தான் மதுரை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட ஓர் ஒட்டுண்ணியை உருவாக்கி அதை ஈக்கள் பரவும் பகுதியில் விடுவதன் மூலம் ஈக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும்.

பூச்சி மேலாண்மை: 13 - பூச்சிகளையும் கொண்டாடுவோம்!

இது தொடர்பாக மதுரை மாநகர சுகாதாரத் துறை ஆய்வாளர் ஓம்சக்தி பேசும்போது, "இந்த ஒட்டுண்ணியின் பெயர் 'டெட்ராஸ்டைகஸ் கொவார்டி' (Tetrastichus Howardi). இதை ஓசூரில் உள்ள எஸ்.ஆர்.கே உயிரியல் கட்டுப்பாட்டு மையம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஒட்டுண்ணி முட்டையாக இருக்கும்போதே வாங்கி விடுகிறோம். ஒரே நாளில் முட்டையிலிருந்து இந்த ஒட்டுண்ணி சிறு பூச்சியாக வெளிவரும். வெறும் 15 சென்டிமீட்டர் உயரம் மட்டுமே பறக்கக்கூடிய இந்த ஒட்டுண்ணியால் மற்ற உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

 ஈக்கள்
ஈக்கள்

இந்த ஒட்டுண்ணிகள் வளர்ந்த ஈக்களைச் சாப்பிடாது. வளர்ந்த ஈக்கள் தன் ஆயுள்காலம் முடிந்து 15 நாள்களில் தானாக இறந்துவிடும். ஈக்கள் வளர்வதற்கு முந்தைய நிலையிலும் முட்டை வடிவிலும் இருக்கும்போதே ஈக்களை இந்த ஒட்டுண்ணிகள் சாப்பிட்டுவிடும். இதனால் ஈக்களின் உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிடும். தற்போது பரிசோதனை முயற்சியாக மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள உர மையம் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறைகளில் இவை விடப்பட்டன. 15 நாள்களுக்கு மேல் நடத்திய சோதனை திருப்தியளித்ததால் இத்திட்டத்தை மதுரை மாநகர் முழுவதும் செயல்படுத்த மாநகராட்சி ஆணையர் விசாகன் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒட்டுண்ணி மூலம் ஈக்களை அழிக்கும் இத்திட்டம் மதுரையில் இப்போது தொடங்கியுள்ளது

Vikatan

சாலையோரங்களில் உள்ள குப்பைத்தொட்டிகள் பெரும்பாலும் தினமும் சுத்தம் செய்யப்படுகின்றன. எனவே, ஈக்களின் முட்டை அங்கு இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. இந்த ஒட்டுண்ணிகளை அதிக ஈரப்பதம் மற்றும் ஈக்களின் முட்டை அதிகம் உள்ள இடமான உர மையம் மற்றும் பொதுக் கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்த உள்ளோம். பத்து நாள்கள் மட்டுமே இந்த ஒட்டுண்ணி உயிருடன் இருக்கும் என்பதால் 10 நாள்களுக்கு ஒருமுறை ஒட்டுண்ணியை வாங்க உள்ளோம்" என்றார்.

 ஈக்கள்
ஈக்கள்

நோய்களைப் பரப்பும் ஈக்களைத் தடுக்க மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கை மக்களின் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்து நோய்கள் பரவாமல் தடுப்பது ஒவ்வொரு சாமானியன் கடமை.

அடுத்த கட்டுரைக்கு