Published:Updated:

காட்டை இழக்கும் `காட்டுமாடுகள்’ - ஆய்வாளர்களை உறையச் செய்த கணக்கெடுப்பு நிலவரம்

Indian Gaur
Indian Gaur

தனியார் சோலைகள், தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு ரிசாட்டுகள், ஆடம்பர தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், மலைக்காய்கறி தோட்டங்கள் என மாறிக்கொண்டே உள்ளது. எனவே, காட்டுமாடுகளின் வாழிடம் சுருங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் காட்டுமாடுகள் குறித்த கணக்கெடுப்பு முதல் முறையாக இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்றது. ஒருவார காலம் நடைபெற்ற இந்தக் கணக்கெடுப்பின் முழு ஆய்வு முடிவுகள் காட்டுயிர் ஆய்வாளர்களை அதிர்ச்சியில் உறையச்செய்துள்ளது. அதிர்ச்சியளிக்கும் இந்தக் காட்டுமாடு கணக்கெடுப்பு முடிவுகள் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பல விவரங்களைப் பகிர்கையில், ``அப்பர் நீலகிரி எனப்படும் ஊட்டி, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் மனித, காட்டுமாடு எதிர்கொள்ளல்கள் அதிகம் ஏற்பட்டன.

gaur
gaur

கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் மனித, காட்டுமாடு எதிர்கொள்ளலில் 3 பேர் இறந்தனர், 7 பேர் காயமடைந்தனர். அதே சமயம் குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களை ஒட்டிய பகுதிகளில் இயற்கையாகவும், மனித தவறுகளாலும் ஆண்டுக்கு சுமார் 60 காட்டுமாடுகள் வரை இறக்கின்றன.

இத்தகைய ஒரு சிக்கலான சூழலில் காட்டுமாடு குறித்த தனிப்பட்ட கணக்கெடுப்பு நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே, நீலகிரி காடுகளில் காட்டுமாடுகள் குறித்த பிரத்யேக கணக்கெடுப்புக்குத் தயாரானோம்.

gaur
gaur

ஆசியாவின் மிகப்பெரிய மாட்டினமான Gaurus எனப்படும் Gaur காட்டுமாட்டை காடுகளில் தேடினோம். அதிர்ச்சியளிக்கும் விதமாக எங்களால் மழைக்காடுகளில் பெரியளவிலான காட்டுமாடு கூட்டத்தைக் காண முடியவில்லை. வழக்கத்துக்கு மாறாக குடியிருப்புகளையும் தேயிலைத் தோட்டங்களையும் சார்ந்த பகுதிகளில் மட்டுமே பெரும்பாலான காட்டுமாடுகளைக் காண முடிந்தது.

எங்கள் குழுவினருடன் மனித நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் 749 காட்டுமாடுகளை நேரில் பார்த்து கணக்கெடுத்தோம். இதன் அடிப்படையில் பார்த்தால் 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 2,000 காட்டுமாடுகள் இருக்கக்கூடும். ஒரு ச.கி.மீ பரப்பளவில் 8 காட்டுமாடுகள் உள்ளன.

gaur rescue
gaur rescue

இந்தக் கணக்கெடுப்பை அடிப்படையாகக்கொண்டு மனித காட்டுமாடு எதிர்கொள்ளல்களையும், அது நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தோம். இதில் பைக்காரா, நடுவட்டம், டி.ஆர். பஜார் ஆகிய பகுதிகளில் காட்டுமாடுகள் காணப்பட்டாலும் எதிர்கொள்ளல்கள் ஏற்படுவதில்லை.

அதேசமயம் குன்னூர், கோத்தகிரி, அரவங்காடு, கோத்தகிரி, கட்டப்பெட்டு, தூதூர் மட்டம், கொலக்கொம்பை ஆகிய பகுதிகளில் எதிர்கொள்ளல்கள் அதிகரித்து, மனிதர்கள், காட்டுமாடுகள் என இரண்டு தரப்பிலும் உயிரிழப்புகள், காயங்கள் ஏற்படுகின்றன.

Gaur Attack
Gaur Attack

ஏன் குறிப்பிட்ட இந்தப் பகுதிகளில் மட்டும் எதிர்கொள்ளல்கள் நடக்கின்றன என அடுத்தகட்ட ஆய்வுக்கு நகர்ந்தோம். மேல் குறிப்பிட்ட இந்தப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் அளவுக்கு அதிகமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் சோலைகள், தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு ரிசாட்டுகள், ஆடம்பர தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், மலைக்காய்கறி தோட்டங்கள் என மாறிக்கொண்டே உள்ளது. எனவே, இவற்றின் வாழிடம் சுருங்கியது, இதனால் காட்டுமாடுகளால் சுதந்திரமாக நடமாட முடியாமல் போனதும் அதன் மூலம் எதிர்கொள்ளல்கள் அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.

Indian Gaur rescue
Indian Gaur rescue

உயர் மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் ஒன்று நடத்தி காட்டுமாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

காட்டுமாடுகளின் நிலை குறித்து நம்மிடம் பேசிய காட்டுயிர் ஆர்வலர் ஜனார்த்தனன், ``நீலகிரியில் கட்டுமாடுகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உயர்ந்துவிட்டதாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் காட்டுமாடுகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காட்டுமாடுகளை வேட்டையாடும் புலி, சிறுத்தை உள்ளிட்ட ஊண் உண்ணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வனத்துக்குள் அந்நிய கலைத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் இவற்றின் மேய்ச்சல் நிலங்களும் பாதித்துள்ளது.

Indian Gaur
Indian Gaur

வனத்தை விட்டு வெளியேறி தனியார் சோலைகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் தஞ்சம் புகுந்தன. ஆனால், இவையும் அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பு வேலிகள், மின்சார வேலிகள் போன்றவற்றால் நீர் நிலைகளுக்கு செல்வதிலும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லவதற்கும் தடைபடுகிறது. சட்டவிரோத வளர்ச்சிப்பணிகளைத் தடை செய்யாமல் மனித காட்டுமாடு எதிர்கொள்ளல்களை தவிர்க்க முடியாது," என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு