Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: மாட்டிறைச்சியில் கலக்கப்பட்ட விஷம்... தாய் புலியைக் கொன்றவர்கள் கைது!

accused and forest staffs
accused and forest staffs

மாட்டு இறைச்சியில் விஷத்தை கலந்து தாய் புலியைக் கொன்ற மசினகுடி யைச் சேர்ந்த நால்வரில் இரண்டு நபர்களை 5 மாதங்களுக்குப் பிறகு வனத் துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகையில், ஆச்சக்கரை எனும் இடத்தில் புலி ஒன்று இறந்த நிலையில், கிடப்பதைக் கண்ட ஊழியர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்கு வந்து ஆய்வு வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், இறந்தது சுமார் 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி என்பதை உறுதி செய்தனர்.

Rescued Tiger cubs
Rescued Tiger cubs

மேலும் பெண் புலி இறந்துகிடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இரண்டு புலி குட்டிகள் புதரில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டன. இந்த இரண்டு குட்டிகளையும் வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விஷம் கலந்த இறைச்சியை உண்டதாலேயே பெண் புலி இறந்திருப்பதாகக் கூறாய்வில் தெரியவந்தது. புலிக்கு விஷம் வைத்தவர்களைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதில் தொடர்புடையவர்களாக சந்தேகித்த நால்வரில் இருவரை கைது செய்துள்ளனர். மேலும், இருவர் தலைமறைவாக உள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக அலுவலர் ஒருவர், ``பால்குடி மறவாத இரண்டு குட்டிகளையும் விட்டுவிட்டு தாய் புலி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புலிக்கு விஷம் வைத்துக் கொன்ற குற்றவாளிகளைக் கண்டறிய தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டோம். இதன் அடிப்படையில், மசினகுடி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டோம்.

அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், இதே பகுதியைச் சேர்ந்த அகமது கபீர், சதாம், சௌகத் அலி ஆகிய மூவருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்தோம். இருவரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகிறோம்" என்றார்.

புலிக்குட்டி / tiger cub
புலிக்குட்டி / tiger cub

புலிக்கு விஷம் வைக்கப்பட்டது குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், ``இவங்க எல்லோருமே கால்நடை வளர்ப்பில ஈடுபட்டு வராங்க. முதுமலை காட்டுக்குள்ளத்தான் இவங்களோட ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புறாங்க. சில சமயங்கள்ல இந்த மாடுகளை புலி தாக்குது. இதில் கோபமான உரிமையாளர்கள், செத்த மாட்டோட கறியில குருணை மருந்தை கலந்து இருக்காங்க அந்த இறைச்சிய சாப்பிட்ட புலி பரிதாபமாக இறந்துள்ளது" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு