Published:Updated:

சீல் வைக்கப்பட்ட விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் - யானை வழித்தடத்தில் தொடரும் அத்துமீறல்!

முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட பகுதிகளில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் சட்டத்துக்குப் புறம்பாக சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Elephant corridor
Elephant corridor ( Arun.K )

நீலகிரி மாவட்டம் சோலூர், பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் யானைகள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டன. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப்பகுதிகளில் சொகுசு தங்கும் விடுதிகள் அதிகளவு செயல்பட்டு வருகின்றன. குடியிருப்புக்கான அனுமதி பெற்று தங்கும் விடுதி நடத்தப்பட்டு வருவதாகவும் இவற்றில் சில கட்டடங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

Elephant corridor
Elephant corridor

இதனிடையே யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள கட்டடங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தவழக்கில் நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 38 கட்டடங்கள் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்தக் கட்டடங்களுக்கு சீல்வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக் கட்டடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.

சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் சட்டவிரோதச் செயல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா கட்டடங்களில் சீல்கள் அகற்றப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் பொருட்டு அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது.

Elephant corridor
Elephant corridor

இந்நிலையில், பொக்காபுரம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட சில தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுவதாக வனத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார்கள் வந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வனத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொக்காபுரம் பகுதியில் 3 தங்கும் விடுதிகளில் ஸ்டோர் ரூம் மற்றும் காவலர்கள் தங்குவதற்காக சீல் வைக்காமல் விடப்பட்ட சில அறைகளில் சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 2 விடுதிகளில் சீல் வைக்காமல் விடப்பட்ட அறைகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்ததும், ஒரு விடுதி அறையில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

`ஊருக்குத்தான் அது யானை... எங்களுக்குக் குழந்தை!' -வேதநாயகி மரணத்தால் கலங்கிய ஈரோடு

இந்த விதி மீறல் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

இதன் அறிக்கையின் பேரில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ``சீல் வைக்கப்பட்ட சட்டவிரோத ரிசார்ட்கள் சிலவற்றில் சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ரிசார்ட் உரிமையாளர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையினரை அடிக்கடி திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றனர்.

Elephant corridor
Elephant corridor

யானை வழித்தட விதிமீறல் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜனார்த்தனன், "யானை வழித்தடத்தில் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்து சீல் வைக்கப்பட்ட நிலையில், சட்டத்துக்குப் புறம்பாக யானைகளுக்குத் தொல்லைதரும் வகையில் சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுகின்றனர். மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சீல் வைக்கப்பட்ட பல விடுதிகள் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியர் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்க வேண்டியது. யானை வழித்தடத்தில் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.