அண்மையில் சென்னை, தரமணியில் உள்ள தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத்தில் ‘The Evolution of Access and Benefit Sharing (ABS) Jurisprudence in India’ என்ற ஆங்கில நூலின் வெளியிட்டு விழா நடைபெற்றது. தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சசிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
Also Read

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நீதிபதி கே.ராமகிருஷ்ணன் பேசும் போது, ‘‘பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி என்ற வகையில், இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி ஒரு நூல் அவசியம் தேவை. விவசாயிகளும், பழங்குடி மக்களும் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை, பலனை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். சுற்றுச்சூழல், சட்டம், வன ஆராய்ச்சி... துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நூல் உதவியாக இருக்கும்’’ என்றார்.
இந்த நூல் எழுதப்பட்டத்தின் நோக்கம் குறித்து, நூல் ஆசிரியர்களில் ஒருவரும் தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத்தின்(NATIONAL BIODIVERSITY AUTHORITY) செயலருமான ஜெஸ்டின் மோகன் பேசும் போது, ‘‘இந்தியாவைப் பொருத்தவரை அணுகல் மற்றும் பலன் பகிர்வு (Access and Benefit Sharing) என்பது முன்பே நடை முறையிலிருந்தாலும், பல்லுயிர்பெருக்கச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான், முறைப்படுத்தப்பட்டது. இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியுள்ளோம். தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம் மூலம் இதை வெளியிடுகிறோம்’’ என்றார்.
அடுத்துப் பேசிய நூல் ஆசிரியர்களில் ஒருவரும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்லெண்ட் இன் லா பேராசிரியருமான ஏழுமலை, “பல்லுயிர் என்ற சொல்லே சிறப்பானது, ஆன்மிகத் தன்மை கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’ என்று திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. பலன் இல்லாவிட்டாலும் பகிர்ந்து உண்டு பல்லுயிரும் வாழ வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லுயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புபவர்களும், துறைச்சார்ந்தவர்களும் இந்நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.
தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றியும் அணுகல் மற்றும் பலன் பகிர்வு (Access and Benefit Sharing) குறித்தும் செயலர் ஜெஸ்டின் மோகனிடம், கேட்ட போது,
‘‘தமிழ்நாட்டில் உள்ள பலரும் அறிந்திருக்காத தகவலைச் சொல்லப் போகிறேன். தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம் 2003-ம் ஆண்டுச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
இந்தியா அளவில் பல்லுயிர் பாதுகாப்புக்குத் தலைமையிடமாக உள்ள, இந்த ஆணையம் தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் அமைப்புகளில் இதுவும் ஒன்று. இந்தியாவில் எந்த உயிரினங்கள், தாவரங்கள் அல்லது அதைச் சேர்ந்த பாரம்பர்ய அறிவு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலும், அல்லது அதை ஒரு வியாபாரத்திற்காகப் பயன்படுத்தினாலும், அந்த நிறுவனங்கள் தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத்தின் அனுமதியோ அல்லது மாநில பல்லுயிர் பரவல் வாரியத்தின் அனுமதியோ பெற்று இருக்கவேண்டும். அனுமதி இல்லையென்றால் அது பல்லுயிர் பரவல் சட்டம், 2002 பிரகாரம் ஒரு கிரிமினல் குற்றமாக ஆகக் கருதப்படும்.
1990-களில் இந்தியாவில் உள்ள மஞ்சள், வேம்பு போன்ற நம் நாட்டின் பொருள்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமை வாங்கிச் சொந்தம் கொண்டாடி வந்தன. அதைத் தடுக்கும் வகையிலும், இந்தியாவில் பல்லுயிர் மற்றும் பல்லுயிர் சேர்ந்த பாரம்பரிய அறிவை பாதுகாத்து மேம்படுத்தவும், இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் தோறும் பல்லுயிர் பரவல் வாரியங்கள் உள்ளன. நாடு முழுவதும் கிராமங்களில் பல்லுயிர் நிர்வாகக் குழுக்களை உருவாக்கி வருகிறோம். இது வரை 2.76 லட்சம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை எங்கள் ஆணையம் மூலம் ஏற்படுத்தி வருகிறோம்.
பலன் பகிர்வு முறையின் முன்னோடியாக இருந்த மூலிகையைப் பற்றி, இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கேரளா-தமிழக எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் காணி மக்கள் ஆரோக்கியப் பச்சை என்ற மூலிகையைப் பயன்படுத்துகிறார்கள். காட்டில் நடக்கும் போது, இந்த மூலிகை உண்டால், எவ்வளவு தூரம் நடந்தாலும் களைப்பே வராது.
இதன் மருத்துவக் குணங்களை அறிந்த கோவையைச் சேர்ந்த ஆயுர்வேத நிறுவனம், ’ஜீவனி’ என்னும் சத்து மருந்தை உருவாக்கி விற்பனை செய்தது. இவர்களிடமிருந்து குறிப்பிடச் சதவிகித தொகையை வாங்கிக் காணி பழங்குடி மக்களுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டது. இந்த மூலிகையின் பலனைக் கண்ட பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி, போட்டுக் கொண்டு வாங்கின. ஒருகட்டத்தில் ஆரோக்கியப் பச்சை அழிந்துவிடும் சூழல் உருவானது. இதனால், தற்போது வணிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
பலன் பகிர்வு பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன். சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் விளையும் வெந்தயத்தை ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனம் வாங்கியது. அதில் குறிப்பிட்ட தொகையை வெந்தயம் பயிரிடப்படும் அந்தப் பகுதி கிராமங்களுக்குக் கொடுத்துவிடுவோம். உதாரணத்துக்குக் கற்றாழை என்ற மூலிகையை ஒரு கிராமத்தில் தனியார் நிறுவனம் கொள்முதல் செய்கின்றது என்றால், அதில் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகித தொகையை, அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டும்.
அதற்காக ஒரு ஒப்பந்தம் கையெழுத்து செய்த பிறகுதான், அந்த நிறுவனம், கற்றாழையை நமது நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பயன்படுத்தி வியாபாரமோ உற்பத்தியோ செய்ய முடியும். அதற்கான அனுமதியை ஆணையம் வழங்கும். ஆக, வனங்கள் மற்றும் விவசாயப் பகுதிகளிலிருந்து விதைகள், இலைகள், மரப்பட்டை, மூலிகைகள் போன்றவற்றைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் உள்நாட்டு நிறுவனங்கள் மாநிலத்தில் உள்ள பல்லுயிர் பரவல் வாரியங்களையும் வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய பல்லுயிர் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
அந்தப் பகுதியில் உள்ள மக்கள்தான், அந்தப் பல்லுயிர்களைப் பாதுகாக்கிறார்கள். ஆகையால், அதன் பலன் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்படிப் பல்லுயிர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதைப் பாதுகாத்து வருபவர்களுக்குப் பலன்கள் எந்தெந்த வகையில் கிடைக்கும், உலக நாடுகளில் உள்ள நடைமுறைகள், அரசின் சட்ட திட்டங்கள்... உள்ளிட்டவை குறித்து இந்த நூலில் எழுதியுள்ளோம். இது குறித்து, கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.
தொடர்புக்கு,
தேசிய பல்லுயிர் ஆணையம்,
டைசல் பார்க், 5-வது மாடி
சி.எஸ்.ஐ.ஆர் சாலை,
தரமணி,
சென்னை-600113.
தொலைபேசி:044-22541071.
செல்போன்: 90956 67589
நூலைப் பதிவிறக்கம் செய்ய லிங்க் இதோ... Click Here