Published:Updated:

சென்னை காற்று மாசடைந்தது இன்றல்ல... 2016 ஆண்டிலிருந்தே மோசம்தான்!  என்ன காரணம்?

சென்னையில், நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே அதிகமாகிக் கொண்டிருந்த மாசுபாடு, 9-ம் தேதி ஆங்காங்கே பெய்த சிறிதளவு மழையால் குறையத் தொடங்கியது. ஆனால், சென்னையைக் காப்பாற்ற அந்த மழை போதுமானதாக இல்லை.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு ( Pixabay )

மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது எப்படியிருக்கும் என்பதைத் தமிழக மக்கள் இனி, டெல்லியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. சென்னைவாசிகளிடம் கேட்டாலே சொல்லி விடுவார்கள். சுவாசிக்கையில் எரிச்சலடையும் மூக்கு, தொண்டை எரிச்சல், கண் எரிச்சல், போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் என்று அனைத்து மோசமான அனுபவங்களையும் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை
சென்னை
கே.ஜெரோம்

சென்னையின் காற்று மாசுபாடு இப்போது தீவிரமாகப் பேசப்படுகிறது. ஆனால், இந்த மாசுபாடு இன்று நேற்றல்ல, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தீவிரமாகிக்கொண்டிருந்தது. பிப்ரவரி மாதத்தின் இறுதியில் காற்றுடைய மாசுபாட்டு அளவு 500-ஐத் தாண்டியது. மார்ச் மாதம் தொடங்கும்போதே, அது 672 ஆகவும் உயர்ந்துவிட்டது. பிப்ரவரி மாதம் முதலே தீவிரமாக மாசடைந்துகொண்டிருந்த காற்று, இப்போது நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்தே சென்னைவாசிகளை நேரடியாகப் பாதிக்கத் தொடங்கிவிட்டது.

சென்னையில், நவம்பவர் மாதத் தொடக்கத்திலிருந்தே அதிகமாகிக்கொண்டிருந்த மாசுபாடு, 9-ம் தேதி ஆங்காங்கே பெய்த சிறிதளவு மழையால் குறையத் தொடங்கியது. ஆனால், சென்னையைக் காப்பாற்ற அந்த மழை போதுமானதாக இல்லை. நவம்பர் 10-ம் தேதி காலையில் பதிவு செய்யப்பட்ட அளவின்படி, பி.எம் 2.5 அளவு வேளச்சேரியில் 254 ஆகப் பதிவானது. ஆலந்தூரில் 249 ஆகப் பதிவானது. மணலியில் 323 பதிவானது.

காற்றை மாசுபடுத்தும் காரணிகளின் அளவு காற்றில் எந்த அளவுக்குக் கலந்துள்ளது என்பதைக் கணக்கிடும் அளவீடுதான் பி.எம் 2.5. அது, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்படி, 60 மைக்ரோ கிராம் இருக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின்படி 20 மைக்ரோ கிராம் இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் நவம்பர் 10-தேதியன்று பதிவான அளவு இரண்டையும்விடப் பல மடங்கு அதிகமாகி, மிக மோசமாகக் காற்று மாசுபட்டுள்ளதைக் காட்டியது. இங்கு மாசுபாடு அதிகமாகிக் கொண்டிருந்த அதேநேரத்தில், பெங்களூரில் காற்றின் தரம் முன்னேறியுள்ளது என்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்று.

பிப்ரவரி மாதம் முதலே மோசமாகிக்கொண்டிருந்த காற்று மாசுபாட்டின் தீவிரத்தைப் புரிந்துகொள்வதற்காக, தூய்மையான காற்றுக்கான மருத்துவர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், மே முதல் ஜூலை மாதங்களில் சென்னையின் காற்றுத் தரம் முழுவதையும் பதிவு செய்து, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினர். காற்றிலிருக்கும் மாசுபாட்டுக் காரணிகள், அவற்றால் ஏற்படும் சிக்கல்கள் என்று அனைத்தையும் ஆய்வு செய்தார்கள். அதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னைக்கு நடுவே வரக்கூடிய தி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், 167 மைக்ரோ கிராம்களோடு நகரத்தின் ஐந்து மாசடைந்த பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய மாங்கனீஸ், சுவாசக் குழாயில் எரிச்சலுண்டாக்கி சிலிகோசிஸ் நோயை உண்டாக்கக்கூடிய கிரிஸ்டலின் சிலிகா போன்ற நச்சுப்பொருள்கள் காற்றில் கலந்துள்ளது தெரியவந்தது. அதுபோக நிக்கல், ஈயம் போன்ற மேலும் பல நச்சுப்பொருள்களும் காற்றில் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

தொழிற்சாலைகள்
தொழிற்சாலைகள்
Pixabay
``PM2.5 அளவு காற்று மாசை மாஸ்க்காலும் வடிகட்ட முடியாது!"-
சென்னைக்கு ஹை அலர்ட் கொடுக்கும் மருத்துவர்

``நுண்துகள்களால் பாதிக்கப்பட்டால், நுரையீரலின் செயல்பாடு குறைந்து நுரையீரல் கோளாறுகள், இதய நோய்கள், மூச்சு மண்டலப் பிரச்னைகள் போன்றவை அதிகமாகும். காற்று மாசுபாட்டால் ஆஸ்துமா தாக்குதலும் அதிகமாக ஏற்படும். அதிகரித்துக்கொண்டிருக்கும் நுண்துகள்கள், இறப்பு விகிதத்தையும் அதிகப்படுத்தக்கூடும்" என்கிறார் மருத்துவர் ஹிசாமுதின் பாபா.

2016-ம் ஆண்டு முதலே சென்னையின் காற்று மாசுபாடு இவ்வளவு மோசமாக இருந்தும்கூட, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின், 2018 தேசிய தூய்மையான காற்று திட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 122 நகரங்களில் சென்னை இல்லை.
மாசுபாடு
மாசுபாடு
கே.ஜெரோம்
`சென்னை மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்!’ - காற்று மாசு தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

``கடந்த ஒரு வாரமாகச் சென்னையில் மாசுபாடு அதிகமாக இருக்கிறது என்பதே தவறான கண்ணோட்டம்தான். இது இப்போது பெரிதாகத் தெரிவதற்கு, வானிலை மாற்றம்தான் காரணம். இப்போது மட்டும் காற்றின் தரம் மோசமாக இல்லை. 2016-ம் ஆண்டு முதலே மோசமான நிலையில்தான் இருக்கிறது. மாசுபாட்டை அதிகப்படுத்தும் ஆலைகளும் துறைமுகங்களும் இருப்பதால், சென்னையுடைய காற்றுத் தரம் சரிசெய்யப்படாத பிரச்னையாகவே இருந்துவருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தொழிற்சாலைகள் அதிகமுள்ள வட சென்னையில் எந்த அளவுக்கு காற்று மாசுபாடு இருக்கிறதோ, கிட்டத்தட்ட அதற்கு நிகராகவே மத்திய மற்றும் தென்சென்னையிலும் இருக்கிறது. இதனாலேயே, இந்த நகரத்தைத் தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும். அப்போதுதான், மாசுபாட்டைச் சரிசெய்வதற்கான திட்டத்தை உருவாக்க முடியும்" என்றார் தூய்மையான காற்றுக்கான மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்தவரும் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர்.ஜி.சந்திரசேகர்.

அதிகமான துகள்கள், கன உலோகங்களை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளைச் சுமந்து நிற்கிறது வடசென்னை. அதுபோக, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அனல் மின் நிலையங்கள் என்று பலவும் மணலி மற்றும் எண்ணூரை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன. வல்லூர் அனல் மின் நிலையத்தின் சாம்பல் குளம் அமைந்துள்ள குருவிமேட்டில் 187 மைக்ரோ கிராம் பதிவாகியுள்ளது. மோசமாக மாசடைந்துள்ள ஐந்து பகுதிகளில் நான்கு வடசென்னையில்தான் உள்ளன.

டெல்லி ஆகிறதா சென்னை?
டெல்லி ஆகிறதா சென்னை?

சென்னை மற்ற நகரங்களைப் போன்றதல்ல. மூன்று பெரிய துறைமுகங்கள், அதிகமான கனரக வாகனங்கள், 3,300 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையங்கள், ஆண்டுக்கு 10 மில்லியன் டன் அளவுக்குச் சுத்திகரிக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அதீதப் போக்குவரத்து நெரிசல், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலவியலை அழித்து உருவாக்கப்பட்ட இரண்டு பெரிய குப்பைக் கிடங்குகள், இவைபோக இன்னும் பல தொழிற்சாலைகள் என்று சென்னை மாசுபாட்டைத் தூண்டக்கூடியவற்றால் நிரம்பி வழிகிறது. ஆனால், இன்னமும் தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின்கீழ் சென்னை கொண்டுவரப்படவில்லை. விரைவில் சென்னையை அந்தப் பட்டியலில் இணைக்கவும் காற்று மாசுபாட்டைச் சரிசெய்யவும் மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.