Published:Updated:

புலிகளுக்காகப் பலிகொடுக்கப்பட்ட பழங்குடி வாழ்வு - பூர்வகுடிகளின் பூர்வீகம் அறிவோம்!

பழங்குடிகள்
பழங்குடிகள் ( https://tribal.nic.in/ )

உலகில், வறுமையில் வாடுவோரில் 15 சதவிகிதம் பழங்குடியினர்களே.

உலகில் மனித இனம் தோன்றி காலப்போக்கில் பல்வேறு இனங்களாகவும் சாதியாகவும், உட்சாதியாகவும் வளர்ந்து பல்கிப் பெருகியுள்ளது. இப்படியான சூழலில், எந்தவிதமான சாதியமைப்பு கட்டமைப்புக்கும் இல்லாமல் தனித்தன்மையோடு வாழ்பவர்கள் பழங்குடிகள்.

பழங்குடிகள்
பழங்குடிகள்
https://tribal.nic.in/

பழங்குடியினர் என்பவர்கள் ஒரு சுதேசிய சமூகம். அவர்களுக்கென்று தனித்த பண்பாடு, பேச்சு, மொழி, சடங்கு, வழிபாடு, உணவு, பழக்கவழக்கம் என்று வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வாழும் இந்த நாட்டின் பூர்வீகக்குடிகள். இந்த நவீன காலத்திலும் தங்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் மற்றவர்களின் உதவியின்றி இயற்கையைச் சுரண்டாமல் தங்கள் குழுச் சமூகத்தின் மூலமே பொருள் உற்பத்தி செய்து வாழ்ந்து வருபவர்கள்.

இயற்கையோடு இணைந்து வாழும் பூர்வீகக் குடிகளின் வாழ்வும் தனித்த பண்பாடும் காலபோக்கில் நாகரிகம் அடைந்த மனிதச் சமுதாயத்தாலும், அரசாலும் மெள்ள மெள்ள அழிந்துவருகிறது. ஆகையால், இவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமையைப் பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஆகஸ்ட் 9-ம் தேதியைப் பன்னாட்டு உலக பழங்குடி நாளாகக் கொண்டாடுகிறது.1994-ம் வருடம் டிசம்பர் மாதம் முன்மொழியப்பட்டு, 2007-ம் வருடம் செப்டம்பர் 13-ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனோடு பழங்குடியினர் உரிமைகள் பற்றி உலகளாவிய அறிக்கையையும் உருவாக்கியது.

பழங்குடிகள்
பழங்குடிகள்
https://tribal.nic.in/
உலகில் வறுமையில் வாடுவோரில் 15 சதவிகிதம் பழங்குடியினர்களே.

இந்தத் தினத்தின் முக்கிய நோக்கம் அனைத்துப் பழங்குடியினர் சமூகங்களின் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம், பண்பாடு, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காக இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே.

உலகம் முழுவதும் 90 நாடுகளில் 370 மில்லியன் பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர். உலகில் வறுமையில் வாடுவோரில் 15 சதவிகிதம் பழங்குடியினர்களே. உலகில் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ள 7,000 மொழிகளில் பெரும்பாலான மொழிகள் பழங்குடியினர்களால் பேசப்படுகின்றன என்றும் இவர்கள் 5,000-க்கும் மேற்பட்ட கலாசார பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளனர் என்றும் ஐ.நா சபை கூறியுள்ளது.

எண்ணெய், உடை, உப்பு தவிர பழங்குடிகளின் தேவைகள் அனைத்தும் காட்டில் இருந்தே பெறப்பட்டன.

இந்தியாவில் ஏறத்தாழ 10 கோடிக்கும் மேல் பழங்குடியினர்கள் வாழ்கிறார்கள். இதில் 40 லட்சத்துக்கும் மேலான பழங்குடிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் வசிக்கின்றனர். இது, இந்திய நிலப்பரப்பில் 5 சதவிகிதமாகும். இந்தப் பகுதியில் 500 வன உயிர் சரணாலயங்களும் 90 தேசியப் பூங்காக்களும் உள்ளன.

தமிழ்நாட்டு மக்கள்தொகையில் 7,94,697 பேர் (2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு) பழங்குடியினர். இது, தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 3.5 சதவிகிதம். தமிழகத்தில் மொத்தம் 36 வகையான பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள்.

வன உரிமைச் சட்டமும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சிக்கல்களும்

எண்ணெய், உடை, உப்பு தவிர பழங்குடிகளின் தேவைகள் அனைத்தும் காட்டில் இருந்தே பெறப்பட்டது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே காடுகள் முழுவதும் பழங்குடிகள் சுதந்திரமாக வாழ்ந்துவந்தனர். தங்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியையும் காடுகளிலிருந்தும் விவசாயத்திலிருந்தும் பெற்றனர்.

ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்தபோது ஆங்காங்கே குறுநில மன்னர்களும் சிற்றரசர்களும் ஆட்சி செலுத்தினர். இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடங்காமல் சுதந்திரமாக இருந்தனர். இவர்களைக் கட்டுபடுத்தித் தங்களின் ஆட்சிக்குள் கொண்டுவர ஆங்கிலேய அரசு நினைத்தபோதும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பழங்குடிகள்
பழங்குடிகள்
https://tribal.nic.in/

இதற்கு முக்கியக் காரணம், சிற்றரசுகளின் தந்திரமான மறைந்திருந்து தாக்கும் போர் முறையே. ஆங்கிலேயர்களின் படைகளை இவர்கள் சாதாரணமாகத் தகர்த்து காட்டுக்குள் ஒளிந்துகொண்டனர். இதனால் வெகுண்ட ஆங்கிலேயர்கள், இவர்களை முறியடிக்க வேண்டி காடுகளை அழிக்கத் திட்டமிட்டனர். சிற்றரசர்களையும் குறுநில மன்னர்களையும் அழிக்க வேண்டி காட்டை அழிக்கும் முதல்படியாக, 1846-ல் முதல் வன உரிமைச் சட்டத்தை ஆங்கிலேய ஆட்சி கொண்டுவந்தது.

அதோடு வனத்தை வியாபாரரீதியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தது. தொடர்ந்து சென்னை ராஜதானியில் 1856-ல் வன இலாகா என்ற துறை அமைக்கப்பட்டது. இந்தத் துறையின் மூலம் 1865-ல் முதல் வன ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் அனைத்து வனப் பகுதிகளும் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆங்கிலேயர்களின் நேரடி ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. பழங்குடியினர் காடுகளில் உலவ, தடையும் ஏற்படுத்தப்பட்டது. பழங்குடிகளின் பொருளாதாரம், வாழ்வு மற்றும் பண்பாட்டு அழிவின் தொடக்கப்புள்ளி இதுதான்.

இதுவரையில் காட்டில் தினை, சாமை, கேழ்வரகு, கம்பு போன்றவற்றை பயிரிட்டவர்கள் வன உரிமைச் சட்டத்தால் தங்கள் நிலங்களை இழந்தனர். ஆங்கிலேய அரசின் வணிக நோக்கத்துக்காக இன்னும் பல காடுகள் அழிக்கப்பட்டு காபி, தேயிலை, ரப்பர், ஏலக்காய் போன்ற பொருள்கள் பயிரிடப்பட்டன. இவற்றைப் பாதுகாப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும் பழங்குடி மக்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே அடிமையாக்கப்பட்டனர். 1882-ல் சென்னை வன ஆணையின்படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதைப் பழங்குடிகள் பயன்படுத்துவது வெகுவாகக் குறைக்கப்பட்டது.

வேட்டையாடும் பழங்குடிகள்
வேட்டையாடும் பழங்குடிகள்
https://tribal.nic.in/

1972-ல் தொடங்கி 1988 வரை அரசால் இயற்றப்பட்ட சட்டங்கள் இம்மக்களுக்கு எந்தவிதமான பலன்களையோ, சலுகைகளையோ கொடுக்கவில்லை. மாறாக, தங்களின் உரிமைகளை மேலதிகமாக இழந்தனர். மேலும் 1988-ல் இயற்றப்பட்ட வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் பழங்குடிகளை, ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தியது. இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் பழங்குடியினரும் பல போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவால் 2006-ம் ஆண்டு பட்டியல் பழங்குடியினர் மற்றும் பாரம்பர்ய வனவாழ் மக்கள் சட்டத்தைக் கொண்டுவந்தனர்.

இதன்படி, 2005 டிசம்பர் 13-ம் தேதிக்கு முன்பாகக் காடுகளில் வசிக்கும் மற்றும் விவசாயம் செய்துவரும் நிலங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். மேற்குறிப்பிட்ட தேதியில் பழங்குடி என நிரூபிக்கப்பட்டவர்கள் எவற்றையெல்லாம் அனுபவித்து வருகிறார்களோ, குறிப்பாக 10 ஏக்கருக்கு மிகாத அளவில் விவசாயம் செய்துவந்தால், குடியிருந்துவந்தால் அந்த நிலம் அவர்களுக்கே வழங்கப்படும்.

பழங்குடியினர்
பழங்குடியினர்
https://tribal.nic.in/

வனச் சிறு மகசூல்களைச் சேர்க்கவும், விற்கவுமான உரிமை, தங்களின் சொந்த தேவைக்கு மரம், மூங்கில் உள்ளிட்ட வனப்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை, பாரம்பர்யமாகப் பயன்படுத்தி வந்த பாதைகள், நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கான உரிமை, சிற்றரசர்கள், ஜமீன்தார்களால் ஏதேனும் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் அவையும் அங்கீகரிக்கப்படும்.

மேலும் காட்டு நிலங்களின்மீது எந்தவொரு மாநில அரசோ, உள் அதிகார அமைப்போ வழங்கியுள்ள பட்டாக்கள், இனாம்களை அவர்களது பெயருக்கு மாற்றிக்கொள்ளும் உரிமை, வனக்கிராமங்களை வருவாய்க் கிராமங்களாக மாற்றிக்கொள்வதற்கான உரிமைகள், காடுகளில் உயிரியல் மற்றும் கலாசார ஆதாரங்கள் தொடர்பான பாரம்பர்ய அறிவு மற்றும் அறிவு சொத்து ஆகியவற்றுக்கான உரிமை. காட்டு வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்வதற்கான உரிமை ஆகியவையும் இதில் உள்ளடங்கும். ஆனால், இன்னும் முறையாக அமல்படுத்தப்படாததால், இந்தச் சட்டத்தின் பலன்கள் பழங்குடி மக்களுக்குக் கிடைக்கவில்லை.

பழங்குடிகள்
பழங்குடிகள்
https://tribal.nic.in/

இந்த நிலையில் வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கென வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தை 1972-ல் அரசு கொண்டுவந்தது. இதோடு 1973-ல் புலிகளைப் பாதுகாக்கும் திட்டத்தை இந்திய வனவிலங்கு வாரியம் அமல்படுத்தியது. 1972-ல் புலிகளுக்காக 9 சரணலாயங்கள் இருந்து தற்போது, அது 38 சரணாலயங்களாக உயர்ந்துள்ளன. இப்படியாகப் புலிகளின் சரணாலயம் அதிகப்படுத்தும்போது அங்கிருக்கும் பழங்குடிகள் காடுகளிலிருந்து வெளியேறினார்கள். அதன்படி, காடுகளில் இருக்கும் பழங்குடியினர் பலரையும் வெளியேற்ற ஆணையிடப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தங்கள் சொந்த இடங்களைவிட்டு அகதிகளாக வெளியேறினர். இப்படி வெளியேறாத பழங்குடி மக்கள் பலர் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர்.

அரசாங்கம், மற்ற நிறுவனங்கள் வனஉயிரினங்களைப் பாதுகாப்பதைவிடப் பழங்குடியினர் வனவிலங்குகளைப் பாதுகாக்கின்றனர். உதாரணமாக, பழங்குடிகள் வேட்டையாடும்போது குறிப்பாக, பெண் விலங்குகளையும், கர்ப்பமான விலங்குகளையும், சிறு விலங்குகளையும் என்றும் வேட்டையாட மாட்டார்கள்.

வன உரிமைத் திருத்த மசோதா சட்டம் 2019

சுதந்திர இந்தியாவில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 2006 வன உரிமைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தபோது, அது பழங்குடி மக்களுக்கான உரிமைகளைச் சற்று நிலைநாட்டுவதாக இருந்தது. அதனால் இன்றுவரை பழங்குடி மக்கள் எந்தப் பலனையும் அனுபவிக்க இயலாத நிலையே உள்ளது. 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன உரிமைச் சட்டத்திருத்தத்தின் மூலம் காட்டில் உள்ள பழங்குடிகள் வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். சட்டத்திருத்தத்தின்படி காடுகளில் வசிக்கும் பழங்குடிகளின் பட்டாக்களைச் சரிபார்க்க உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 10,656 மனுக்களைச் சரிபார்க்காமல் தள்ளுபடி செய்தது. மேலும், 16 மாநிலங்களில் வசிக்கும் 11,27,446 பழங்குடிகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த ஷரத்துபடி இதுவரை இருந்த கிராமசபையின் அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாகப் `புதிய உற்பத்தி காடு’ ஒன்றை ஏற்படுத்தி, அதில் அணைகட்டுதல், சுரங்கம் தோண்டுதல், சாலை அமைக்கும் பணியையும் தொடங்க உள்ளது. இதை எதிர்ப்பவர்கள் மீது பிரயோகிக்க, பிணையில் வெளிவர முடியாத பிரிவிலான ஒரு சட்டத்தையும், அவர்கள்மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தவும், தடியடி நடத்தவும் உத்தரவுகள் பல பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆய்வாளர் சி.ஆர்.பிஜோய் கூறுகையில், `2002 மற்றும் 2004-ம் ஆண்டில் இது போன்றதொரு வெளியேற்ற நடவடிக்கை நிகழ்ந்தது. ஏறத்தாழ 30,000 மக்கள் காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கிராமங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. வீடுகள் பல நாசம் செய்யப்பட்டன. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் மரணித்துள்ளனர். சாதாரணமாக, ஒரு சட்டத்தின்மூலம் பாரம்பர்யமாகக் காட்டில் வசிக்கும் பழங்குடிகள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கப்படுகிறார்கள்" என்கிறார்.

புலிகள் சரணாலயம்
புலிகள் சரணாலயம்
https://tribal.nic.in/

காட்டில் உள்ள உயிரினங்களும் வனவிலங்களும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில், வனப் பாதுகாப்புச் சட்டம் தேவையில்லை. பழங்குடியினர் இருந்தால் மட்டுமே வனமும் வன உயிரினங்களும் பாதுகாக்கப்படும். ஏனெனில், பழங்குடி மக்களின் அறிவானது, அவ்வளவு நுட்பமானதும் ஆழமானதும். இவர்கள் காட்டைவிட்டு வெளியேறினால் காடும் வன உயிரும் கட்டாயம் அழிந்துபோகும். பழங்குடி மக்களை வெளியேற்றுவதன்மூலம் அரசாங்கமும் முதலாளிகளும் காடுகளைக் குத்தகை எடுத்து, காடுகளில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.

பழங்குடிகள் இல்லையெனில், காடுகள் கிடையாது. காடுகள் இல்லையெனில், மரங்களும் மழையும் கிடையாது. மழை நீர் இல்லாமல் மனிதச் சமுதாயம் பிழைக்கவும் முடியாது. ஆகையால், மனிதச் சமூகம் வாழ வேண்டுமாயின் நாம் பழங்குடிகளைப் பாதுக்க வேண்டியது மிக அவசியம்.

மாறிவரும் பூர்வகுடிகளின் பண்பாட்டுக் கலாசாரம்

பொதுவாகவே ஒவ்வொரு சமூகமும் தனித்தன்மையான மொழி, உணவு, பண்பாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால், இன்று பேச்சு, எழுத்து வழக்கில் உள்ள பல மொழிகளே அழியும் நிலையில் இருக்கும்போது பழங்குடியினர் மொழிகளின் நிலையைப் பற்றி கூற வேண்டியதில்லை. ஓர் இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் மொழியை அழித்தால் போதும், அந்த இனமே அழிந்துபோகும் என்பார்கள். ஆக, ஓர் இனத்தைக் காப்பாற்ற அந்த மொழியைக் காலந்தோறும் தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பழங்குடிகள்
பழங்குடிகள்
https://tribal.nic.in/
அரசாங்கம் அவர்களுக்கான பிரத்யேக அகராதியை உருவாக்க முனைய வேண்டும

இதற்கு மாறாகப் பழங்குடியினர் காட்டைவிட்டு இடம்பெயர்ந்து சமவெளி நகரப் பகுதிகளுக்கு நகரும்போது, தங்கள் மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அந்நிய மொழியைக் கைக்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். உதாரணமாக, பழங்குடியினர் மலையிருந்து சமவெளிப் பகுதிக்கு இடம்பெயர்ந்த பின் தங்கள் தாய்மொழியை மறந்து சமவெளிப் பகுதியினரின் மொழியை ஏற்றுக்கொள்கின்றனர். இதனுடைய பாதிப்பு இவர்களின் கல்வி, கலாசாரம் போன்றவற்றில் மிகையாக உள்ளதைக் காணலாம். அழிவிலிருந்து தடுக்கும் முயற்சியாகப் பழங்குடிகளின் மொழியைத் தக்கவைக்க அரசாங்கம் அவர்களுக்கான பிரத்யேக அகராதியை உருவாக்க முனைய வேண்டும்.

நவீன சமுதாயத்தில் பழங்குடியினர் இரண்டறக் கலந்தபின் மற்ற சமூகத்தின் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்கின்றனர். குறிப்பாக, மதம் மற்றும் சடங்குகள் சார்ந்த மாற்றங்கள். வனத்தில் இயற்கை தெய்வத்தை வணங்கியவர்கள் இப்போது சமவெளி மதங்களின் பல்வேறு கூறுகளையும் உள்வாங்கிக்கொண்டு அவற்றின் கடவுள்களை வணங்குகின்றனர். தொடர்ச்சியாகத் தங்களின் பாரம்பர்ய அறிவையும் சிறிது சிறிதாக இழந்துவருகின்றனர். உதாரணமாக, பழங்குடிகளின் மருத்துவ அறிவு, காடுகளில் விவசாயம் செய்யும் முறை, வேட்டையாடுதல், தேன் எடுத்தல், இயற்கை சார்ந்த நுண்ணறிவு இவற்றையெல்லாம் இழந்துவருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு இவர்கள் வனத்தில் தொந்தரவற்று வாழ வழி செய்யும் வகையில் அரசின் முன்னெடுப்புகள் அமைய வேண்டும். ஏனெனில், பூமியைப் பாதுகாக்க வேண்டுமெனில், வனங்களின் பாதுகாப்பு அவசியம். வனங்களைப் பாதுகாக்க பழங்குடிகளைக் காப்பது அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு