Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: மதம்கொண்ட யானையை‌ இம்சிக்கும் வனத்துறை! - கொதிக்கும் ஆர்வலர்கள்

உடைந்த கொம்பன் யானை
உடைந்த கொம்பன் யானை

``இந்தச் சமயத்தில் மிகுந்த அழுத்தத்துடனும், ஆக்ரோஷமாகவும் காணப்படும். மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க இது சரியான சமயம் அல்ல’’ - கொதிக்கும் சூழல் ஆர்வலர்கள்.

யானை-மனித எதிர்கொள்ளல் அதிகம் ஏற்படும் இடங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் யானை தாக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். பந்தலூர் பகுதியில் தந்தை, மகன் உட்பட மூன்று பேரையும் தாக்கிக் கொன்றது ஒரே யானைதான் என்பதை உறுதி செய்த வனத்துறையினர், குறிப்பிட்ட அந்த யானையைத் தேடும் பணியில் களமிறங்கினர்.

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

உள்ளூர் மக்களால் `உடைந்த கொம்பன்’, `சங்கர்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுவந்த ஓர் ஆண் காட்டு யானையே மனிதர்களைத் தாக்கும் சுபாவம்கொண்டதாக வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து முதுமலையிலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு சென்று பராமரிக்க முடிவு செய்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே, `ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்' என்ற பெயரில் கால்நடை மருத்துவர்கள்குழு மற்றும் கும்கி யானைகளின் உதவியுடன் யானையைப் பிடிக்கக் களமிறங்கினர். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் யானையைக் கண்டறிந்து மயக்க ஊசியைச் செலுத்தினர். உடலில் பாய்ந்த மயக்க ஊசியோடு கேரள வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றது. அதனால், இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர்.

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

இந்தநிலையில், உடைந்த கொம்பன் யானை தமிழக எல்லைக்குள் கடந்த வாரம் நுழைந்தது. இந்த யானையைப் பிடிக்க வனத்துறையினர் மீண்டும் களம் இறங்கினர். தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக யானையைப் பிடிக்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில், இன்று மதியம் மற்ற யானைகளுடன் கூட்டமாக இருந்த அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். மயக்க ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் யானை தப்பிச் சென்றது. தொடர்ந்து யானையைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

தற்போது அந்த யானை மஸ்த்தில் இருப்பதால், தற்போதைக்கு அதைப் பிடிக்க வேண்டாம் எனச் சூழலியல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த கால்நடை மருத்துவர் ஒருவர்,``குறிப்பிட்ட அந்த யானை தற்போது `மஸ்த் பீரியட்’ எனும் மதம் பிடித்த நிலையில் இருக்கிறது. அளவுக்கு அதிகமாக மதநீர் வடிவதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும், இந்த யானை பெண் யானைகள் மற்றும் குட்டிகள் உள்ள ஒரு யானைக் கூட்டத்துடன் உலவிவருகிறது. இந்தச் சமயத்தில் அது மிகுந்த அழுத்தத்துடனும் ஆக்ரோஷமாகவும் காணப்படும். மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க இது சரியான சமயம் அல்ல" என்றார்.

தேசிய பசுமைப்படையின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், ``மனிதர்கள் மற்றும் யானைகள் என இரண்டு தரப்பையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் வனத்துறை இருக்கிறது. உடைந்த கொம்பன் யானையை வனத்துறையினர் பிடிக்கும் முயற்சியில் இடைவிடாமல் இருந்துவருகின்றனர். இது அந்த யானைக்கும், அந்தக் கூட்டத்திலுள்ள மற்ற யானைகளுக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். மற்ற யானைகளும் ஆக்ரோஷமாக மாறும் ஆபத்தும் இருக்கிறது. யானையின் மஸ்த் பீரியடு முடியும்வரை ஊருக்குள் நுழையாமல் கண்காணித்துக்கொண்டிருப்பதே சிறந்தது" என்றார்.

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

இந்த விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடமே கேட்டோம். பெயர் கூற விரும்பாத ஓர் அதிகாரி நம்மிடம் பேசுகையில்,``இந்த யானையை உடனடியாகப் பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். அடுத்து யாரையேனும் இந்த யானை தாக்கிவிட்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடும்‌. அதுமட்டுமல்லாமல் இந்த யானை விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்துவதில்லை. மனிதர்களைத் தாக்கும். அதற்காகவே குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து செல்கிறது என்பதையும் நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். இதைத் தவிர வேறு வழியே இல்லை. கால்நடை மருத்துவர் குழுவைக் களத்தில் இறக்கி அந்த யானையைப் பிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்திவருகிறோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு