Published:Updated:

யானைகள் விரும்பாத ஆரஞ்சு மரங்கள்! விவசாய நிலங்களைக் காக்கும் வியூகம்

ஆசிய யானை
ஆசிய யானை

யானைகள் சமூக விலங்குகளாக அறியப்படுகின்றன. அவை, பெரும்பாலும் அபாயங்களை விட்டு விலகியிருக்கவே நினைக்கும். ஆனால், யானைகள் சமூக விலங்கு மட்டுமல்ல, அவை அறிவாளிகளும் கூட.

ஒவ்வொரு முறை யானைகளும் மனிதர்களும் எதிர்கொள்ளும்போது, குடியிருப்புகளுக்கு, விவசாய நிலங்களுக்குச் சேதம் ஏற்படுகின்றது. கூடுதலாக, மனிதர்கள், யானைகள் என்று இரண்டு தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழையும்போது, பயிர்களைச் சாப்பிடும்போது அவை மக்களுக்குப் பற்றாக்குறையாகிவிடுகின்றன.

யானை மந்தை
யானை மந்தை

ஒருவகையில், யானைகள் விவசாய நிலத்துக்குள் வருவதால் மனிதர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுவது போலவே, நாம் காட்டுக்குள் நுழைவதால், அவற்றை அழிப்பதால், ஆக்கிரமிப்பதால் யானைகளுக்கும் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இந்தியாவில் மட்டும் யானை-மனித எதிர்கொள்ளலால் ஆண்டுக்குத் தோராயமாக 500 மனிதர்களையும் 200 யானைகளையும் இழந்துகொண்டிருக்கிறோம் என்று கூறுகிறது யானைகள் குறித்து ஆய்வு செய்கின்ற ஏ ரோச்சா இந்தியா (A Rocha India) என்ற அமைப்பு.

``இந்தப் பிரச்னைகளுக்கு முழுக்க முழுக்க மனிதர்கள்தான் காரணம்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச காட்டுயிர் பாதுகாப்புத் திட்டத்தின் முன்னாள் தலைவர் பால் ஹாரிசன்.

ஒரு தேசியப் பூங்காவில், சரணாலயத்தில் யானை ஓர் அழகான, ஆச்சர்யங்கள் மிகுந்த உயிரினம். அதுவே, அந்த எல்லையிலிருந்து வெளியே காலடி எடுத்து வைத்துவிட்டால் விவசாயிகளுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்தாகப் பார்க்கப்படுகின்றது. இதனால், காடுகள் பாதுகாப்பில் ஈடுபடுபவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே எப்போதும் ஒரு முரண் இருந்துகொண்டேயிருக்கிறது. ஒரு தரப்பு, யானைகளைப் பாதுகாக்க நினைக்கிறது. இன்னொரு தரப்பு, யானைகள் இல்லாமல் இருப்பதே நல்லதென்று நினைக்கின்றது.

இது ஒருதரப்பு தீர்வாக மட்டுமே இருக்கின்றது. யானைகளை மனித வாழிடங்களிலிருந்து விலக்கி வைப்பது மட்டுமே நோக்கமாக இருப்பது மிகவும் தவறான முடிவு.

இரு தரப்பின் மனோபாவத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளையும் அதன் காரணங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது. விவசாயிகளும் சாதாரண மக்களும் சந்திக்கும் இன்னல்களும் சேதங்களும் யானைகளை எதிரிகளாகவே நினைக்க வைக்கின்றன. இதைச் சரிசெய்ய, இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா போன்ற யானைகள் அதிகமுள்ள நாடுகள் சில நடவடிக்கைகள் மூலம் தீர்வுகளைக் கொண்டுவர முயல்கின்றன.

அவற்றில் சில தான்,

  • ஒளி, ஒலியைப் பயன்படுத்தி யானைகளைப் பயமுறுத்தி, மனித வாழிடங்களுக்குள் வராமலிருக்கச் செய்வது.

  • வேலி, சுவர், அகழி ஆகியவற்றை அமைத்து அவை மனித வாழிடங்களை அணுகுவதைத் தடுப்பது. புகையிலை, மிளகு, நீலக்கற்றாழை ஆகிய தாவரங்கள் யானைகளுக்குப் பிடிக்காது. இத்தகைய வேலி, சுவர் மற்றும் அகழியோரங்களில் அவற்றை வளர்த்து வைப்பதன் மூலம் அவற்றின் வரவைத் தடுப்பது என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

யானைகள் வாழ்விடம்
யானைகள் வாழ்விடம்

`ஏ ரோச்சா இந்தியா' என்ற அமைப்பு இதற்கான தீர்வு குறித்து ஓர் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் இறுதியில், `ஏதோவொரு நடவடிக்கையைக் கடைப்பிடிப்பதைவிட அனைத்தையும் ஒருசேர மேற்கொள்வதே இறுதிக்கட்ட தீர்வுக்கு வழிவகுக்கும்' என்று கூறியுள்ளனர். கர்நாடகாவிலுள்ள பன்னேர்கட்டா தேசியப்பூங்காவில் அவர்கள், யானை அகழி, கான்க்ரீட் சுவர், முள் சுவர், ரயில் பாதைகளுக்கான வேலி என்று பலவற்றையும் பயன்படுத்திப் பரிசோதனை செய்தனர்.

வெறுமனே வேலிகளை மட்டுமே அமைக்காமல், அதில் தேனீக் கூடுகளை அமைத்தனர். புலிகளுடைய சிறுநீரில் நனைத்த சாக்குகளைத் தொங்க விடுவது, புலி உருமல்களைப் பதிவு செய்த ரெக்கார்டர்களைப் பொருத்தி வைப்பது என்று மேலும் பலவற்றைச் செய்தனர்.

யானைகள் சமூக விலங்குகளாக அறியப்படுகின்றன. அவை, பெரும்பாலும் அபாயங்களை விட்டு விலகியிருக்கவே நினைக்கும். ஆகவே, பன்னேர்கட்டாவில் அவர்கள் மேற்கொண்ட இந்தப் பரிசோதனை மூலம் ஆரம்பத்தில் நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியது. ஆனால் யானைகள் சமூக விலங்கு மட்டுமல்ல, அவை அறிவாளிகளும் கூட. அதையும் சமாளித்து உள்நுழைய முயன்றன. அதற்கான வழிகளையும் அவை கண்டுபிடிக்கத் தொடங்கின. உள்ள நிலைமையை நிதானமாகக் கண்காணித்து, அதை எதிர்கொள்ளப் பழகிக்கொண்டன. அதனால், புகையிலை மற்றும் மிளகுப் பொடி இரண்டையும் கலந்து வேலிகளில் தூவிவிட்டனர். அது யானைகளைப் பயமுறுத்தின. அவையும் அந்தக் காரமான நெடியிலிருந்து விலகியிருக்கத் தொடங்கின.

உணவுப் பற்றாக்குறை
உணவுப் பற்றாக்குறை

ஆனால், இது ஒருதரப்பு தீர்வாக மட்டுமே இருக்கின்றது. யானைகளை மனித வாழிடங்களிலிருந்து விலக்கி வைப்பது மட்டுமே நோக்கமாக இருப்பது மிகவும் தவறான முடிவு. காட்டுயிர்களைத் தூரத்தில் வைப்பது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கமுடியாது.

இலங்கையில் ஆரஞ்சு எலிஃபென்ட் (Project Orange Elephant) என்றொரு திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பின் மூலமாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. யானைகள் சிட்ரஸ் அமிலமுள்ள பழங்களைத் தவிர்ப்பதை அவர்கள் கண்காணித்தனர். கோட்பாட்டு ரீதியாக மட்டுமே இது தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டது. அதை உறுதி செய்வதற்காக அவர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். இலங்கையிலுள்ள தேஹிவாலா அருங்காட்சியகத்திலிருந்த யானைகளுக்கு கேரட், வாழை, வெள்ளரி, பூசணி போன்றவற்றோடு ஆறு வாரங்களில் மூன்று முறை சிட்ரஸ் அமிலமுள்ள பழங்களையும் உணவாகக் கொடுத்துப் பரிசோதித்தனர். அந்த உணவில் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் தவிர்த்துவிட்டு மற்றதை யானைகள் சாப்பிட்டன. ஆக, யானைகளுக்கு சிட்ரஸ் பழங்களைப் பிடிப்பதில்லை என்பது உறுதியானது.

இதை அடிப்படையாக வைத்து, விவசாய நிலங்களில் பயிர்களைச் சுற்றி ஆரஞ்சு மரங்களை வளர்த்து வைக்கலாம். அவை, வயல்களிலுள்ள பயிர்களின் வாசத்துக்கு அரணாக அமைந்து யானை வருவதைத் தடுக்கும். இது யானை-மனித எதிர்கொள்ளலைத் தடுப்பதோடு, விவசாய நிலத்துக்கு வெளியேயுள்ள இடங்களில் அவை மேய்ந்துகொள்ளவும் வசதி செய்கின்றன. அதுமட்டுமல்ல, மேற்கூறிய அரண்கள் ஏற்படுத்துவதுபோல் இந்த ஆரஞ்சு மரங்கள் எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. அவற்றைத் தூரத்திலேயே வைக்கின்றன அவ்வளவுதான். ஆனால், இந்தத் திட்டம் விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் வழங்கினாலும்கூட, தொடக்கத்தில் இந்த முயற்சிக்கு முதலில் அவர்கள் சம்மதிக்கவே இல்லை.

விவசாய நிலத்தின் எல்லைகளில் தேனீக்கள் வளர்ப்பு
விவசாய நிலத்தின் எல்லைகளில் தேனீக்கள் வளர்ப்பு
Amusing Planet

அஸ்ஸாமிலிருக்கும் தியா என்ற தன்னார்வ அமைப்பு இதேபோன்ற ஒரு முயற்சியை மிளகு விவசாயத்தை வைத்து 200 விவசாயிகளிடம் மேற்கொண்டது. அது, அவர்களுக்கு 40 சதவிகித வருவாய் உயர்வை ஏற்படுத்திக் கொடுத்தது. இன்னமும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் வேறு வழியின்றி யானைகள் வருகின்றன. அப்படியே வந்தாலும் அவை, மிளகுச் செடிகளைத் தொடுவதில்லை. அதன் விளைவாக, பயிர்களை இழந்தாலும் அவர்களுக்கு மிளகு மூலம் ஒரு வருமானம் உறுதியாகக் கிடைக்கின்றது.

மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இயற்கை வளங்களின் இருப்பு குறைந்துகொண்டேயிருக்கிறது. இந்த நிலையில், காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் தவிர்க்கமுடியாத பிரச்னையாக வளர்ந்துகொண்டேயிருக்கின்றது. ஆரஞ்சு மரம், மிளகுச் செடி, தேனீக்கள் வளர்ப்பு போன்றவை காட்டுயிர்களுக்குச் சேதம் விளைவிக்காமல் அவற்றைத் தூரத்திலேயே வைத்திருக்கும். நமக்குத் தேவையான உணவைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்கிறோம். ஆனால், யானைகள்..!

ஆரஞ்சு மரம்
ஆரஞ்சு மரம்

யானைகள் இப்போது சந்தித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால் மனிதர்கள். அது உண்மைதான். அதேநேரம், இப்போதுள்ள நிலையிலிருந்து அவற்றைப் பாதுகாக்கவும் மனிதர்களால் மட்டும்தான் முடியும். அதுவும் உண்மைதான். நம் உணவுக்காக அவற்றைத் தூர வைப்பது மட்டுமல்ல, அவற்றுக்குத் தேவையான வாழ்விடத்தை விட்டு வைத்து, அவற்றுடைய உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய நம்மால் மட்டுமே முடியும். அதற்கான முயற்சிகளையும் இதே தீவிரத்தோடு மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு