Published:Updated:

காலநிலை மாற்றத்துக்கான போராட்டங்களை குழந்தைகள் முன்னெடுப்பது ஏன் தெரியுமா?

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால், இதுவரை நாம் செய்த தவறுகளையே அவர்களும் செய்யாமலிருப்பார்கள்.

உலகம் முழுக்க 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, காலநிலைப் போராட்டம் நடைபெற்றது. அரசுகள் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, பூமியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இயற்கைப் பேரிடர்களையும் இழப்புகளையும் கட்டுப்படுத்த புவி வெப்பமயமாதல் போன்ற பேராபத்துகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி உலகம் தழுவி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவர்கள். இவ்வளவு பெரிய போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 வயது முதல் 17 வயது வரையே ஆன மாணவர்கள்தாம்.

கொரோனா வைரஸ்-காலநிலை மாற்றம்
கொரோனா வைரஸ்-காலநிலை மாற்றம்

17 வயதுப் பெண் கிரெட்டா தன்பெர்க்கின் காலநிலை மாற்றம் குறித்த ஆவேச உரை, மொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நம் இளைய சமுதாயம் விழிப்புடன் உள்ளதை நினைத்துப் பெருமைப்படச் செய்தது. எதிர்கால நலனைக் கருதி, காலநிலை மாற்றத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதில் குழந்தைகளை ஈடுபடுத்துவது இன்றைய அவசியத் தேவை. ஏனென்றால், இந்தப் பூமியின் இயற்கை வளங்களில் நாம் சுரண்டியது போக மிச்சம் வைத்திருப்பனவற்றை நாளை அவர்கள் கையில்தான் நாம் ஒப்படைக்கப் போகிறோம்.

கிரெட்டா தன்பெர்க் (Greta Thunberg) போன்று உலகம் முழுவதும் குழந்தைகள் காலநிலை மாற்றம் குறித்துப் போராடி வருகின்றார்கள். கனடாவைச் சேர்ந்த 15 வயதான ஆட்டம் பெல்டி (Autumn Peltiee) தனது 8 வயது முதலே, சுத்தமான தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். உகாண்டாவைச் சேர்ந்த 15 வயது லீ நமுஜெரிவா, (Leah Namugereva) நெகிழியால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளையும் காலநிலை மாற்றம் குறித்தும் போராட்டம் நடத்தி வருகின்றார். அவர் தன் 15-வது பிறந்தநாளை 200 மரக் கன்றுகளை நட்டு வைத்துக் கொண்டாடியுள்ளார்.

ரிதிமா பாண்டே (Ridhima Pandey ) உத்தரகண்டில் 2013-ல் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டபோது அதைக் கண்டு காலநிலை மாற்றம் குறித்த ஆர்வம் அவருக்கு உருவானது. அவள் 2017-ம் ஆண்டு தன் 9 வது வயதில் தன் காப்பாளர்கள் மூலம் காலநிலை மாற்றத்தில் இந்தியா கவனம் செலுத்தவில்லை என்று இந்திய அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மேலும், காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மெக்சிகோவைச் சேர்ந்த 17 வயதான ஸியே பெஸ்டியா, (Xiye Bastia) 16 வயது ஐஸ்ரா ஹிர்ஸி (Isra Hirsi) போன்ற சிறு குழந்தைகளும் காலநிலை மாற்ற ஆர்வலர்களாக உருவெடுத்துள்ளனர்.

இவர்களைப் பற்றியெல்லாம் இப்போது ஏன் பேச வேண்டும் என்ற கேள்வி எழுகின்றதா?

ஏனென்றால், காலநிலை மாற்றம் குறித்த கல்வி இன்றைய குழந்தைகளுக்கு ஏன் அவ்வளவு முக்கியம் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய 15-வது வயதில், 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வைத் தாண்டி வேறு எதையும் சிந்தித்திருக்க மாட்டோம். அதற்குக் காரணம், ஏதோ ரோபோவின் பிராசஸரில் பதிந்து வைத்ததைப்போல் அப்போது நம் மூளையில் பொதுத் தேர்வையும் அதில் வாங்க வேண்டிய மதிப்பெண்ணையும் மட்டுமே பதித்து வைத்திருந்தார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னரோ அதற்கும் முன்போ யாராவது உங்களிடம் வந்து காலநிலை மாற்றம் என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டிருந்தால் திருதிருவென விழித்திருப்போம். அதுவே, இப்போதைய 15 வயது குழந்தையிடம் கேட்டால் குறைந்தபட்சம் பூமியைச் சிதைத்துக் கொண்டிருக்கும் ஓர் ஆபத்து என்றாவது தெரிந்திருக்கிறது. இதற்குக் காரணம் பொதுவெளியில் காலநிலை அவசரம் குறித்தும் புவி வெப்பமயமாதல் குறித்தும் அதிகரித்துள்ள விவாதங்கள்.

`கேரளாவை நம்பியே பிழைப்பு; வெளிநாட்டுப் பயணிகள் வருகை!’ - கொரோனா சுவடே இல்லாமல் சாதித்த லட்சத்தீவு

எதிர்காலப் பூமியில் வாழப்போகும் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் காலநிலை மாற்றம் குறித்த புரிதல் மிக அவசியம். இப்போது அதிகரித்துக்கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதல் அடுத்த 30 ஆண்டுகளில் தீவிரப் பிரச்னைகளைக் கொண்டுவரும். அப்போது அதன் வீரியத்தை எதிர்கொள்ளப் போவது இன்றைய குழந்தைகளே.

வெப்பம் தாளாமல் ஒற்றை மரத்தில் ஒதுங்கி நிற்கும் கால்நடைகள்
வெப்பம் தாளாமல் ஒற்றை மரத்தில் ஒதுங்கி நிற்கும் கால்நடைகள்

குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால், இதுவரை நாம் செய்த தவறுகளையே அவர்களும் செய்யாமலிருப்பார்கள். அதோடு, நாம் செய்த தவறுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சரிக்கட்டவும் இந்தப் பாதிப்புகளின் வீரியத்தைக் குறைக்கவும்கூட அவர்களால்தான் முடியும். யுனெஸ்கோவின் அறிவியல் முன்னேற்றத்திற்கான கல்விமுறையில் (Education for Scientifical Development), காலநிலை மாற்றம் குறித்த கல்விக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும் ஐ.நாவின் 13 நிறுவனங்களுடன் இணைந்து யுனெஸ்கோ நிறுவனம் காலநிலை மாற்றம் குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. இதுகுறித்த கல்வி, பள்ளிகளில் ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்ற கருத்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றது. நம் கல்விமுறையும் அதில் இடம்பெறும் பாடங்கள் அவர்கள் என்ன வேலையைச் செய்யப்போகிறார்கள் என்பதை மட்டுமே தீர்மானிப்பதாக இருக்கக்கூடாது. அவர்களைப் பொறுப்புள்ள குடிமக்களாக, பூமியில் வாழத் தகுதிவாய்ந்த மனிதராக உருவாக்கும் விதத்திலும் அமைய வேண்டும்.

இணையவழியில் யூஎன்சிசி (UNCC) என்ற தளம் 30 நிறுவனங்களுடன் இணைந்து காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் தட்பவெப்பநிலை கூடிக்கொண்டே இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பதிவான பூமியின் வெப்பநிலை, அதற்கு முன்பிருந்ததைவிட வெப்பமயமாதலின் வேகம் அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றது. இது நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம். கோவிட் 19-ன் தாக்கத்தின் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். அதைவிடப் பெரிய தாக்கத்தைக் காலநிலை மாற்றம் வரும் காலத்தில் ஏற்படுத்தலாம். இதைத் தடுப்பதற்கு நம்மை இப்போதே மாற்றிக் கொள்வது அவசியம். புவி வெப்பமயமாதலினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தடுக்க, வரும் முன் காக்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனில், அதற்குக் காலநிலை மாற்றம் பற்றி அறிந்திருப்பதும் அதுகுறித்த புரிதலும் அவசியம். இதை உணர்த்த யுனெஸ்கோ, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைக் குழந்தைகள் மத்தியில் கல்விமுறையின் வழியே ஏற்படுத்த முயல்கின்றது.

காலநிலைப் போராட்டம்
காலநிலைப் போராட்டம்
Pixabay

ஆம், இன்றைய குழந்தைகளுக்குக் காலநிலை அவசரத்தின் தீவிரத்தைப் புரிய வைக்க வேண்டும். இவர்கள் மூலம் வருங்காலக் குழந்தைகளும் விழிப்புணர்வு பெறுவார்கள். உலகத்தின் இன்றைய தேவை காலநிலை அவசரம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்குவதும் அதற்கான தீர்வுகளை வகுப்பதும்தான். குழந்தைகள் மனதில் நல்லவற்றை விதைத்தால், அதன் மூலம் அவர்களும் பயன் பெற்று மற்றவர்களையும் வழிநடத்துவார்கள் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த சின் பிளானெடோ-பி (Sin planeto - B) என்ற நிறுவனம் குழந்தைகளுக்கு, காலநிலை மாற்றம் குறித்த கல்வியை வழங்கி வருகின்றது. அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த கல்வியால் விழிப்படைந்த குழந்தைகள் தங்கள் பெற்றோரின் செயல்களையும் மாற்றுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது எப்படி, பொறுப்புள்ள நுகர்வோராக இருப்பது எப்படி, மின்சாரப் பயன்பாட்டைச் சிக்கனமாகச் செய்வது, உள்நாட்டுப் பொருள்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான வழிகளைப் பெற்றோருக்கு எடுத்துரைக்கின்றனர்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தங்களைக் காடுகள் பாதுகாப்பு, ஏரியைச் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடச் செய்வதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். காலநிலை மாற்றம் குறித்து குழந்தைகளுக்குக் கற்பிக்க சரியான வயது 8 முதல் 11 வயது என்று கூறப்படுகின்றது.

காலநிலை அவசரம்
காலநிலை அவசரம்

படிப்பறிவு, பணம் அதிகம் உள்ள குடும்பத்தில் உள்ள குழந்தைகள் வீட்டில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதாகவும், படிப்பு, பணம் குறைந்த குடும்பங்கள் அன்றாடத் தேவைக்கே அல்லல்படுவதால் விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இதன் காரணமாகக் காலநிலை மாற்றம் குறித்த கல்வி, பாடத்திட்டத்திலேயே அனைத்து மாணவர்களுக்குமான கல்விமுறையிலேயே இடம்பெற்றால் அனைத்துத் தரப்பு குழந்தைகளுக்குமே அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும். இது இன்றைய சூழலில் மிகவும் அவசியமானதும்கூட. கடந்த நவம்பர் மாதத்தில், தங்கள் நாட்டின் குழந்தைகளுடைய கல்வித் திட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்த பாடம் இடம்பெறும் என்று இத்தாலி அறிவித்தது. அதேபோல் ஒவ்வொரு நாடும் தங்கள் குழந்தைகளுக்குப் பாடத்திட்டத்தின் வாயிலாகவே போதிக்க வேண்டும்.

ஒரு வைரஸால் உலகமே முடங்கியுள்ள நிலையில், வரும் காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இப்பூவுலகைக் காப்போம்.
அடுத்த கட்டுரைக்கு