Published:Updated:

2019-ல் பரவலாக உச்சரிக்கப்பட்ட சொல் `காலநிலை அவசரம்' - தீர்வு தருமா 2020?

Climate Protest
Climate Protest ( Pixabay )

``காலநிலை மாற்றம் நம் அனைவரையும் ஒன்றுபடுத்திக் கொண்டிருக்கிறது. அதை மாணவர்கள் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.’’

2019-ம் ஆண்டு, காலநிலை அவசரத்தின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தியது. அதேநேரம், எதிர்காலச் சந்ததியினர் ஏற்படுத்திய நம்பிக்கையோடு நாம் 2020-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். கடந்த ஆண்டு நமக்குக் கற்றுத்தந்த பாடங்களையும் ஏற்படுத்திய நம்பிக்கையையும் கொஞ்சம் அலசுவோம்.

2019 நவம்பர் மாதத்தில், `காலநிலை அவசரம்' என்ற பதத்தை அந்த ஆண்டின் வார்த்தையாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அறிவித்தது. இணையத்தில் 2019-ம் ஆண்டில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக, அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தையாக, அதற்குரிய அர்த்தத்தை அதிகமாக உணர்த்திய வார்த்தையாக இருந்ததால் இந்த அங்கீகாரம் கிடைத்தது.

காலநிலை அவசரம்
காலநிலை அவசரம்

காலநிலை மாற்றம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் இதுகுறித்துச் சராசரி மக்களிடம் கேட்டிருந்தால் அவர்கள் அப்படியென்றால் என்னவென்று கேட்டிருப்பார்கள். இப்போது கேட்டால், அவர்கள் முகத்தில் அச்ச ரேகை படர்வதை நம்மால் பார்க்கமுடியும். ஏனென்றால், காலநிலை `மாற்றம்', காலநிலை 'அவசர'மாக மாறிவிட்ட சூழலில் நாம் நிற்கிறோம்.

பள்ளிக் குழந்தைகள் தங்கள் வகுப்புகளை விளையாட்டுக்காகவோ வேடிக்கையாகவோ புறக்கணித்துப் பார்த்திருப்போம். ஆனால், உலகளவில் தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தால் புறக்கணித்தது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. சீனாவைத் தவிர உலகளவில் அனைத்து நகரங்களிலும் 2019-ம் ஆண்டில், வகுப்புகளை விட்டு வெளியேறிய மாணவர்கள் காலநிலை அவசரத்தைச் சரிக்கட்ட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராட்டத்திலும் இறங்கினார்கள். ஆய்வாளர்களின் எச்சரிக்கைகளை பொதுவெளிக்குக் கொண்டுவந்த அவர்களால், பிரச்னையின் தீவிரம் குறித்த விவரம் உலகின் அனைத்து மூலைக்கும் கொண்டுசேர்க்கப்பட்டது.

2018-ம் ஆண்டில் ஸ்வீடனுக்கு வெளியே யாரிடமாவது, கிரெட்டா தன்பெர்க் தெரியுமா என்று கேட்டிருந்தால், புரியாமல் விழித்திருப்பார்கள். இப்போது சர்வதேசக் குழந்தை நட்சத்திரமாகப் பிரகாசிக்கும் அந்தச் சிறுமி தொடங்கிவைத்த போராட்டம்தான் கோடிக்கணக்கான மாணவர்களின் இந்த எழுச்சிக்குக் காரணம் என்பதை மறுக்கமுடியாது. அமைதியாகத் தங்கள் புரட்சியை மேற்கொண்ட எதிர்காலத் தலைமுறையின் கையிலிருந்த ஆயுதங்களோ அவர்களின் மன உறுதியும்,

"எங்களின் நம்பிக்கை மறைந்தால், எங்களுடைய நடவடிக்கை தொடங்கும்"
"அரசுகளே! எங்கள் எதிர்காலத்தை மூழ்கடித்துவிடாதீர்கள்"

என்பது போன்ற வாசகங்களைச் சுமந்திருந்த பலகைகளும் மட்டுமே.

மனித வரலாற்றிலேயே வெப்பம் மிகுந்த ஆண்டாக இந்த ஆண்டு கருதப்படுகிறது. கடந்த சில பத்தாண்டுகளாகவே ஆய்வாளர்கள் இந்தப் பிரச்னை குறித்து எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். மனித இனத்திற்குள்ள ஆபத்தை, புதைபடிம எரிபொருள் பயன்பாடு ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றி அவர்கள் கொடுத்த எச்சரிக்கைகள் மக்களின் காதுகளில் விழுந்த ஆண்டு 2019.

பூமியின் வெப்பநிலை இன்னும் 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகமானால், காலநிலை மாற்றம் தீவிரமடையும் என்று 2015-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் எச்சரிக்கப்பட்டது. உலகநாடுகளும் அதைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் நடந்துகொள்வதாக உறுதி ஏற்றனர். ஆனால், இந்த ஆண்டில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துவிட்டது. இப்போது அதை 2 டிகிரிக்கு உள்ளாகவாவது கட்டுக்குள் வைக்க வேண்டுமென்று பேசப்படுகிறது. அதையும் தாண்டிவிட்டால், பேரழிவு கணக்கிட முடியாத அளவுக்கு இருக்கும்.

``இனி அதிகரிக்கும் ஒவ்வொரு அரை டிகிரியுமே பிரச்னைதான்" என்கிறார்கள் காலநிலை மாற்ற ஆய்வாளர்கள்.

காலநிலை அவசரம்
காலநிலை அவசரம்
Pixabay

ஃபிரான்ஸ் காலநிலை மாற்ற உயர்மட்டக் குழுவின் உறுப்பினராக இருக்கும் கோரின் லெ கியுரெ ஃபிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ``நான் 30 ஆண்டுகளாகக் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக எங்கள் ஆய்வுகளைப் பற்றி யாருக்குமே தெரியவில்லை. ஆனால், கடந்த ஒரே ஆண்டில் அனைவரும் இதுகுறித்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள். இது புதிதாகத்தான் உள்ளது. ஆனால் நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருக்கிறது" என்று கூறினார்.

காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில், பூமியில் கரிம வாயு வெளியேற்றம் 2030-ம் ஆண்டுக்குள் இப்போதிருப்பதைவிட 45 சதவிகிதம் குறைய வேண்டுமென்று கூறியுள்ளது. அதைச் செய்தால்தான், 2050-க்குள் இப்போது உயர்ந்துள்ள 1.5 டிகிரி வெப்பநிலையைச் சமாளித்துக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நம்மிடம் இன்னும் 11 ஆண்டுகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 8 சதவிகிதம் என்ற விகிதத்தில் குறைத்தால்தான், 2030-க்குள் இலக்கை அடையமுடியும்.

வடகிழக்கு இந்தியாவில், கேரளா மற்றும் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட கஜா புயல், மொசாம்பிக்கில் இடாய் புயல், ஜப்பானில் ஹகிபிஸ் சூறாவளி, ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பநிலை உயர்வு, கலிஃபோர்னியா, அமேசான், ஆஸ்திரேலியா காட்டுத்தீ, வெனீஸ் வெள்ளம் என்று உலகளவில் இந்த ஆண்டு நடந்த பேரழிவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இருப்பினும், நம்முடைய கரிம வாயு வெளியீடு, இந்த ஆண்டில் 0.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளார்கள். இந்தப் போக்கு அச்சத்தைக் கொடுத்ததால்தான், மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த சந்தேகம் எழுந்தது.

வேகமாக வளர்ந்துகொண்டிருந்த பொருளாதாரமாக இருந்த இந்தோனேசியா, காலநிலை அவசரத்தால் தன்னுடைய தலைநகரத்தையே மாற்றவேண்டிய மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

காலநிலை அவசரப் போராட்டம், சென்னை
காலநிலை அவசரப் போராட்டம், சென்னை
Vikatan

நாம் கண்முன்னே காலநிலை அவசரம் ஆதாரங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது. யதார்த்தம், செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு நம்மைத் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுதான், அதிகரித்துவரும் சூழலியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் செயல்பாடுகள்.

சூழலியல் செயல்பாடுகள் (Environmental activism) நமக்குப் புதியதல்ல. மரத்தை வெட்டக்கூடாதென்று கட்டிப்பிடித்து நின்ற பிஸ்னோய் பெண்கள் சூழலியல் போராளிகளே. சூழலியல் போராட்டங்கள் இன்றுவரை தொடர்கிறது. இப்போது எதிர்காலத் தலைமுறைகளான இன்றைய மாணவர்கள் அதைக் கையில் எடுத்துள்ளார்கள். அவர்கள், சூழலியல் போராட்டக் களத்தை அனைவருக்குமானதாக சமத்துவம் மிகுந்ததாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

காலநிலை மாற்றம் நம் அனைவரையும் ஒன்றுபடுத்திக் கொண்டிருக்கிறது. அதை மாணவர்கள் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள். இனி, மக்களும் அவர்களோடு கைகோத்து காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை தெரிகிறது
பேரா. ஆல்ஃப்ரெடோ ஜோர்னெட், ஓஸ்லோ பல்கலைக்கழகம்
அடுத்த கட்டுரைக்கு