Published:Updated:

நீர்மின் திட்டத்துக்காக டிபாங் பள்ளத்தாக்கை அழிக்கும் அரசு... இந்தியாவெங்கும் வலுக்கும் எதிர்ப்பு!

டிபாங் பள்ளத்தாக்கு
News
டிபாங் பள்ளத்தாக்கு ( goldentakin )

பழங்குடிகளின் மரபுவழிப் பாதுகாப்பு முறைகளுக்கும் அரசியல் நலன்களுக்காக பழங்குடிகளை ஓரங்கட்டியே வைத்திருக்க நினைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டம், கடந்த சில பத்து ஆண்டுகளாகவே இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

பல்லுயிரிய வளம் மிக்க பகுதிகளை வளர்ச்சி என்ற பெயரில் அழிவுக்கு உள்ளாக்குவது, கொள்ளை நோய்ப் பேரிடர்களுக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றனர். ஆம், இப்போது ஏற்பட்டுள்ள இந்தக் கொரோனா பேரிடரைப்போல மற்றுமொரு கொள்ளை நோயை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இது அமைந்துவிடும். மக்களுடைய எதிர்ப்போ எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போ எதுவுமின்றி, நாட்டின் வளமைமிக்க வடகிழக்கு இந்தியாவின் காடுகளை முரண்பாடு மிக்க திட்டத்துக்காக அரசு திறந்துவிடுவதன்மூலம், இந்த வாய்ப்பு உருவாகும். உலக அளவில் உள்ள 36 மிக முக்கியமான பல்லுயிர்ச்சூழல் பகுதிகளில் ஒன்றான டிபாங் பள்ளத்தாக்கில், இரண்டு பெரிய அணைகளைக் கட்டும் திட்டம் இந்திய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிபாங் நதி
டிபாங் நதி
Anu007bora

நாட்டின் மிகவும் அடர்த்தியான, மனிதர்களின் கால்தடம் அதிகம் படாத காடுகளில் ஒன்றுதான் டிபாங் பள்ளத்தாக்கு. வடகிழக்கு இந்தியக் காடுகள்தான் இந்தியாவிலேயே மிகவும் அடர்ந்த காடுகளைக் கொண்ட பகுதி. அந்தப் பகுதியிலேயே மிகவும் அடர்த்தியானது டிபாங் பள்ளத்தாக்கு. பறவைகள், சிறுத்தைகள் முதல் பூர்வகுடிச் சமூகங்கள் வரை, வெப்பமண்டல மழைக்காடான இது, உயிர்ச்சூழல் நிறைந்து காணப்படுகிறது. இடாலின் நீர்மின் திட்டத்துக்காக வரவிருக்கும் இரண்டு பெரிய அணைகள், இந்த உயிர்ச்சூழலை மொத்தமாக அழித்துவிடும் என்கிறார்கள். இதையுணர்ந்த மக்கள், #StopEtalinSaveDibang என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் டிரெண்டாக்கிவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பழங்குடிகளின் மரபுவழிப் பாதுகாப்பு முறைகளுக்கும் அரசியல் நலன்களுக்காகப் பழங்குடிகளை ஓரங்கட்டியே வைத்திருக்க நினைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டம், கடந்த சில பத்து ஆண்டுகளாகவே இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

வடகிழக்கிலுள்ள பெரிய மாநிலமும், நாட்டிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதுமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது, டிபாங் பள்ளத்தாக்கு. பிரம்மபுத்திராவின் கிளை நதியான டிபாங் நதியையொட்டி, இந்தப் பள்ளத்தாக்கிற்கு இப்படிப் பெயர் சூட்டப்பட்டது. பலவகை விலங்குகள், தாவரங்களைக் கொண்ட இந்த வனப்பகுதியில், சர்வதேச அளவில் அழியும் ஆபத்திலுள்ள பாலூட்டிகள் பட்டியலிலுள்ள 6 வகையான பாலூட்டிகள் வாழ்கின்றன. அழியும் நிலையிலுள்ள 4 வகையான பறவைகள் இங்கு வாழ்கின்றன. இடு மிஷ்மி என்ற பூர்வகுடிச் சமூகத்தின் பூர்வீகமும் இதுதான். இந்தப் பழங்குடியினச் சமூகம் பல நூற்றாண்டுகளாகத் தங்கள் கலாசார நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறையின் வழியே புலிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இடு மிஷ்மி பழங்குடி மக்கள்
இடு மிஷ்மி பழங்குடி மக்கள்
Riwatch Arunachal Pradesh/Facebook

2008-ம் ஆண்டு, 3,097 மெகாவாட் திறனுடைய இடாலின் நீர்மின் திட்டம் முன்மொழியப்பட்டது. அருணாசலப் பிரதேசத்தின் நீர்மின் வளர்ச்சிக் கழகம் மற்றும் ஜிண்டால் மின்சார நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட மூன்று நீர்மின் திட்டங்களில் இதுவும் ஒன்று. டிபாங் நதியின் கிளை நதிகளான டாலோ மற்றும் டிரி நதிகளில் இரண்டு பெரிய அணைகளைக் கட்டி, 3097 மெகாவாட் மின்சார உற்பத்திக்காக இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக, 2,80,000 மரங்கள் வெட்டப்படும். வெப்பமண்டல மழைக்காட்டில் சுமார் 1,160 ஹெக்டேர் வனப்பகுதி அழிக்கப்படும்.

ஜனவரி 2017-ம் ஆண்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்ந்த வல்லுநர் குழு இந்த நதி, பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டம் குறித்து சமர்ப்பித்த அறிக்கையில் இடாலின் நீர்மின் திட்டத்திற்குச் சூழலியல் அனுமதி கொடுக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், வன ஆலோசனைக் கமிட்டி (Forest Advisory Committee) அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்பகுதியின் பல்லுயிரிய வளம் குறித்து நம்பத்தகுந்த நிறுவனத்தின் வாயிலாக ஆய்வு செய்யவேண்டுமென்று கூறியது. அதன்பிறகு, அதுகுறித்து இந்திய காட்டுயிர் நிறுவனம் (Wildlife Institute of India) ஆய்வு மேற்கொண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பெரிய அணை வந்தால் நில அதிர்வுகள் அதிகமாகும். 350 உறைந்த ஏரிகள் நதியின் மேல்நிலையில் இருப்பதால், அவை இந்த நில அதிர்வுகளால் அணையை நோக்கி வெள்ளத்திற்கான அலைகளை உண்டாக்குமென்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போது கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில், ஏப்ரல் 23-ம் தேதியன்று இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுப்பது குறித்த விவாதம் நடைபெற்றது. பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் வல்லுநர்களும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு இடாலின் நீர்மின் நிலையத் திட்டத்தின் பின்விளைவுகளை மேற்கோள் காட்டி எச்சரித்துக் கடிதம் எழுதினர். பல்லுயிரிய வளம், பழங்குடியின மக்களுக்கு அப்பாற்பட்டு, அங்கு இந்தப் பெரிய அணை வந்தால் நில அதிர்வுகள் அதிகமாகும். 350 உறைந்த ஏரிகள் நதியின் மேல்நிலையில் இருப்பதால், அவை இந்த நில அதிர்வுகளால் அணையை நோக்கி வெள்ளத்திற்கான அலைகளை உண்டாக்குமென்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Red Panda/ Dibang Valley
Red Panda/ Dibang Valley
Mathias Appel

இந்தப் பிரச்னை, மரபுசார் பல்லுயிரிய வளப் பாதுகாப்பு முறையோடு நவீனகால முறைகளுக்கு இருக்கும் முரண்பாட்டோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இடு மிஷ்மி கலாசாரம் மற்றும் இலக்கியச் சங்கம் 2018-ம் ஆண்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், பல்லுயிரிய வளப் பாதுகாப்பை கலாசார அடிப்படையில் மேற்கொள்ளும் ஆலோசனையை கருத்தில்கொள்ள வேண்டுமென்று கோரியிருந்தது. அதோடு, அந்தக் கடிதம் மரபுசார் பாதுகாப்பே அவர்களது பகுதியில் புலிகளைப் பாதுகாப்பாக வைத்துள்ளது என்பதை நிரூபிக்கவும் செய்தது. பழங்குடிகளின் மரபுவழிப் பாதுகாப்பு முறைகளுக்கும் அரசியல் நலன்களுக்காகப் பழங்குடிகளை ஓரங்கட்டியே வைத்திருக்க நினைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டம், கடந்த சில பத்து ஆண்டுகளாகவே இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்திய அரசு தொடர்ந்து பழங்குடிகளுடைய ஆக்கபூர்வமான மற்றும் மரபுவழியிலான பாதுகாப்பு முறைகளை அங்கீகரித்து, நடைமுறையில் அமல்படுத்த முயலவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

பூர்வகுடிகளின் கலாசாரத்தை அழித்து, அந்த நிலப்பகுதியின் சூழலியல் வளத்தை அழித்து, நிலவியல் ரீதியாக எளிதில் பாதிக்கக்கூடிய பகுதியில் ஒரு மிகப்பெரிய நீர்மின் திட்டத்தைக் கொண்டு வருவதுதான், கிராமப்புற மக்கள் கேட்கின்ற வளர்ச்சியா என்று சூழலியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாம் புதிய அணுகுமுறையைக் கையாள வேண்டும். அனைத்துத் தரப்பு மனிதர்களுக்கும் நன்மை பயக்கும், சூழலியல் சமநிலையைக் குலைக்காத அணுகுமுறையாக அது இருக்க வேண்டும். மாறாக, சூழலியல் அழிவுக்கு வித்திடும், எளிய மக்களைப் பாதிக்கும், காலநிலை மாற்றம் மற்றும் கொள்ளை நோய் பேரிடர்களைத் தூண்டிவிடும் அணுகுமுறையையே மீண்டும் மீண்டும் மேற்கொள்கிறோம். அதற்கான ஓர் உதாரணம்தான், டிபாங் பள்ளத்தாக்கில் வரவிருக்கின்ற இடாலின் நீர்மின் நிலையத் திட்டம். இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்காகத் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலருக்குமே பெரிய அளவில் இழப்பீட்டுத் தொகை கொடுப்பதாகக் கூறி ஆதரவு தெரிவிக்க வைத்திருப்பதாகவும், அந்த இழப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு இந்தப் பகுதியின் சூழலியலைக் கெடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் இடு மிஷ்மி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.

Orange Bellied Himalayan Squirrel
Orange Bellied Himalayan Squirrel
Rakeshkdogra

கடந்த மாதம் 4-ம் தேதி, 15 ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த 26 ஆராய்ச்சியாளர்கள், இந்தத் திட்டம் குறித்த இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் ஆய்வுமுடிவை மறு ஆய்வு செய்தனர். அவர்களுடைய கூற்றுப்படி, இந்திய காட்டுயிர் நிறுவனம் இந்தத் திட்டம் குறித்துப் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வை நான்கே மாதங்களில் முடித்துவிட்டதாக அந்த ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள், மிகக் குறைந்த பகுதிகளையே கள ஆய்வு செய்துள்ளதாகவும், அதனால் அந்தப் பகுதியில் இந்தத் திட்டம் ஏற்படுத்தப் போகும் முழு ஆபத்தும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிர்ப்புக் கடிதங்கள் அனுப்புவது, ட்விட்டரில் இந்தத் திட்டத்தை எதிர்ப்பது என்று இடாலின் நீர்மின் திட்டத்தை மக்கள் கடுமையாக எதிர்த்துக்கொண்டிருக்கின்றன. #StopEtalinSaveDibang மற்றும் #SaveArunachalBiodiversity போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகிக்கொண்டிருக்கின்றன.

அருணாச்சலப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்

எதிர்ப்புகள் வலுக்கின்றன. அதேநேரம் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சிகளும் வலுக்கின்றன. டிபாங் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழும் பூர்வகுடிகள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக வாழும் பறவைகள், பாலூட்டிகள் ஒருபுறம், வளர்ச்சி என்ற பெயரில் அப்பகுதியின் பல்லுயிரிய வளத்தை சிதைக்கத் துடிக்கும் அரசாங்கம் ஒருபுறம். இதில் மக்களுடைய ஆதரவு என்னவோ, பூர்வகுடிகளைப் போலவே டிபாங் பள்ளத்தாக்கைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறது. ஆகவே, அரசு இந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அருணாசலப் பிரதேசத்தின் பல்லுயிர்ச்சூழல் நிறைந்த வெப்பமண்டல மழைக்காட்டைப் பாதுகாக்க வேண்டும்.