Published:Updated:

`அந்த மரத்தை வெட்டி பஞ்சவர்ணக் கிளிகளைக் கொன்னுடாதீங்க!'- வனத்துறையிடம் பொதுமக்கள் கருணை மனு

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

பலகோடி மக்கள் வசிக்கும் இந்த நாட்டில், அழிவின் விழிம்பில் உள்ள அந்த பஞ்சவர்ணக் கிளிகளுக்கு இரண்டடி இடம் கூட இல்லையா!...

பஞ்சவர்ணக் கிளிக்காக மரத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்
பஞ்சவர்ணக் கிளிக்காக மரத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து கர்நாடக மாநில எல்லைப்பகுதியான கர்கேகண்டி வரையுள்ள மலைப்பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தச் சாலை விரிவாக்கத்துக்காக பர்கூர் மலைப்பகுதியில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட இருப்பது, அப்பகுதியிலுள்ள சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதற்கிடையே, அந்தியூர் செக்போஸ்டிலிருந்து பர்கூர் மலைக்குச் செல்லும் வழியில் 3-வது கிலோ மீட்டரில் உள்ள தனக்க மரம் ஒன்றில் ஐந்து ஜோடி பஞ்சவர்ணக் கிளிகள் வசித்துவருகின்றன. சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்படும் மரங்களின் லிஸ்டில் இந்த மரமும் இருக்கிறது.

பஞ்சவர்ணக் கிளிக்காக மரத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்
பஞ்சவர்ணக் கிளிக்காக மரத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்
ரமேஷ் கந்தசாமி

`இந்த மரத்தை வெட்டினால், அதிலுள்ள 10 பஞ்சவர்ணக் கிளிகளும் அதன் வாழிடத்தைத் தொலைத்துவிடுமே. எனவே, அந்த மரத்தை மட்டும் வெட்டாம அப்படியே விட்டுடுங்க. அந்தக் கிளிங்க உயிரோட இருக்கட்டும்!’ என அந்த மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்களும், பொதுமக்களும் வனத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கிளிகளைக் காப்பாற்ற வனத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பும் இயக்கத்தைத் தொடங்கியுள்ள பழங்குடி மக்களுக்கான சமூகச் செயற்பாட்டாளரும், சூழலியல் ஆர்வலருமான அன்புராஜிடம் பேசினோம்.

``சாலை விரிவாக்கத்துக்காக பர்கூர் மலையில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. அதில், 10 பஞ்சவர்ணக் கிளிகள் வசிக்கும் இந்த ஒரு தனக்க மரமும் அடங்கும். இந்த மரத்தை வெட்டாமலேயே அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய முடியும். ஒவ்வொரு பறவையும், விலங்குகளும் வனத்தில் தங்களுக்கென ஒரு எல்லைகளை வகுத்து வாழ்கின்றன. இந்த மரத்தை வெட்டினால், அந்தக் கிளிகள் வேறு இடத்துக்குச் சென்று வாழ முடியாமல் இறந்துபோக வாய்ப்பிருக்கிறது.

மரத்தில் வசிக்கும் பஞ்சவர்ணக்கிளிகள்
மரத்தில் வசிக்கும் பஞ்சவர்ணக்கிளிகள்
ரமேஷ் கந்தசாமி

மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த இந்த பஞ்சவர்ணக் கிளிகள், இப்போது குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றன. ஓர் உயிரினம் அழிந்துபோவது இச்சமூகத்தின் அவமானம் அல்லவா? இத்தனை கோடி பேர் வாழும் இந்நாட்டில் ஒரு இரண்டடி இடம்கூட இந்தக் கிளிகளுக்கு நம்மால் கொடுக்க முடியவில்லை. எனவே, இந்த 10 பஞ்சவர்ணக் கிளிகளைப் பாதுகாக்க அது வசிக்கும் அந்த ஒரு மரத்தையாவது வனத்துறை அதிகாரிகள் விட்டு வைக்க வேண்டும். இதுசம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பிவருகிறோம். இந்த மரத்தை வெட்ட முயன்றால் எங்களுடைய சக்திக்கு மீறி எதிர்த்து போராடுவோம்” என்றார்.

அதுங்க வாழட்டும் சார்...