Published:Updated:

கோயம்பேட்டில் ஹாயாகச் சுற்றும் பிளாஸ்டிக்... அப்படியென்றால் அந்தத் தடை?

சே. பாலாஜி

அதிகாலை 2 மணிக்கே இயங்கத் தொடங்கும் கோயம்பேடு காய்கறிச்சந்தை தோராயமாக ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் வியாபாரிகளை எதிர் கொள்கிறது.

பிளாஸ்டிக் கேரி பேகுகள்
பிளாஸ்டிக் கேரி பேகுகள் ( சே. பாலாஜி )

கடந்த ஜனவரி 1, 2019 அன்று தமிழக அரசால் பிளாஸ்டிக் தடை பிறப்பிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் வணிக வியாபாரிகள் அதைப் பொருட்டாகவே கருதவில்லை. அதிகாரிகள் அவ்வப்போது ரைடு வருவதை தெரிந்துகொண்டு அந்தச் சமயம் பிளாஸ்டிக் கவர்களை மறைத்து வைத்துவிட்டு பின்னர் மீண்டும் பயன்படுத்துகின்றனர். சில்லறை வியாபாரிகள்தாம் இப்படியென்றால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயம்பேடு காய்கறி சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல.

எங்களை ரெய்டு செய்து அபராதம் வசூலிக்கும் அரசுக்கு, மக்கள் தவறுகள் ஒருபோதும் புரிவதில்லை
கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி

அதிகாலை 2 மணிக்கே இயங்கத் தொடங்கும் கோயம்பேடு காய்கறிச்சந்தை தோராயமாக ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் வியாபாரிகளை எதிர்கொள்கிறது. இந்தக் காய்கறிச் சந்தையின் உச்சக்கட்ட வியாபாரமே அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணி வரைதான். இந்த இடைவேளையில்தான் நெகிழிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. காலை 10 மணிக்கு மேல் சென்று காய்கள் வாங்கச் சென்றால் பைகள் கட்டாயம். அவை இல்லாமல் காய்கறிகள் கிடைப்பதில்லை. சொல்லப்போனால் கோயம்பேட்டில் பிளாஸ்டிக் தடை என்பது அரசு அலுவலகம் போன்றுதான். காலை 10 மணிக்கு மேல்தான் அமலுக்கு வரும்.

இதைப் பற்றி அங்கே ஒரு வியாபாரியிடம் கேட்டபோது அவர் ``எங்களிடம் காய்கறிகள் வாங்க வரும் வியாபாரிகள் ஒரு போதும் பைகளைக் கொண்டு வருவதில்லை. பிளாஸ்டிக் கவர்கள் இல்லை என்றால் உடனே பொருள் வேண்டாம் எனக்கூறிவிட்டு வேறு கடைக்குச் செல்கின்றனர். நாங்களும் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவோம். ஆனால், வரும் எல்லாருமே பிளாஸ்டிக் கவர்கள் இல்லையென்பதால் போய் விடுகின்றனர். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை, அதனால்தான் நாங்களும் பயன்படுத்துகிறோம். எங்களை ரெய்டு செய்து அபராதம் வசூலிக்கும் அரசுக்கு மக்கள் தவறுகள் ஒருபோதும் புரிவதில்லை" எனக் குமுறுகிறார்.

Vikatan

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையைப் பொறுத்தவரையில் தண்ணீரில் வரைந்த ஓவியமே. மக்கள், தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டால் மட்டுமே நெகிழி ஒழிப்பு நடைமுறையில் சாத்தியமாகும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அப்படி இல்லையென்றால் நெகிழி ஒழிப்பு என்றுமே முழக்கமாக மட்டுமே இருக்கும்.