Published:Updated:

கோவையில் கொள்ளைபோகும் செம்மண்... செங்கல்சூளை அதிபர்களுடன் அ.தி.மு.க., தி.மு.க கூட்டணியா?

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

தமிழக அரசியலைப் பொறுத்தவரை காவிரி, முல்லைப் பெரியாறு, நீட் என்று மாநில உரிமைகளுக்காக ஓரணியில் நிற்காத இந்தப் பிரதான கட்சிகள், கோவை தடாகம் செம்மண் கொள்ளையில் ஓரணியில் நிற்கின்றன.

செம்மண் பூமி, பசுமைபோர்த்திய மேற்குத் தொடர்ச்சி மலை, வனவிலங்குகள், பழங்குடி மக்கள், கொங்குத் தமிழ் என்று கோவை ஆனைக்கட்டி, தடாகம் பள்ளத்தாக்கின் அழகைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். குடிசைத் தொழிலாக இருந்த செங்கல்சூளைகள், 90-களின் தொடக்கத்தில் அரசியல்வாதிகள் பார்வையில் சிக்கின.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

மூன்று அடிக்கு தோண்டப்பட வேண்டிய பூமி, பல நூறு அடிக்குத் தோண்டப்பட்டது. பட்டா பூமி, புறம்போக்கு நிலம், நீர்வழிப்பாதை, வனப்பகுதி என்று பாரபட்சம் பார்க்காமல் மண் எடுக்கப்பட்டது.

செங்கல்சூளைகள், செங்கல் தொழிற்சாலைகளாக மாறின. மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் களமிறக்கப்பட்டன. தினசரி லட்சக்கணக்கான செங்கற்களை உற்பத்தி செய்து, கோடிக்கணக்கான பணத்தை இந்தச் செங்கல் தொழிற்சாலைகள் வருவாயாகப் பெற்றுவருகின்றன. அதேநேரத்தில், இந்தப் பகுதியின் அழகு சிதைக்கப்பட்டது.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

விதிமீறல்களாலும், சூழல் மாசாலும் நோய்கள் அழையா விருந்தாளிகளாக வந்தன. யானைகளின் பாதைகள் அடைக்கப்பட்டன. மழை குறைந்தது. இப்போது நோய்களால் மனிதர்கள் உயிரிழந்தும், இடமாற்றமும் செய்யப்பட்டதுபோக சில யானைகள் மட்டுமே அங்கு மீதமிருக்கின்றன.

தடாகம் பகுதியில் மொத்தம் 204 செங்கல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், எந்த நிறுவனமும் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

மண் எடுப்பதற்காக 600 ட்ரக்குகள் வைத்திருக்கின்றனர். சராசரியாக ஒருநாளைக்கு, ஒரு ட்ரக்கில் 14 லோடு மண் எடுப்பார்கள். மொத்தம், ஒருநாளைக்கு 8,400 லோடு எடுப்பார்கள்.

சமயத்தில் இரண்டு டிரிப் அடிப்பார்கள். அப்படியெடுக்கும்போது, எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும். ஒரே எண்ணில் பத்து லாரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. செங்கல் தயாரிப்பதற்காக தரமற்ற ரசாயனங்கள், நிலக்கரிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

நச்சுப்புகை
நச்சுப்புகை

செங்கல்லை எரியூட்டும்போது, மாசு கலந்த புகை வெளியேறும். மக்கள், அந்த நச்சுக்காற்றைத்தான் சுவாசித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட மக்களும், நான்கு யானைகளும் உயிரிழந்துள்ளனர். இதை இப்படியேவிட்டால், ஆபத்து என்பதால் சில சமூக ஆர்வலர்கள் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஊடகங்களில் செம்மண் கொள்ளை என்கிற தலைப்பில் செய்தியாகி வெளியாகிவருகிறது.

தொழிலுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், செங்கல் தொழிற்சாலை அதிபர்கள், சமூக ஆர்வலர்களை வீடுதேடி மிரட்டினார்கள். கிராம சபையில் கலந்துகொண்டு இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் ஜோஷ்வா, மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்
தாக்கப்பட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்

இவ்வளவு நடந்தும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வும், எதிர்க்கட்சியான தி.மு.க-வும் இதுகுறித்து வாயே திறக்கவில்லை.

பொதுவாக, ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை எதிர்க்கட்சி அம்பலப்படுத்தும். எதிர்க்கட்சியின் தவறுகளை ஆளும்கட்சி பட்டியலிடும். இந்த இரண்டு கட்சிகளின் தவறுகளை, அடுத்த நிலையில் உள்ள கட்சிகள் வெளிக்கொண்டுவரும். இதுதான், அரசியல் கட்சிகளுக்கான எழுதப்படாத இலக்கணம்.

சமூக ஆர்வலர் ஜோஷ்வா
சமூக ஆர்வலர் ஜோஷ்வா

தமிழக அரசியலைப் பொறுத்தவரை காவிரி, முல்லைப் பெரியாறு, நீட் என்று மாநில உரிமைகளுக்காக ஓரணியில் நிற்காத இந்தப் பிரதான கட்சிகள், கோவை தடாகம் செம்மண் கொள்ளையில் ஓரணியில் நிற்கின்றன.

இதற்கான காரணத்தைத் தூசி தட்டினோம். கோவை மாவட்டச் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும் தர்மராஜ், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். அதேபோல, 24 வீரபாண்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயபால் (அ.தி.மு.க), பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன் (அ.தி.மு.க) ஆகியோருக்குச் சொந்தமாக செங்கல் தொழிற்சாலைகள் இருக்கின்றன.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

இப்படி, அ.தி.மு.க-வினரின் லிஸ்ட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி (அ.தி.மு.க), செங்கல்சூளைக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கிறார் என்று கூறப்படுகிறது.

அப்படியே எதிர்க்கட்சி பக்கம் வந்து பார்த்தால், முன்னாள் எம்.எல்.ஏ-வும், தி.மு.க கோவை வடக்கு மாவட்டச் செயலாளருமான சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை மாவட்டச் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவராக இருக்கிறார். இவர், செங்கல்சூளைக்கு எதிராகப் போராடுபவர்களின் வீட்டுக்கே சென்று மிரட்டியுள்ளார்.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

மேலும், `செங்கல் தொழில் காலம் காலமாக நடந்துவருகிறது. கொசுக்கள் அதிகமானதால்தான், யானைகள் ஊருக்குள் வருகின்றன' என்று அரிய கண்டுபிடிப்பைக் கூறியுள்ளார்.

இதனால், மற்ற விஷயங்களில் எதிரும் புதிருமாக இருந்தாலும் செம்மண் கொள்ளையை எதிர்ப்பதில் அ.தி.மு.க., தி.மு.க இருவருக்குமே உடன்பாடு இல்லை. சரி, அவர்களுக்குத்தான் கட்சி பெயரில் மட்டுமே மாற்றம், கொள்கையில் மாற்றம் இல்லை என்று விட்டாலும், கம்யூனிஸ்ட்களும் அ.தி.மு.க., தி.மு.க வழியில் வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, "மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்" என்று சொன்ன பி.ஆர்.நடராஜன், இப்போது எம்.பி-யான பிறகு, "இதில் சில நிறுவனங்கள் மட்டுமே அனுமதி வாங்காமல் இயங்கிவருகின்றன. அதற்காக, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அனைத்து நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு சிலர் செய்யும் தவற்றுக்காக, அனைத்து நிறுவனங்களையும் குற்றம்சாட்டி தொழிலையே முடக்கக் கூடாது.

பி.ஆர்.நடராஜன்
பி.ஆர்.நடராஜன்

இந்தச் செங்கல்சூளைகள்மூலம் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தமிழர்களுக்கு 60 சதவிகிதம், வட இந்தியர்களுக்கு 40 சதவிகிதம் என்ற அடிப்படையில் அங்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார். தற்போது பி.ஆர்.நடராஜனின் இந்தக் கருத்துதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பா.ம.க இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் அசோக் ஶ்ரீநிதி, ``எங்களது பசுமைத் தாயகம் அறக்கட்டளை மூலம் பல்வேறு சூழல் பிரச்னைகளைக் கையில் எடுத்து வருகிறோம். அந்த வகையில், கோவை செம்மண் கொள்ளைப் பிரச்னையை முதலில் கையில் எடுத்த அரசியல் கட்சி நாங்கள்தான். சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை தேவை என்ற எங்களது நிலையைத் தெளிவாகச் சொல்லியுள்ளோம். இதுகுறித்து பல அரசுத் துறைகளில் புகார் மனுவும் அளித்துள்ளோம்.

அசோக் ஶ்ரீநிதி
அசோக் ஶ்ரீநிதி

நல்ல நோக்கத்துக்காகப் புகார் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் மீது நடவடிக்கை கூடாது என்று சட்டமே சொல்கிறது. அப்படியிருந்தும், செம்மண் கொள்ளையை தட்டிக் கேட்பவர்களைத் தாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தச் செங்கல்சூளை நிறுவனங்களால், சூழலுக்குப் பாதிப்பு இல்லை என்று பி.ஆர்.நடராஜன் கூறுவது வேதனையளிக்கிறது. இந்தப் பிரச்னையைச் சட்டரீதியாக எடுத்துச்செல்ல உள்ளோம்" என்றார்.

நாம் தமிழர் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் சகாயம், ``முதலில் செவிவழி செய்தியாகத்தான் இதைக் கேட்டோம். அப்போது எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கள ஆய்வுசெய்து பார்த்தபோதுதான் பேரதிர்ச்சி அடைந்தோம். பிறந்த பூமிக்கு இவ்வளவு துரோகம் செய்ய முடியுமா என்று கண்ணீர் வடித்தோம். அந்தளவுக்கு இயற்கையைச் சீரழித்துள்ளனர். நாளை அங்கு பூகம்பம் வந்தாலுமே ஆச்சர்யப்படுவதற்கில்லை. செங்கல்சூளைகளில் இருந்து வெளிவரும் புகையால், மேகங்கள் கலைந்து அங்கு மழையே பெய்வதில்லை. அளவுக்கதிகமாக மண் எடுப்பதால், நீர்நிலைகளுக்குத் தண்ணீரும் செல்வதில்லை. மேலும், புற்றுநோய், காசநோய் என்று மக்களுக்கு ஏராளமான நோய்த் தொற்றுகளும் வருகின்றன.

சகாயம்
சகாயம்

நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று தெரியவில்லை. காவல் துறை இருக்கும்போதே, சமூக ஆர்வலர்களைத் தாக்குவதற்குச் செங்கல் அதிபர்களுக்கு யார் தைரியம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை? இன்னும் சில ஆண்டுகள் விட்டால், இந்தப் பகுதியை யாராலும் பாதுகாக்க முடியாது. செம்மண் கொள்ளைக்கு எதிராக எங்களது போராட்டத்தை வலுப்படுத்த உள்ளோம்" என்றார்.

செம்மண் அதிபர்களால் தாக்கப்பட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான நிர்வாகிகளிடம் கமல் போனில் நலம் விசாரித்துள்ளார். விரைவில், மக்கள் நீதி மய்யமும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கேக்கை வெட்டுவதுபோல நிலத்தை வெட்டுகிறார்கள்! - கோவையில் தொடரும் செம்மண் கொள்ளை

இதுகுறித்து தி.மு.க கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன், ``எங்களுக்கு எதிராக யாரோ திட்டமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். இதை யாரும் நம்பக் கூடாது.

சி.ஆர்.ராமச்சந்திரன்
சி.ஆர்.ராமச்சந்திரன்

மண்ணில்தான் செங்கல் செய்ய முடியும். பொய்ப் பிரசாரம் செய்பவர்களைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்” என்றார்.

கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, ``காலப்போக்கில் எல்லாம் மாறிவிடும். ஒரே நாளில் தொழிலை நிறுத்திவிட முடியாது.

ஆறுக்குட்டி
ஆறுக்குட்டி

செங்கல் அதிபர்களிடம் பணம் கேட்டு கொடுக்காததால், சமூக ஆர்வலர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்து வருகின்றனர். நான் யாரையும் மிரட்டவில்லை” என்றார்.

சர்ச்சை கருத்து குறித்து எம்.பி. பி.ஆர்.நடராஜனிடம் கேட்டதற்கு, ``அனுமதி பெறாத நிறுவனங்கள்மீது நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த நிறுவனங்களால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது" என்றவரிடம்... "அங்கு எந்த நிறுவனமும் அனுமதி பெறவில்லை என்று அரசே சொல்லியிருக்கிறது... மேலும், அங்கு மனித உழைப்பு குறைந்து, இயந்திரமயமாகி வருகிறது" என்று அழுத்திச் சொன்னபிறகு,

விதிமுறை மீறி அள்ளப்படும் செம்மண்!- தட்டிக்கேட்ட கமல் கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல்
பி.ஆர்.நடராஜன்
பி.ஆர்.நடராஜன்

`அப்படியா..?. தொழிலாளிகளுக்குப் பயனில்லாதவர்களுடன் நான் நிற்க மாட்டேன். அனுமதி வாங்கி இயங்குவதாக அவர்கள்தான் (செங்கல் தொழிற்சாலை அதிபர்கள்) சொன்னார்கள். அதனால்தான் அப்படிச் சொன்னேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு