Published:Updated:

கட்சிக்கொடி, காண்டம், காகிதம்.. குப்பைக்கூடாரமாகும் சென்னை ஏரிகள்!

போரூர் ஏரி
போரூர் ஏரி

சென்னையில் தொடங்கி கன்னியாகுமரிவரை, அரசு தன்னுடைய நீர் ஆதாரங்களைப் பராமரிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 'மற்ற மாநிலங்களிலிருந்து நீர் வந்து சேரவில்லை' எனச் சண்டை செய்வதற்கு முன்னர், நம் மாநில நீராதாரங்களைப் பாதுகாப்பதை அரசு தன்னுடைய கடமையாகக் கொள்ளல் வேண்டும்.

மனித வாழ்வு, நீர்நிலைகளின் அருகிலிருந்துதான் தொடங்கின, தொடங்கிவருகின்றன. அந்த நீர்நிலைகள் அழிவைநோக்கி நகரும்போது, மனித வாழ்வும் அழிவை நோக்கி வேகமாக நடைபோட ஆரம்பிக்கும். ஏனெனில், மனிதனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிர்களுக்கும் நீர்தான் ஆதாரமாக விளங்குகிறது. அப்படியான நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும், நிலத்தடி நீர் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டதாலும், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகத் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, சென்னை மக்கள் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கிராமங்களும் நகரங்களும் நீராதாரங்களை மையமாக வைத்தே உருவாகின. நீராதாரங்கள் இல்லாத இடங்களில் மக்களிடம் வளர்ச்சி ஏற்படாது.
தங்க.ஜெயராமன்

அதேநேரத்தில், மனிதன் இயற்கையின் மீதான தன்னுடைய சுரண்டல்களை நிகழ்த்தும்போதெல்லாம் அவ்வப்போது வெள்ளம், வறட்சி என்பதன் வாயிலாக எச்சரிக்கைகளை விடுத்துச்செல்கிறது, இயற்கை. தண்ணீர்ப் பஞ்சத்தால் சிக்கித்தவிக்கும்போதுதான் மீண்டும் இயற்கையை கவனத்தில் எடுத்துக்கொள்கிறான் மனிதன். இதுதான் உலக வரைமுறையாக இருக்கிறது.

‘காவிரி வெறும் நீரல்ல’ நூலை எழுதிய பேராசிரியர் தங்க.ஜெயராமன், சென்னையில் ஏற்பட்ட வறட்சி பற்றிக் குறிப்பிடும்போது, “கிராமங்களும் நகரங்களும் நீராதாரங்களை மையமாகவைத்தே உருவாகின. நீராதாரங்கள் இல்லாத இடங்களில் மக்களிடம் வளர்ச்சி ஏற்படாது. ஆனால், இப்போது நகரத்தின் வளர்ச்சிக்கேற்ப நீராதாரங்கள் வளர்கின்றனவா என்று பார்த்தால், அப்படி வளர்வதில்லை” என்றார்.

ஆம், நீராதாரங்கள் வளர்வதில்லை என்பது ஒருபுறமிருக்க... மறுபுறம், நீராதாரங்கள் சுருங்கத் தொடங்கிவிட்டன. “என்கிட்ட கிணறு வெட்டின ரசீது இருக்கு. வெட்டின கிணத்தைக் காணோம்” என நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறும். அது, வெறும் சிரித்துவிட்டு கடந்த செல்லக்கூடியவை மட்டுமல்ல... அதனுள் பல நிஜங்களும் மறைந்திருக்கத்தான் செய்கின்றன. தமிழகத்தில் கிணறு என்ன, சில கிளை நதிகளே காணாமல் போன வரலாறுகளும் அரங்கேறியிருக்கின்றன.

கூவம், கொசஸ்தலை, அடையாறு என மூன்று ஆறுகளின் நகரமாக சென்னை இருந்தாலும், இந்த மூன்றும் 'கூவம்' என்ற ஒற்றை வார்த்தையால்தான் பெரும்பாலானோரால் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான சென்னைவாசிகளுக்கு நதி என்பது சாக்கடை ஓடும் இடமாகத்தான் தெரியும். ஆனால், அவர்கள் சென்று பார்க்கவேண்டிய இடம் ஒன்று உள்ளது. அது, தமிழ்நாட்டிலேயே உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் தாமிரபரணி ஆறாகும். பெரும்பாலும், நீர் உருவாகும் இடம் சுத்தமாகவே இருக்கிறது. அதற்குக் காரணம், இயற்கை அவற்றை தூய்மையாக்கித் தருகிறது. ஆனால், ஆறுகள் மனிதர்களை நெருங்கிவந்த பிறகுதான் அவற்றின் நிலை மாறிவிடுகின்றன.

கூவம்
கூவம்
விகடன்

சென்னையில் உள்ள ஆறுகள் ஏறத்தாழ உயிரிழந்துவிட்ட நிலையில், சென்னை என்ற பெருமாநகரத்தின் குடிநீர்த் தேவைகள் பெரும்பாலும் ஏரிகளைச் சார்ந்தவையாகத்தான் உள்ளன. ஏரிகள் என்பது பெரும் நீராதாரம் மட்டுமல்லாது, பெரும் நீரழிவில் இருந்து காப்பவைகளாவும்தான் விளங்குகின்றன. ஆனால், அந்த ஏரிகள் இப்போது கேள்விக்குறியாக உள்ளன.

சென்னை மாநகரத்தின் தண்ணீர்த் தேவை அதிகரித்ததைத் தொடந்து, அரசு சிறு ஏரிகளிலிருந்தும் நீர் எடுக்க ஆரம்பித்தன. அதன்மூலம், போரூர் ஏரியில் நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை அரசு கையில் எடுத்தது. இந்தத் திட்டம், கடந்த 2017-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் கிடைக்ககூடிய தண்ணீர் கே.கே.நகர், வளசரவாக்கம் மற்றும் அந்தப் பகுதிகளைச் சுற்றி வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் கடந்த 180 நாள்களுக்கு மேலாகப் போதுமான மழைபெய்யாத நிலையில், தற்போது போரூர் ஏரி நீரின்றிக் காணப்படுகிறது. இது, குடிமராமத்துப் பணிகளுக்கான சரியான நேரம். இன்று நீரில்லை என்பதால் ஏரியைப் பராமரிக்காமல் விட்டுவிடுவது சரிதானா என்ற கேள்வி எழுகிறது.

போரூர் ஏரி
போரூர் ஏரி
விகடன்

அடுத்து செல்வதற்கு முன் எழுந்து நிற்கும் கேள்விகளில் ஒன்று, போரூர் ஏரியின் பரப்பளவு என்ன என்பதுதான். சில நேரங்களில், ஒரு கேள்விக்கு பல பதில்கள் இருப்பதுபோல, இதற்கான பதில்களும் நிறையக் கிடைத்தன. அந்தப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட சிலர், "முன்பு ஒருகாலத்தில் 800 ஏக்கருக்கு மேல் இருந்தது என்றும், 560 ஏக்கர்வரை நான் பார்த்துள்ளேன்" என்றும் ஆளுக்கொரு அளவுகளைச் சொல்கின்றனர். ஆனால் தற்போது, ஏரியின் கரை ஒருபுறம் முறைப்படி அமைக்கப்படாததால், அதன் முழுக் கரை எதுவரை என்ற கேள்விக்கான பதில்கள் இன்றும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது, பெரும்பாலானோரால் போரூர் ஏரி 300 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், அரசின் தரப்பில் ஏரியின் பரப்பளவுகுறித்து சொல்லப்படும் பதில், 240 ஏக்கர் என்பதுதான். இது, முன்னொரு காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் ஏரியின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கைவிடக் குறைவு.

காவிரியை நம்பி இருக்கும் டெல்டா பகுதி மக்களிடையே ஒரு பழக்கம் உண்டு. காவிரியில் தண்ணீர் வருவதற்கு முன்பு, குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டு, காவிரி நீர் திறந்துவிடப்படும் நாளில், தண்ணீரைத் தொழுது வரவேற்பார்கள். அப்படி, சென்னையில் இல்லாவிட்டாலும் ஏரிகள் தூர் வாரப்பட வேண்டும் என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. சென்னை மாநகரம் கடும் வறட்சியைச் சந்தித்துவரும் நிலையில், அடுத்து மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக ஏரிகளைச் சுத்தம்செய்து தூர் வார வேண்டும். ஆனால், தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளில் ஒன்றாக உள்ள போரூர் ஏரியின் நிலை பெரிய குப்பைக்கிடங்காகத்தான் உள்ளது.

போரூர் ஏரி பற்றிய ஆர்.டி.ஐ
போரூர் ஏரி பற்றிய ஆர்.டி.ஐ
விகடன்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம், 'போரூர் ஏரியைத் தூர் வார கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன' எனக் கடந்த ஆண்டு கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘2012-13-ம் ஆண்டில் ஏரியைத் தூர் வார 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஏரியைத் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஏரியின் கொள்ளளவு 63 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட்டதாகவும் அரசின் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது’. ஆனால், 'ஏரி இங்கிருக்கு. எங்கு போய்த் தூர் வாரினீர்கள்' என வாழைப்பழக் கதையாகக் கேட்கிறார்கள், அப்பகுதி மக்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு, ஏரிக்குக் கரை கட்டுகிறோம் எனச் சொல்லி அரசு, ஏரிக்கு நடுவே மணலைக் கொட்டியது. இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதால், பாதியிலேயே அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இன்னும் ஏரிக்கு நடுவே கொட்டப்பட்ட மணல் அகற்றப்படாமல்தான் உள்ளது. அதேபோல் முறையாகத் தூர் வாரப்படாததால், ஏரியின் நடுவே ஆங்காங்கே மணல் மேடுகள் குன்றுகள்போல காட்சியளிக்கின்றன. மனிதக் கழிவுகள், கட்சிகளின் பிளாஸ்டிக் கொடிகள், காண்டம்கள், துணிகள், வாகனங்களின் உதிரிப்பாகங்கள் உள்ளிட்டவற்றால் பொலிவிழந்து கிடக்கிறது, போரூர் ஏரி.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஏரியின் எல்லைகள் இன்னும் முறையாக வரையறுக்கப்படாததாக உள்ளது. ஏரியின் ஒருபுறம் மட்டும்தான் கரையமைக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி, ஆக்கிரமிப்புகளும் அவ்வப்போது அரங்கேறுவதாக குற்றம் சாட்டுகின்றனர், இந்தப் போரூர் ஏரியை மீட்டெடுப்பதற்காக இயங்கிவருபவர்கள். ஏற்கெனவே சுருங்கிவிட்ட ஏரியின்மீது, மேலும் வலுப்பெறும் ஆக்கிரமிப்புகள், சென்னையின் நீராதாரத்தைதான் கேள்விக்குறியாக்கும்.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தைச் சார்ந்த ஹாரீஸ் சுல்தானிடம் பேசினோம். "ஏரியின் ஒரு கரையிலிருந்து பார்த்தால், மற்றொரு கரை தெரிய வேண்டும். அதுதான் இயல்பான ஏரியின் கட்டமைப்பு. ஆனால் போரூர் ஏரியைப் பொறுத்தவரை, ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள முழுக் கரையையும் கட்டிவிட்டனர். மேற்குப் பகுதியில் எந்தவொரு உறுதியான அடையாளமும் இல்லாமல் உள்ளது. இது, ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆகையால், தண்ணீர் வரும் வழித்தடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் கரை கட்டலாம்.

போரூர் ஏரிக்கான தந்திக் கால்வாய் (தந்திக் கால்வாய் என்பது ஏரிக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய கால்வாய்) என்பது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வரக்கூடிய கால்வாயாகும். செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் வந்து சேரவேண்டிய கால்வாயில், கழிவுநீர்தான் வந்துகொண்டிருக்கிறது. இந்தக் கால்வாயைச் சுற்றி, குறைந்தது பத்து அடியாவது இடைவெளி இருந்தால்தான், இயந்திரங்களை இறக்கி, அவற்றைச் சுத்தம்செய்ய முடியும். அதற்கும் வாய்ப்பில்லாமல் உள்ளது. இதுதவிர, போரூர் ஏரிக்கு அருகில் சில குப்பைமேடுகளும் உள்ளன. இந்தச் சூழலில் மழைபெய்தது என்றால், இந்தக் குப்பைகளும் நீருடன் கலக்கத்தான் செய்யும். இதேசூழல் நீடிக்கும்பட்சத்தில், வருங்காலத்தில் மழை பெய்தும் உபயோகமற்றதாகத்தான் அமையும்” என்றார்.

இந்த நிலையில், போரூர் ஏரி என்பது ஓர் உதாரணம்தான். ஆனால், இதுபோல் மாநிலம் முழுவதும் உள்ள அதாவது, சென்னையில் தொடங்கி கன்னியாகுமரிவரை, அரசு தன்னுடைய நீராதாரங்களைப் பராமரிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 'மற்ற மாநிலங்களில் இருந்து நீர் வந்து சேரவில்லை' என சண்டை செய்வதற்கு முன்னர், நம் மாநில நீராதாரங்களைப் பாதுகாப்பதை அரசு தன்னுடைய கடமையாகக் கொள்ளல் வேண்டும்.

போரூர் ஏரி
போரூர் ஏரி

இதற்கிடையே, போரூர் ஏரிக்கு நடுவே தண்ணீரின்றிச் சில மீன்கள் இறந்துகிடந்தன. அதைப் பார்த்த நமக்கு, மேற்சொன்ன வரிகளே நினைவுக்கு வந்துசென்றன. மனித வாழ்வு நீர்நிலைகளின் அருகிலிருந்துதான் தொடங்கின, தொடங்கிவருகின்றன. அந்த நீர்நிலைகள் அழிவைநோக்கி நகரும்போது, மனித வாழ்வும் அழிவை நோக்கி வேகமாக நடைபோட ஆரம்பிக்கும். ஏனெனில், நீர்தான் ஆதாரம். மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உயிர்களுக்கும் நீர்தான் ஆதாரமாக விளங்குகிறது.

அடுத்த கட்டுரைக்கு