Published:Updated:

நியூட்ரினோ திட்டம்... இப்போதைய உண்மை நிலவரம் என்ன?

கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரப்படும் திட்டங்கள் சர்ச்சைகளையும் சிக்கல்களையும் சந்தித்துவருகின்றன.

பிரீமியம் ஸ்டோரி

ந்த வகையில் கூடங்குளம், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச் சாலை வரிசையில் நியூட்ரினோ திட்டமும் சேர்ந்துள்ளது. ஜூலை 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் நியூட்ரினோ தொடர்பான கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டார். இதற்குச் சூழலியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில்... ‘இந்தத் திட்டம் தமிழகத்துக்கே பெருமை’ என்று நியூட்ரினோ ஆதரவாளர்கள் கருத்துகளை முன்வைக்கிறார்கள். உண்மையில் இந்தத் திட்டத்தின் இப்போதைய நிலவரம் என்ன?

நாட்டிலேயே முதல்முறையாகத் தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் இரண்டு கி.மீ தூரத்துக்கு மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது; கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது என்றும் மத்திய அணுசக்தித் துறை விளக்கம் அளித்துள்ளது.

நியூட்ரினோ திட்டம்... இப்போதைய உண்மை நிலவரம் என்ன?

இதுபற்றிப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், ‘‘தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 28-ம் தேதி, கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. பொட்டிபுரம் கிராமத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் ஊர் மக்கள் மனு கொடுத்தனர். ஆனால், மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. உண்மையில் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு எப்போதோ அனுமதி கொடுத்துவிட்டது. அதைத்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். இதுபற்றிய வழக்கையும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறோம். இப்போதுவரை இந்தத் திட்டத்துக்குத் தடை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. தவிர இந்திய வனவிலங்கு வாரியம், தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி வாங்கிய பின்னர்தான் இந்தத் திட்டத்தைத் தொடர முடியும்” என்றார்.

வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், “உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம் முக்கியமானது. அதாவது, தமிழக அரசு தரப்பில், ‘தொழில்நுட்பரீதியிலான ஆராய்ச்சி செய்யாமல் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கொடுக்க மாட்டோம்’ என்று சொல்லப்பட்டது. மாநில அரசும் இன்னும் முழுமையாக நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை” என்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ‘மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி வாங்காமல் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது’ என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தடையாணை வாங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல வழக்குகளையும் சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறது, நியூட்ரினோ திட்டம். நாட்டுக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருந்தால், திட்டம் பற்றி எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லி இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை. இதுதவிர, இந்தத் திட்டம் மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும் திட்டம் என்றால், மற்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்துக்கு வேண்டும் என ஏன் உரிமை கோரவில்லை என்கிற சந்தேகமும் ஏற்படுகிறது.

சுந்தர்ராஜன், வெற்றிச்செல்வன், வெங்கடேஸ்வரன்
சுந்தர்ராஜன், வெற்றிச்செல்வன், வெங்கடேஸ்வரன்

இதுகுறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம். “தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கு முடிந்துவிட்டது. இந்தத் திட்டத்துக்கான அனுமதியை வழங்குவதற்கான உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அதனால், அனுமதி வழங்கியதைத் தவறு என்று சொல்ல முடியாது. இந்தத் திட்டம் அமையும் இடத்துக்கு ஐந்து கி.மீட்டர் தொலைவில் பறவைகள் சரணாலயம் இருப்பதால், இந்திய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னர் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். பறவைகள் சரணாலயம் தமிழகம் மற்றும் கேரளம் என இரண்டு மாநில எல்லைகளுக்குள் வருகிறது. அதனால் எந்த மாநிலத்திடம் கேட்கலாம் என்ற விவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. இந்திய வனவிலங்கு வாரியத்திடம் விண்ணப்பித்திருக்கிறார்கள். அனுமதி கிடைத்த பின்னர், தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி வாங்கி அதன் பின்புதான் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். இதுதான் நியூட்ரினோ திட்டத்தின் இப்போதைய நிலை” என்றார்.

தேசிய வனவிலங்கு வாரியம், தமிழக அரசு மாசுக் கட்டுப்பாடு வாரிய அனுமதிக்காகவும், மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது நியூட்ரினோ திட்டம். அதன் பின்பே முடிவுகள் தெரியவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு